Published:Updated:

"மாசில்லாத சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை!"- ஐநா அங்கீகாரத்தின் முக்கியத்துவம் என்ன?

உலக அளவில் ஒரு ஆண்டில் நடக்கும் மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 24.3% சூழல் சீர்கேடுகளால் நடக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்நிலையில்தான் இந்த முக்கிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது ஐநா மனித உரிமைகள் கவுன்சில்!

"சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலில் வாழ்வது என்பது ஒரு அடிப்படை மனித உரிமை" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. சென்ற வாரம் வெள்ளிக்கிழமையன்று (8 அக்டோபர் 2021) 'Right to healthy clean and safe environment; குறித்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கோஸ்டா ரிக்கா, மாலத்தீவு, மொராக்கோ, ஸ்லோவேனியா, ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் இந்தத் தீர்மானத்தை முன்னெடுத்திருக்கின்றன. 43 நாடுகள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததில் ஒருமனதாக இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், ரஷ்யா, சீனா ஆகிய நான்கு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. மனித உரிமை கவுன்சிலில் உறுப்பினராக இல்லாத அமெரிக்காவும் வாக்களிக்கவில்லை.

UN Human Rights Council
UN Human Rights Council

தீர்மானம் விவாதிக்கப்பட்டபோது பிரிட்டன் இதை விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு உலகெங்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக அக்டோபர் மாத இறுதியில் க்ளாஸ்கோவில் நடக்கவிருக்கும் சர்வதேச காலநிலை மாநாட்டை பிரிட்டன்தான் நடத்தப்போகிறது என்பதை சுட்டிக்காட்டிய சூழலியலாளர்கள், "ஒரு காலநிலை மாநாட்டை முன்னின்று நடத்தினால் மட்டும் போதாது, சர்வதேச அரங்குகளில் முக்கியமான நிலைப்பாடுகளும் எடுத்தால் மட்டுமே சூழல் பாதுகாப்புக்குப் பங்களிக்க முடியும்" என்று பிரிட்டனைக் கடுமையாக சாடினார்கள். அதனால்தானோ என்னவோ, இறுதிவரை எதிர்ப்பு தெரிவித்த பிரிட்டன், வாக்களிக்கும் நேரத்தில் தீர்மானத்துக்கு சாதகமாக வாக்களித்திருக்கிறது. காரணம் எதுவாயினும் சர்வதேச அரங்கில் செல்வாக்கு மிக்க பிரிட்டனின் வாக்கு ஒரு சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

1990-களிலிருந்தே இதுபற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்றாலும் ஆரோக்கியமான சுத்தமான சூழலுக்கான உரிமை இப்போதுதான் சர்வதேச அரங்கில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சட்டபூர்வமானது அல்ல, இந்தத் தீர்மானத்துக்குக் கட்டுப்படவேண்டும் என்று உறுப்பினர்களான நாடுகளைக் கட்டாயப்படுத்தவும் முடியாது. ஆனால் சட்டரீதியான அங்கீகாரத்திற்கும் அதையொட்டிய ஒப்பந்தங்களுக்கும் இதுவே முதல்படி. அந்த வகையில் பார்த்தால் சர்வதேச சூழல் பாதுகாப்பு வரலாற்றில் இது ஒரு முக்கியமான மைல்கல் எனலாம்.

உலக அளவில் ஒரு ஆண்டில் நடக்கும் மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 24.3% சூழல் சீர்கேடுகளால் நடக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படவிருக்கும் பேரிடர்கள் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துவருகிறார்கள். காலநிலை மாற்றத்தைப் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டிய விளிம்பில் மனித இனமே நின்றுகொண்டிருக்கும் இந்த சூழலில், சூழல் உரிமை பற்றிய இந்தத் தீர்மானம் முக்கியமானது.

Air Pollution (Representational Image)
Air Pollution (Representational Image)
"இந்த உரிமையை நிலைநாட்டுவதற்குத் தேவையான சட்டங்களையும் திட்ட வரைவுகளையும் உலக நாடுகள் உருவாக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். ஐ.நா பொதுச்சபையும் இதற்கான விவாதத்தை முன்னெடுத்து அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்."
என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 வாழ்வுரிமையை அங்கீகரிக்கிறது. சூழல் பிரச்சனைகளைப் பற்றிய பல வழக்குகளின்போது அந்தப் பிரிவுக்கான கூடுதல் விளக்கங்களை இந்திய உச்சநீதிமன்றம் தொடர்ந்து வழங்கிவந்திருக்கிறது. ஆரோக்கியமான சூழலில் வசிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமை என்று பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் உயர்நீதிமன்ற தீர்ப்புக் குறிப்புகளும் உறுதிப்படுத்தியிருக்கின்றன (RLEK v State of Uttar Pradesh 1988, M.C Mehta vs Union of India 1988, Subash Kumar vs State of Bihar 1991). ஆகவே அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 21ன் விளக்கங்கள், ஆரோக்கியமான சூழலில் வாழ்வது ஒரு இந்தியக் குடிமகனின் உரிமை என்று அங்கீகரிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியா உட்பட 155 நாடுகளில் அரசியலமைப்பு சட்டத்திலோ பிற சட்டங்களிலோ சூழல் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும் சர்வதேச அரங்கில் இந்த உரிமைக்கான அங்கீகாரம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு பல முக்கியக் காரணங்கள் உண்டு.

ஏற்கனவே இதை உரிமையாக அங்கீகரிக்காத நாடுகளும் இந்த உரிமையை ஏற்றுக்கொண்டு சட்டபூர்வமாக்குவதற்கான உந்துதலாக இந்தத் தீர்மானம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த மாற்றம் நடக்குமா என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் கவனித்துவருகிறார்கள்.

ஏற்கனவே இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் அதை சரியாக அமல்படுத்துவதற்கும் தேவைப்பட்டால் சட்ட திருத்தங்கள் கொண்டு வரவும் இந்தத் தீர்மானம் உத்வேகம் அளிக்கக்கூடும்.

காலநிலை மாற்றம் | Climate Change
காலநிலை மாற்றம் | Climate Change
Robert S. Donovan

ஆரோக்கியமான சூழல் ஒரு உரிமை என்று அங்கீகரிக்கப்படும்போது சுற்றுச்சூழலைக் குலைக்கும் திட்டங்களுக்கு எதிரான வலுவான வாதங்களை சமூக செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்கலாம். உதாரணமாக, காலநிலை மாற்றம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது என்று குறிப்பிட்ட டச்சு உயர்நீதிமன்றம், மக்களின் வாழ்வுரிமையைக் காக்கவேண்டுமானால் நெதர்லாந்து அரசு கரிம உமிழ்வுகளை உடனடியாகக் குறைக்கவேண்டும் என்று 2019ல் உத்தரவிட்டது. இது காலநிலை வரலாற்றிலேயே முக்கியமான தீர்ப்பாகக் கருதப்படுகிறது. தீர்ப்பிற்கு அடிப்படையாக நீதிபதிகள் வாழ்வுரிமை சட்டங்களையே சுட்டிக்காட்டினர்.

சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) சுற்றுச்சூழல் பற்றிய வழக்குகளின்போது இது முக்கிய விவாதப்புள்ளியாக இருக்கும். குறிப்பாக காலநிலை மாற்றம் போன்ற சர்வதேசப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளின்போது இது உதவும்.

"காலநிலை மாற்றம் என்பது பொய்!"- ட்ரம்ப் வாதத்துக்கு இயற்பியல் நோபல் பரிசு சொல்லும் பதில் என்ன?

வருங்காலத்தில் இது ஐ.நா பொதுச்சபையால் அங்கீகரிக்கப்படுவதற்கும் சுற்றுச்சூழலை சீர்குலைப்பது உரிமை மீறலாகவே கவனிக்கப்படுவதற்கும் இது ஒரு முதல்படியாக இருக்கும்.

UN
UN
Image by Edgar Winkler from Pixabay

பிரிட்டன் போன்ற செல்வாக்குள்ள நாடுகள் இதற்கு ஆதரவு தந்திருப்பது ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளால் ஏற்படும் சூழல் பாதிப்புகளும் கரிம உமிழ்வுகளும் ஒப்பீட்டளவில் அதிகம் எனும்போது, அந்த நாடுகள் இதுபோன்ற தீர்மானங்களுக்கு ஆதரவு தருவதால் அரசுகளுக்கு ஒரு கூடுதல் பொறுப்புணர்வு வரும்.

"அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டவும் அவரவருக்கான உரிமையை அனுபவிப்பதிலும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன" என்கிறார் ஐ.நா சபையின் மனித உரிமைகள் அதிகாரி மிஷல் பாசலெட். மனிதர்களின் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதற்கு ஆரோக்கியமான சூழல் அவசியம். இந்தத் தீர்மானத்தை சட்டபூர்வமாக்குவதற்கும் அமல்படுத்துவதற்கும் இன்னும் நாம் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும் என்றாலும் மனித இனத்துக்கான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான முதல் அடியை இந்தத் தீர்மானத்தின்மூலம் நாம் எடுத்துவைத்திருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு