Published:Updated:

`15 நாள் கெடு; ரூ.6.75 கோடி அபராதம்!’ -ராணிப்பேட்டை சப்-கலெக்டரால் கதிகலங்கிய தொழிற்சாலைகள்

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகரை மாசுபடுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்த 29 தொழிற்சாலைகளுக்கு, ரூ.6.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பகுதியில் உள்ள `திருமலை கெமிக்கல்ஸ்’ நிறுவனம் கடந்தாண்டு செப்டம்பர் 23-ம் தேதி இரவு 7 மணியளவில், சுத்திகரிக்கப்படாத நச்சுக் கழிவுநீரைத் திறந்துவிட்டதாகப் பொதுமக்கள் புகார் கூறினர்.

ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு ரசாயன மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராணிப்பேட்டை நகரம்
ராணிப்பேட்டை நகரம்

பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 133, 142 ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அபாயகரமான ரசாயனக் கழிவுநீரால் காரை மற்றும் புளியங்கண்ணு ஏரிகளும் பாலாற்றுப் படுகையும் மாசுபட்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டன.

நீராதாரங்களில் தொழிற்சாலை கழிவுநீரைக் கலந்த குற்றத்துக்காகத் திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.18,06,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டையை மாசுபடுத்தி வரும் தொழிற்சாலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளக் கடந்தாண்டு நவம்பர் 14-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குப் பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

29 தொழிற்சாலைகளும் ரூ.6.75 கோடி அபராதத் தொகையை 15 நாள்களுக்குள் செலுத்த வேண்டும்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்

அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், சிப்காட் வளாகத்தில் உள்ள திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம், மல்லாடி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 2 தொழிற்சாலைகள், அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ் நிறுவனம், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் 2 மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய 6 பெரிய நிறுவனங்களும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்து ஏற்படுத்திவருவது கண்டறியப்பட்டது.

Vikatan

அந்த 6 நிறுவனங்களுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர சிப்காட் வளாகத்தில் உள்ள மேலும் 23 சிறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கும் ரூ.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 29 தொழிற்சாலைகளும் மொத்தம் ரூ.6.75 கோடி அபராதத் தொகையை 15 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத்
ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத்

தொழிற்சாலை மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறியவும் நிபுணர் குழு ஒன்றை அமைத்து இழப்பீடுகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத்தின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு குவிந்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு