Published:Updated:

இங்கு சுத்தமான காற்று விற்கப்படும்... விலை அதிகமில்லையாம்..! வாங்குவீர்களா?

30 ஆண்டுகளுக்கு முன், இதேபோல் நீர் விற்கப்படும்போது நாம் அதிர்ச்சியடைந்தோம். பின்னர், விமர்சித்தோம். காலப்போக்கில் பழகிக்கொண்டோம். இன்று, சுத்தமான காற்றுக்கும் அதேநிலை ஏற்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு ( Pixabay )

2015-ம் ஆண்டின் ஒரு நாளில்... மோசஸ் லாம், டிராய் பாக்வெட் என்ற இரண்டு இளைஞர்கள், ஜிப் வைத்த பை ஒன்றுக்குள் சுத்தமான காற்றை அடைத்து, ஈபே-யில் விற்பனைக்குப் பதிவேற்றினார்கள். அவர்கள் நிர்ணயித்த 99 சென்டுகள் கனடிய பணத்திற்கே அது விற்பனையானது. ஏதோ விளையாட்டாகச் செய்த ஒன்று, விரைவில் வியாபாரமாக மாறியது இந்த இடத்தில்தான். இருவரும், மேலும் சில பைகளில் காற்றை அடைத்து இணையத்தில் பதிவேற்றினார்கள். அவையும் விற்பனையாகின. அவர்கள் வாழும் ஆல்பர்ட்டாவிலிருக்கும் பேன்ஃப் என்ற பகுதியிலிருந்து சுத்தமான காற்றைச் சேகரித்து, மிகவும் நெருக்கடியான, நிரம்பி வழியும் கார்களால் அடிக்கடி பற்றியெறியும் காட்டுத்தீயால், மாசடைந்திருக்கும் காற்று நிறைந்த லாஸ் ஏஞ்சல்ஸிற்கு அவர்கள் விட்டாலிட்டி ஏர் (Vitality Air) என்ற பெயரில் சுத்தமான காற்றை விற்றுக்கொண்டிருந்தார்கள்.

புகைமூட்டம்
புகைமூட்டம்
Pixabay

ஜூன் 2015-ம் ஆண்டு தொடக்கத்தில், விட்டாலிட்டி ஏர் தன் முதல் காற்றுப் புட்டியை விற்பனை செய்தது. அடுத்த சில மாதங்களில், அவர்களுக்கு சீனாவிலிருந்து 5,000 கேன்கள் வேண்டுமென்று ஆர்டர் வந்தது. அதற்கு அடுத்ததாக, புது டெல்லியிலிருந்தும் அதேபோன்ற ஆர்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கின. அதைத் தொடர்ந்து வியட்நாம், கொரியா, ஈரான், கிரேக்கம், மெக்சிகோ என்று பல்வேறு நாடுகளில் பேசி, அங்கும் விற்பனையைத் தொடங்கினார்கள். தங்கள் வியாபாரத்தை விரிவாக்க, புதிய திட்டத்தைத் தீட்டினார்கள். உலகின் மாசடைந்த நகரங்களைக் குறிவைத்து செயல்படத் தொடங்கினார்கள். மாசுபாட்ட காற்றைச் சுவாசித்து, 200 மீட்டர்கூட நடக்கமுடியாத நிலையிலிருக்கும் நகரங்கள், அவர்களுடைய வலையில் விழுந்தன. இப்போது அவர்கள், பணக்காரர்களுக்கான காற்று, குளிர்ச்சியான காற்று, மலைக் காற்று, புதிதாகத் தாய்மை அடைந்த பெண்களுக்கான காற்று, வேலை நேரத்திற்கான காற்று, குழந்தைகளுக்கான காற்று, முதியவர்களுக்கான காற்று என்று பல்வகைக் காற்றை விற்பனைசெய்கிறார்கள்.

2014-ம் ஆண்டிற்கு முன்பு வரை, சுத்தமான காற்றை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு ஏற்றுமதிசெய்வார்கள் என்று யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். 1987-ம் ஆண்டு, ஸ்பூஃப் ஸ்பேஸ்பால்ஸ் என்ற அறிவியல் புனைகதையில், ஓர் ஏலியன் இனம் தங்கள் கிரகத்தில் சுத்தமான காற்று கிடைக்காமல் போனதால், அவர்களுக்குப் பக்கத்திலிருக்கும் கிரகத்தின் காற்றைத் திருட முயற்சி செய்யும். அதில் ஒரு ஏலியன், புட்டியிலிருந்து சுத்தமான காற்றைச் சுவாசிப்பதுபோல் காட்சி எழுதப்பட்டிருக்கும். அப்போது, மெல் புரூக்ஸ் எழுதிய அந்தக் கதையில் வரும் புட்டியிலிருந்து காற்றைச் சுவாசிக்கும் ஏலியன்களாக, இப்போது நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்.

காற்று விற்பனைக்கு...
காற்று விற்பனைக்கு...

மூன்று லிட்டர் மற்றும் எட்டு லிட்டர் புட்டிகளில், முறையே 1,450 மற்றும் 2,800 ரூபாய்க்கு காற்றை இந்தியாவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கனடாவின் சுத்தமான காற்றுக்கு இந்தியாவில் பெரிய சந்தை கிடைக்கும். 2016-ம் ஆண்டு, 100 புட்டிகளைச் சோதனை விற்பனைக்காகக் கொண்டுவந்த விட்டாலிட்டி ஏர் நிறுவனம், இப்போது ஆயிரக்கணக்கான காற்றுப் புட்டிகளை நாட்டின் மாசடைந்த நகரங்களில் விற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனம் மட்டுமில்லை... நாம் அதிகமாக்கிவிட்ட மாசுபாடு, நம் சுத்தமான காற்றை நம்மிடமிருந்து திருடிக் கொண்டிருக்கிறது. அதைத் தங்களுக்கு சாதமாக்கிக்கொள்ளும் நிறுவனங்கள், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்கவே சுத்தமான காற்றை வியாபாரமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சராசரியாக 8 லிட்டர் சுத்தமான காற்றுக்கு 550 ரூபாய் முதல் 2,800 ரூபாய் வரை செலவாகிறது. மனிதர்கள், சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 7 முதல் 8 லிட்டர்கள் வரை காற்றைச் சுவாசிக்கிறோம். ஆகவே, ஒரு நாளைக்கு சுமார் 11,000 லிட்டர்களைச் சுவாசிக்கிறோம். ஒரு நிமிடத்திற்கு சுத்தமான காற்றைச் சுவாசிக்க நாம் குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவு செய்ய வேண்டுமென்றால், ஏழைகளுக்கு சுத்தமான காற்று என்பது வாழ்நாள் கனவாகவே சென்றுவிடும். ஆகவே, அது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சொந்தமான ஓர் ஆடம்பரப் பொருளாக மாறும்.

டெல்லியில், பல்வேறு உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள், சினிமா திரையரங்குகள் என்று தலைநகரத்தின் முக்கிய இடங்களில் இப்போது இந்தக் காற்றுப் புட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் வாழ்வதற்குத் தேவையான தூய்மையான காற்றைக்கூட ஆடம்பரப் பொருளாக மாற்றுவதைத்தான் மாசுபாட்டைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நாம் செய்துகொண்டிருக்கிறோம்.

இந்தியாவிலேயே செயல்படக்கூடிய பியூர் ஹிமாலயன் ஏர் என்ற நிறுவனம், உத்தரகாண்ட்டின் கமோலி மலைகளிலிருந்து நேரடியாகக் காற்றைப் புட்டியிலடைத்து நாடு முழுவதும் விற்பனை செய்கிறார்கள். "எங்கள் புட்டிக் காற்று, ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் அனைத்தையும் தேவையான அளவில் இயற்கையாக ஒருங்கிணைத்துவைத்திருக்கும் இடத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது" என்று அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள்.

10 லிட்டர் புட்டிக் காற்றின் விலை, 550 ரூபாய். அதை 160 முறை நாம் சுவாசிக்கலாம். காற்று வியாபாரம், விட்டாலிட்டி ஏர், பியூர் ஹிமாலயன் ஏர் ஆகிய இரண்டு நிறுவனங்களோடு நிற்கவில்லை. ஆஸ்திரேலியாவில் செயல்படுகின்ற ஆஸ்ஸேர் என்ற நிறுவனம், மாசுபாடற்ற காற்றுப் புட்டிகளில் ஆஸ்திரேலியக் காற்றை விற்பனை செய்கிறது. அதன் போட்டி நிறுவனங்களைப் போலவே, அதன் காற்றும் இணையத்தில் விற்பனைக்குள்ளன. ஆஸ்திரேலிய நிறுவனமான ஆஸ்ஸேர், இந்தியாவில் 7.5 லிட்டர் சுத்தமான காற்றை 1,500 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய 15 லிட்டர் காற்றுப் புட்டிகள் 2,352 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

Oxygen Bar, Delhi
Oxygen Bar, Delhi

நச்சுப் புகையால் சூழப்பட்ட டெல்லி, சுத்தமான காற்றுக்காகத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. வெளியே செல்லவேண்டுமென்றால், அடர்த்தியான புகைமூட்டத்திற்குள் காலடி எடுத்துவைக்க வேண்டும். இந்தச் சூழலில், பல்வேறு உணவு விடுதிகள், நட்சத்திர விடுதிகள், சினிமா திரையரங்குகள் என்று தலைநகரத்தின் முக்கிய இடங்களில், இப்போது இந்தக் காற்றுப் புட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நிலைமை இதோடு நிற்கவில்லை. ஆக்ஸிஜன் 'பார்'களும் டெல்லியில் செயல்படத் தொடங்கிவிட்டன. நாளொன்றுக்கு இப்போது குறைந்தபட்சம் 30 வாடிக்கையாளர்கள் வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆக்ஸிபியூர் என்ற பெயரில் செயல்படும் இந்தக் 'காற்றுக் கடைகள்' மக்கள் அங்கு சுவாசிக்கும் கால அவகாசத்தைப் பொறுத்து சுத்தமான காற்றை வழங்கி, காசு வசூலிக்கிறார்கள். கேன்களில் காற்றை நிரப்பிக் கையில் எடுத்துச்செல்லும் வகையிலும் விற்கிறார்கள்.

சுத்தமான காற்று அனைவருக்குமான அடிப்படை உரிமை. நம் புறக்கணிப்பு, நம் அக்கறையின்மை நம்மைக் காசு கொடுத்து காற்று வாங்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது. தினசரி புட்டி நீர் வாங்குவதைப்போல், தினசரி காற்றுப் புட்டிகளை வாங்கவேண்டிய நிலைக்கு நம் அரசுகள் நம்மைத் தள்ளும் சூழல் விரைவில் ஏற்படும்.

ஆம், காற்று விற்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் விற்கப்படுகிறது. சுவாசிக்கும் காற்றும்கூட ஆடம்பரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நீரைப் போலவே, காற்றும் இலவசமானது. முப்பது ஆண்டுகளுக்கு முன், இதேபோல் நீர் விற்கப்படும்போது நாம் அதிர்ச்சியடைந்தோம். பின்னர், விமர்சித்தோம். காலப்போக்கில் பழகிக்கொண்டோம். இன்று, சுத்தமான காற்றுக்கும் அதேநிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லி மாசுபாடு
டெல்லி மாசுபாடு
Pixabay

இன்று, 500 ரூபாய்க்கு விற்கும் 10 லிட்டர் காற்றுப் புட்டிகளின் விலை எதிர்காலத்தில் குறையலாம். அனைத்துத் தட்டு மக்களும் சுத்தமான காற்றை சுவாசிக்கும் வகையில் நாங்கள் விலையைக் குறைக்கிறோம் என்று பெருநிறுவனங்கள் பெரிய மனதோடு இறங்கிவரலாம். ஆனால் இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி, நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சுத்தமான காற்று நம் அடிப்படை உரிமை. அதை யாராலும் விலை பேசமுடியாது.