Published:Updated:

ஆயுள் சிறையில் அழகிய மரங்கள்! - அலட்சியத்தால் ஊட்டியில் மரங்களுக்கு நேர்ந்த சோகம்

`வேலியே பயிரை மேய்ந்த கதையாய்' ஊட்டியில் மரங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட இரும்புக் கூண்டுகளே மரங்களின் குரல்வளையை நெரித்து வருகிறது.

மரம்
மரம்

காட்டை அழித்து ரோடு போட்டாலும் ரோட்டின் இருமருங்கிலும் சம்பிரதாயத்துக்காவது மரம் நடுவது நமது வழக்கத்தில் உள்ளது. எதற்காக மரங்களை நடவேண்டும், என்ன வகையான மரங்களை நடவேண்டும், அப்படி நட்ட மரங்கள் உயிர் பெற்றுள்ளனவா என்ற எந்த அக்கறையும் இல்லை. அதையும் தாண்டி அந்த மரங்கள் தானாக வளர்ந்தால் மீண்டும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அந்த மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படும். இதுவே இன்றைய யதார்த்த நிலை.

கம்பி வேலியால் பாதிக்கப்பட்ட மரம்
கம்பி வேலியால் பாதிக்கப்பட்ட மரம்

அந்த இடைப்பட்ட காலங்களில் நூற்றுக்கணக்கான ஆணிக் காயங்களுடன் விளம்பரங்களை தாங்கி நிற்கும் தூண்களாகவே மரங்கள் உள்ளன. சாலையோரங்களில் உள்ள மரங்களில் ஆணியடிப்பதற்கும், விளம்பரப் பலகைகள் வைப்பதற்கும், வெட்டுவதற்கும் தடை இருந்தாலும் யாரும் பின்பற்றுவதில்லை. ஒரு சில ஆர்வலர்கள் மட்டுமே இதற்காகப் போராடி வருகின்றனர். சோலையை அழித்து சாலைகள் போடப்பட்ட நீலகிரியில் சாலையோரங்களிலும் மரங்கள் நடப்படுகின்றன.

`ராட்சத மரங்கள்; டெண்டர் விட்டும் யாரும் வரல!' - விநோத சிக்கலில் ஊட்டி அரசு மருத்துவமனை

இப்படித்தான் ஊட்டி -குன்னூர் சாலையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அந்த மரக்கன்றுகளைப் பாதுகாக்க 5 அடி உயரம் ஒரு அடி அகலம் என்ற கணக்கில் இரும்புக் கூண்டுகளையும் வைத்தனர். ஆண்டுகள் பலவாயின. மரக்கன்றுகளும் வளர்ந்து பெரிய மரங்களாகின. ஆனால், கூண்டுகள் மட்டும் அகற்றவே இல்லை. இதனால் மரங்களுக்குள் இரும்புக் கம்பிகள் அழுத்திக்கொண்டு இருப்பதால் பல மரங்கள் வளரமுடியாமல் பட்டுப் போய்விட்டன, இன்னும் பல மரங்கள் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளன.

சாலையில் மரங்கள்
சாலையில் மரங்கள்

மரங்களின் இந்தப் பரிதாபநிலை குறித்து இயற்கை ஆர்வலர் ஊட்டி ஜனார்த்தனனிடம் பேசினோம். ``ஊட்டி - குன்னூர் சாலையில் பல இடங்களில் பைன், குப்ரஸஸ், போடோ கார்ப்பஸ் போன்ற வகை மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த மண்ணுக்குச் சம்பந்தமில்லாத அன்னிய மரங்களை நடவு செய்தனர். இவற்றின் பாதுகாப்புக்காக நடப்பட்ட இரும்புக் கூண்டுகளை அகற்றாமல் அலட்சியமாய் விட்டுவிட்டனர்.

மூடநம்பிக்கைகளால் அழியும் அரிய கருமந்திகள்... நீலகிரி வனத்துறையின் கவனத்துக்கு!

வேலிவியூ, மந்தாடா போன்ற பகுதிகளில் 20-க்கும் அதிகமான மரங்கள் பாதிப்படைந்துள்ளன. இதனால், தற்போது இந்த மரங்கள் அனைத்தும் இரும்புக் கூண்டுகளால் அறுக்கப்பட்டுவரும் நிலையில், முறிந்துவிழும் நிலையில் உள்ளன. விபத்து ஏற்படும் முன் இந்த மரங்களை அகற்றுவது ஒன்றே தீர்வாக உள்ளது. இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பு" என்றார்.

Tree
Tree

இதுகுறித்து ஊட்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``இந்த மரங்கள் அனைத்தும் 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டது. அப்போது இந்த மரங்களுக்கு அமைக்கப்பட்ட கூண்டுகள் அகற்றப்படாமல் விட்டுள்ளனர். இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த மரங்களை நேரில் சென்றுபார்த்து பாதிக்கப்பட்டுள்ளதா என பார்க்கிறோம். தற்போது நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வருகிறோம்" என்றனர்.