Published:Updated:

மரபு சமையல் மூலம் அதானி கொண்டுவரும் திட்டத்தை எதிர்க்கும் பழவேற்காடு மீனவப் பெண்கள்! 

பழவேற்காடு
பழவேற்காடு

அதானி குழுமம் இங்கு துறைமுகத்தைக் கட்டி விட்டால் இதன் பல்லுயிரிய வளம் முழுவதுமாக அழிந்துவிடும். அந்த அபாயத்தை எதிர்கொள்ள பழவேற்காடு பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.

பிரச்னை

கடல், ஏரி, ஆறு ஆகிய மூன்றும் ஒன்று சேரும் இடம் பழவேற்காடு. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. பழவேற்காட்டைச் சுற்றியுள்ள கிராம மக்களின் முக்கியமான வாழ்வாதாரம் மீன் பிடித்தல்தான். மீனவக் குடும்பங்கள்தான் அங்கு பரவலாக வாழ்கின்றன. அவர்கள் நம்பியுள்ளது கடல் மற்றும் பழவேற்காடு ஏரியை மட்டும்தான். ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக அங்கு துறைமுகம் கட்ட, அதானி குழுமம் முயன்றுகொண்டிருக்கிறது. ஏற்கெனவே அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவுபடுத்தும் திட்டமாக இது கருதப்படுகிறது. இதற்காகப் பழவேற்காடு பகுதி மக்கள் கடலின் சில குறிப்பிட்ட இடங்களில் மீன்பிடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று தேசியக் கடலியல் அலுவலகத்திடம் அதானி குழுமம் கோரிக்கை வைத்துள்ளது.

மீனவர்கள்
மீனவர்கள்

திட்டமிட்டபடி இங்கு துறைமுகம் கட்டப்பட்டால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் எனச் சுற்றுசூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், ``துறைமுகம் கட்டப்பட்டால் முகத்துவாரம் முற்றிலுமாக அழிய நேரிடும். இதனால் கடல் நீரும் ஏரி நீரும் கலந்து ஏரி நீர் உப்பாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், பழவேற்காடு பகுதி உப்பு நீரால் சூழப்படும் அபாயமும் உள்ளது. அதானி குழுமம் இங்கு துறைமுகத்தைக் கட்டி விட்டால் இதன் பல்லுயிரிய வளம் முழுவதுமாக அழிந்துவிடும்" என்றார்.

எதிர்வினை

இந்த அபாயத்தை எதிர்கொள்ள பழவேற்காடு பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர். அதன் ஒரு செயல்பாடாக 23-ம் தேதி மீன் விருந்து நடந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள `Sea salt' எனும் ஹோட்டலைச் சேர்ந்தவர்கள் பழவேற்காட்டிற்குச் சென்றனர். பழவேற்காடு பகுதி மகளிர் குழு அவர்களுக்கு மீன் விருந்து ஏற்பாடு செய்திருந்தது. அன்றைய தினமே பிடிக்கப்பட்ட இறால் மீன்கள், நண்டுகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு சமைக்கப்பட்டு ஹோட்டல் நிர்வாகிகளுக்கும் அதன் பணியாளர்களும் விருந்தாக அளிக்கப்பட்டன. இந்த விருந்தில் இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் மீன்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன. இறால் ஊறுகாய், இறால் வடை, இறால் மிட்டா என விதவிதமான உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. உணவை உண்டு களித்த `sea salt' ஹோட்டல் நிர்வாகம் இந்தப் பாரம்பர்ய உணவு வகைகளை அவர்களது ஹோட்டலில் விற்பனை செய்ய முடிவு செய்தது.

நித்தியானந்த் ஜெயராமன்
நித்தியானந்த் ஜெயராமன்

`Sea salt' ஹோட்டல் இங்கு கிடைக்கும் மீன்களை சென்னைக்கு எடுத்துச்சென்று, அதைப் பழவேற்காடு பகுதி மக்கள் செய்த உணவு வகைகளைப் போலவே விற்பதற்கு முடிவு செய்தனர். இந்த ஹோட்டலில் மீனவர்கள் அன்றாடம் பிடிக்கும் சீசன் மீன்களை மட்டுமே வாங்குகிறார்கள்‌. அதன் மூலம் சமைக்கப்பட்ட உணவு வகைகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு நாளில் பிடிக்கப்பட்ட மீன் அன்றைக்கே சமைக்கப்பட்டு விற்கப்படும்.

அடுத்த நாளுக்கு அந்த மீன்களை இவர்கள் பயன்படுத்துவதில்லை. இதை, மீன் விருந்து மூலம் தெரிந்துகொண்டதும், பழவேற்காடு பகுதி மீன்களில் சமைக்கப்பட்ட உணவு வகைகளை ஜனவரி 31 பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த ஹோட்டலில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

பழவேற்காடு சமையல்
பழவேற்காடு சமையல்

ஹோட்டல் நிர்வாகிகள் `இந்த உணவு பழவேற்காடு மீன்கள் மூலம் சமைக்கப்பட்டவை' என்று விளம்பரம் செய்ய உள்ளனர். இதனால் அந்த ஹோட்டலுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுக்குப் பழவேற்காடு பகுதி பிரச்னையை எடுத்துக் கூறலாம். அதோடு, இவ்வளவு ருசியான மீன்கள் துறைமுகம் கட்டப்படுவதால் அழிய நேரிடும் என்ற செய்தியைப் பரவலாக்க முயல்கின்றனர் பழவேற்காடு பகுதி மீனவ மக்கள். இவை மட்டுமன்றி, கூடுதல் பலனாக மீனவ மக்கள் நேரடியாக மீன்களை இந்த ஹோட்டலுக்கு வழங்குவதால் இடைத்தரகர் இல்லாது விற்பனை நடக்கிறது. இதனால் பழவேற்காடு பகுதி மக்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், வருகிற பிப்ரவரி 16 ஆம் தேதி சென்னை கலைத்தெருவிழா பழவேற்காட்டில் நடைபெற உள்ளது. அந்த விழாவில், பழவேற்காடு பகுதி பிரச்னை, அதானி துறைமுகம், முகத்துவாரத்தைச் சரி செய்யக் கோரிக்கை போன்ற பல்வேறு பிரச்னைகளை நாடகங்கள், கும்மிப்பாட்டு போன்ற கலைவடிவங்கள் மூலமாக மக்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீனவப் பெண்கள்
மீனவப் பெண்கள்

மக்களுடைய வாழ்வாதாரங்களில் வாழ்வியலில் பல்வேறு வரலாறுகளும் கலாசாரப் பதிவுகளும் மட்டும் புதைந்து கிடக்கவில்லை. அதில், அவர்களின் உரிமைகளும் பொதிந்துகிடக்கின்றன. யாரேனும் அதைச் சிதைக்கும் வகையில், அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கும் வகையில் நடந்துகொண்டால் மக்கள் பொறுக்க மாட்டார்கள். அவர்களுடைய வாழ்வியலின் வழியாகவே புதிய புதிய போராட்ட வியூகங்களைக் கையாள்வார்கள். அப்படிப் புதியதொரு போராட்ட வகைதான் இந்தப் பாரம்பர்ய மீன் விருந்து. இது, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, அது அழியும் தறுவாயில் இருக்கும் ஆபத்தையும் எடுத்துக் கூறுகிறது.

ஆம், இது ஒரு போராட்ட யுக்திதான். தங்களுக்கு நேரும் ஆபத்து, நாளை யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம் என்பதை எச்சரிக்கும் ஒரு விழிப்புணர்வு கலந்த வியூகம்.

அடுத்த கட்டுரைக்கு