Published:Updated:

`சென்னையின் வெள்ள அபாயம் இன்னும் நீங்கவில்லை!' - தமிழக அரசின் அறிக்கை சொல்லும் உண்மை

சென்னைக்கு வெள்ளம் புதிதல்ல. 1943, 1976, 1985, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் பெருவெள்ளச் சேதங்களுக்கு இந்தப் பெருநகரம் உள்ளாகியுள்ளது. எதிர்காலத்தில் பெருவெள்ளங்களை எப்படி தடுக்கப்போகிறது அரசு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலத்தின்போது, மழைநீர் வடிவதற்கான வசதிகள் இன்றி குடியிருப்புகளில் நீர் தேங்கியிருப்பது தொடர் பிரச்னையாகவே இருந்துவருகிறது. அதோடு, சென்னையின் கழிவுநீரோடு மழைநீர் கலந்து, சாலைகள் சாக்கடைகளாக மாறிவிடுவதும் தலைநகர்வாழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் ஒன்று. இதனால், பல நோய்த்தொற்றுகளுக்கும் மக்கள் ஆளாகிவருவது குறிப்பிடத்தக்கது.

சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரி
சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரி

இதுகுறித்து, கடந்த ஆண்டு மழைக்காலத்தின்போது வெளியான பல்வேறு பத்திரிகைச் செய்திகளை அடிப்படையாக வைத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தன்னிச்சையாக அதுகுறித்த வழக்கைப் பதிவு செய்து, தமிழ்நாடு அரசு, சென்னை மெட்ரோ குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்தது. இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை, சென்னையின் வெள்ள மேலாண்மை கட்டமைப்பு, இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான, குறுகிய கால மற்றும் நீண்டகாலத் தீர்வுகளாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய அறிக்கையை தமிழ்நாடு அரசு சார்பிலான கமிட்டி பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.

மழைநீர் வடிவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள கால்வாய், ஏரி ஆகிய நீர்நிலைகளைத் தூர்வாருதல் என்று ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை அமைப்பு சென்னைக்குத் தேவை என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2015-க்குப் பிறகு பல நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை மட்டுமே சென்னையைக் காக்க போதாது என்பதை உணர்த்துகிறது இந்த அறிக்கை.

மேலும், சென்னையின் நீர்நிலைகள், நதிகளைச் சுற்றியுள்ள வெள்ள வடிகால் நிலங்களின் நிலைமை இப்போது என்ன என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``எண்ணூர் கழிவெளி, கூவம் கழிமுகப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவு நிலங்கள், அடையாறு கழிமுகப் பகுதி, பள்ளிக்கரணை சதுப்புநிலம், முட்டுக்காடு கழிவெளி ஆகியவை, சென்னையின் வெள்ள நீரை உறிஞ்சிக் கொள்ளும் முக்கியப் பகுதிகள். இவற்றின் பெரும்பகுதி இன்று பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

அடையாறு
அடையாறு

வருவாய்த் துறையின் நிலப் பதிவேடுகளின்படி, இவற்றின் நீர்பிடிப்புப் பகுதிகள், கீழ்நிலை நீரோட்டப் பகுதிகள், வறண்ட பட்டா நிலங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை தற்போது, தனியார்களால் சொந்தம் கொண்டாடப்படுவதோடு, விரைவான நகரமயமாக்கலும் நடைபெற்று, குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களாக மாறிவிட்டன. இவை நடைபெறும்போது, போதுமான அளவுக்கு வடிகால் வசதிகள் பற்றியோ வெள்ள உபரிநீரைப் பிடித்து வைப்பதற்கான குளங்கள், ஏரிகள் பற்றியோ திட்டமிடவில்லை.

இந்நிலையில், சென்னை பெருநகரத்தின் ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை அமைப்பை உருவாக்கி, நிரந்தரமாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டியது அவசியமாகிறது" என்று கூறியதோடு, அதற்கு முதல்கட்டமாகச் செய்ய வேண்டியவற்றையும் குறிப்பிட்டுள்ளது. அவை,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • பெருநகரத்தின் சாலை மற்றும் தெருவோர வெள்ளநீர் வடிகால் வசதிகளை ஒருங்கிணைந்த வகையில் கட்டமைக்க வேண்டும்.

  • நதிகளின் வடிகால் நிலங்களில் அற்றுப் போயிருக்கும் நீரோட்டப் பாதையின் தொடர்புகளைப் புதுப்பிக்க, கால்வாய்களை அமைக்க வேண்டும்.

  • நதிகள் உட்பட அனைத்து நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.

  • குளங்கள், கால்வாய்களுக்கு இடையே அற்றுப் போயிருக்கும் இணைப்புகளைப் புதுப்பிக்கும் வகையில் பெரியளவிலான வெள்ளநீர் வடிகால்களை அமைக்க வேண்டும்.

சென்னை மழை
சென்னை மழை
வி.ஶ்ரீனிவாசுலு
Vikatan

இதுவரையிலான, குறைபாடு நிறைந்த வடிகால் அமைப்பு, இயற்கையான நீரோட்டத்தைத் தடை செய்தது, வெள்ள வடிகால் பகுதிகளைப் பட்டா நிலங்களாக மாற்றி ஆக்கிரமித்தது ஆகியவையே ஒவ்வோர் ஆண்டும் மாநில தலைநகரத்தை வெள்ளச் சேதங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உரிய நடவடிக்கைகளை இப்போதே எடுக்கவில்லையெனில், மீண்டும் 2015-ம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்றதொரு வெள்ளம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறது.

அறிக்கைப்படி, தென் சென்னையிலுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைச் சுற்றியிருந்த 32 நீர்ப்பாசன குளங்கள், இப்போது குப்பைக் கிடங்காகவும் சாக்கடைகளாகவும் மாறி நிற்கின்றன. இதனால், இந்தப் பகுதியில் வெள்ளநீர் வடிவதற்குரிய இயல்பான வசதிகள் முற்றிலும் அற்றுப் போய்விட்டன. மேலும், இதனால் நிலம் நீரை உறிஞ்சும் தன்மையை இழந்துவிட்டதால், நிலத்தடி நீர் மீள்நிரப்பு செயல்முறைகளும் நடப்பதில்லை. தென்சென்னையில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, இதைச் சரிசெய்ய வேண்டியது அவசியம்.

மேலும், தணிகாசலம் கால்வாயில் வெள்ளநீர் வடிவதற்குரிய வசதிகளைச் செய்ய, 5.25 கிலோமீட்டர் நீளத்துக்கு 22,94 கோடி ரூபாய் செலவில் வெள்ள வடிகால் அமைப்பை உருவாக்குவதற்கு சென்னை பெருநகர நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் அதைச் செய்து முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. மேலும், பாபா நகர் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை வருகிற அக்டோபர் 31-ம் தேதிக்குள் அகற்றி, அங்கு வெள்ள வடிகால் அமைப்பு உருவாக்கப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்துப் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், ``மழைநீர் கால்வாய்கள் இல்லாத இடங்களில் அதை உருவாக்கி, அருகிலிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு போன்றவற்றுக்கான பெரிய இணைப்புக் கால்வாய்களோடு இணைப்பதாகச் சொல்லியுள்ளார்கள். சிறிய அளவில், தெருக்கள், காலனிகளில் விழும் மழைநீரை வடிய வைக்கும் சிறு கால்வாய்களின் போதாமையைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதோடு, அப்படி இருப்பனவற்றுக்கும் ஒரு நகரம் முழுவதுக்குமான, அடையாறு, கூவம் போன்ற நதிகளோடு இணைக்கும் பெரிய கால்வாய்களோடு தொடர்பின்றி இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
காலநிலை மாற்றம்: ``இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!" - எச்சரிக்கும் IPCC அறிக்கை

ஆனால், அடையாறு, கொற்றலை, கூவம் ஆகிய மூன்றுக்குமான பெரிய கால்வாய்களின் நிலை என்ன என்பது பற்றி எதுவும் பேசவில்லை. அதிலும் கொற்றலை ஆறு பற்றி எதுவுமே இல்லை. சேறு போன்றவற்றால் அடைத்துக் கிடக்கும் நீர்நிலைகளைத் தூர்வாருவது, முகத்துவாரப் பிரச்னை பற்றிப் பேசவில்லை.

கூவம், அடையாறு, கோவளம் நதிப் படுகைகளைப் பற்றி மட்டுமே இந்த அறிக்கை பேசுகிறது. இந்த நதிகளின் பெரிய கால்வாய்களிலுள்ள ஆக்கிரமிப்புகள், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் எதைப் பற்றியும் தெளிவாகப் பேசவில்லை. அதோடு, அப்போதைய பிரச்னைகளுக்குக் காரணம் திட்டமிடல் இல்லாத வளர்ச்சி என்று சொன்னவர்கள், திட்டமிட்ட வளர்ச்சிக்கான பரிந்துரைகள் இல்லை. இந்த நகரம் இந்த ஆண்டின் மழை வெள்ளத்தைத் தாக்குப்பிடிப்பதற்கான திட்டம் தயார் நிலையில் இருக்கும் என்றும் சொல்லும் வகையில் இந்த அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. மேலும், நாளுக்கு நாள் கான்கிரீட்டுகள் வளர்கின்றன. அது வளர வளர, மேற்பரப்பு நீரோட்டம் அதிகரிக்கும். அப்படியிருக்கும்போது, அதற்கு ஏற்ற வகையில் எவ்வளவு மழைநீர் ஓடிவரும், அதைப் பிடிக்கும் அளவுக்கு மழைநீர் வடிகால் கட்டமைப்பு வேண்டுமெனில், என்ன அளவில் இருக்க வேண்டும் என்று எதையும் பேசவில்லை. ஆகவே இதன் அடிப்படையில், நகரம் பாதுகாப்பானதாக மாற்றமுடியாது" என்று கூறினார்.

இன்றைய தேதியில் சென்னையிலுள்ள பல்வேறு ஏரிகள் ஆகாயத் தாமரைகளால் சூழப்பட்டு, பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. கூவம் நதியை ஆக்கிரமித்து சுமார் 102 கடைகளும் வணிக வளாகங்களும் மேலும் சில தனியார் ஹோட்டல்களும் இருக்கின்றன.

சென்னைக்கு வெள்ளம் புதிதல்ல. 1943, 1976, 1985, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் பெருவெள்ளச் சேதங்களுக்கு பெருநகரம் உள்ளானது. இதில், 1976-ம் ஆண்டின்போது, கொற்றலை மற்றும் கூவம் நதியில் கரை உடைந்து, கரையோரத்திலிருந்த ஹவுசிங் போர்ட் காலனி முழுக்க வெள்ளத்தில் சூழப்பட்டது. 1985-ம் ஆண்டில், மூன்றே நாட்களில் 727 மிமீ அளவுக்கு மழை பெய்து, பெருவெள்ளத்தை ஏற்படுத்தியது. 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்கு, அதை நேரில் கண்டு அனுபவித்த நாமே சாட்சி. இப்படியாக, அதீத மழை பெய்வது சென்னைக்குப் புதிததல்ல. ஆனால், அதைச் சரியாகப் பிடித்து வைப்பது, வெள்ளநீர் மேலாண்மையில் ஈடுபட்டு, அது மக்களுக்கு வினையாக மாறாமல் நல்ல விதத்தில் பயன்படுத்தத் திட்டமிடுவதில் மாநில அரசு தொடர்ந்து தோற்றுக் கொண்டேயிருக்கிறது.

கூவம் ஆறு
கூவம் ஆறு
சென்னையின் வளர்ச்சிக்கு நடுவே வீழ்ந்த அடையாறு; ஒரு காலத்தில் எப்படி விளங்கியது தெரியுமா?

ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்களான எஸ்.வி.சிவராமன், எஸ்.தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், சென்னை முழுக்க 1,519 நீர்நிலைகள் இருப்பது தெரியவந்ததோடு, அதில் சுமார் 35 விழுக்காடு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. சென்னையின் ஆற்றுப்படுகை, ஆரணியாறு, கொற்றலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகிய நதிகளை உள்ளடக்கியது. சென்னை ஆற்றுப்படுகை மொத்தம் 7,282 சதுர கி.மீ பரப்பளவுடையது. அதில், 5,542 சதுர கி.மீ தமிழ்நாட்டிலும் மீதம் ஆந்திராவிலும் அமைந்துள்ளது.

இவற்றோடு ஆழமான உறவு கொண்டிருக்கும் சென்னை பெருநகரம், அதற்குள்ளேயே ஊடுருவிச் செல்லும் இரண்டு முக்கிய நதிகளைச் சாக்கடையாக்கி வைத்துள்ளது. சென்னையின் நீர் மேலாண்மை மேம்பட, வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க, வெள்ளநீர் வடிகால் மேலாண்மை மட்டுமே போதாது. பெருநகரத்தை ஊடுருவிச் செல்லும் நதிகளை மீட்டெடுக்க வேண்டும். அவற்றோடு தொடர்புகொண்டுள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி, முறையாகப் பராமரித்திட வேண்டும். இது தலைநகரை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதோடு, பல்லாண்டுக்காலமாகத் தொடர்ந்துவரும் நீர்த் தட்டுப்பாடு பிரச்னைக்கும் தீர்வாக அமையும். இவற்றையெல்லாம் அரசு விரைவாக செய்து முடிக்கும் வரை தலைநகரின் வெள்ள அபாயம் நீங்கப்போவதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு