Published:Updated:

ரூ.500 கோடியில் பழனி - கொடைக்கானல் ரோப் கார் திட்டம்... சுற்றுலா மேம்படுமா, சூழல் அழியுமா?

கொடைக்கானல்

கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் யானைகள் பாதிப்புக்கு உள்ளாகும். வனவிலங்குகள் வாழிடங்களுக்கு மேல் ரோப் கார் செல்லப்போகிறது. அப்பொழுது வனப்பகுதி முழுமையும் குப்பை மேடாக மாறும் அபாயம் உள்ளது.

ரூ.500 கோடியில் பழனி - கொடைக்கானல் ரோப் கார் திட்டம்... சுற்றுலா மேம்படுமா, சூழல் அழியுமா?

கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் யானைகள் பாதிப்புக்கு உள்ளாகும். வனவிலங்குகள் வாழிடங்களுக்கு மேல் ரோப் கார் செல்லப்போகிறது. அப்பொழுது வனப்பகுதி முழுமையும் குப்பை மேடாக மாறும் அபாயம் உள்ளது.

Published:Updated:
கொடைக்கானல்

நாடு முழுவதும் 18 இடங்களில் 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பழனி முதல் கொடைக்கானல் வரையிலான 12 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோப் கார் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசின் பங்களிப்போடு, 500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

 ஆய்வு பணி..
ஆய்வு பணி..

இத்திட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த‌ வல்லுநர்களும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். ஆறு மாதத்துக்குள் முழுமையான ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான அறிவிப்பாணை வந்தது முதல் சூழலில் ஆர்வலர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக சூழலியல் ஆர்வலர் மோகன்ராஜிடம் பேசினோம். அவர், ``இத்திட்டத்தை நான்‌ எதிர்க்கிறேன். ஏற்கெனவே கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது, இத்திட்டத்தால் கூட்டம் மேலும் அதிகரிக்கத்தான்‌ செய்யும். மக்கள் கூட்டம் அதிகரித்தால் குப்பைகளும் அதிகரிக்கும். 500 கோடி ரூபாய் செலவு செய்து இத்திட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக வேறு சில பணிகளைக் கொடைக்கானலில் செய்யலாம்.

மோகன்ராஜ், சூழலியல் ஆர்வலர்.
மோகன்ராஜ், சூழலியல் ஆர்வலர்.

குப்பை மறுசுழற்சி மையம், மலைகளில் இருக்கும் அன்னிய தாவரங்களை அகற்றிவிட்டு, நம்ம ஊரு தாவரங்களை நடுவது போன்ற பணிகளை செய்யலாம். இத்திட்டத்தால் சாதாரண மக்களுக்கு என்ன பயன்? என்பதையும் பார்க்க வேண்டும். கொடைக்கானல் மலையின் அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் யானைகள் பாதிப்புக்கு உள்ளாகும். வனவிலங்குகள் வாழிடங்களுக்கு மேல் ரோப் கார் செல்லப்போகிறது. அப்பொழுது வனப்பகுதி முழுமையும் குப்பை மேடாக மாறும் அபாயம் உள்ளது. தெருக்களில் குப்பைகளைக் கொட்டினால் அகற்றிவிடலாம், ஆனால், வனப்பகுதியில் குப்பைகளை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. இத்திட்டத்தால் குரங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படலாம்" என்றார்.

கொடைக்கானலில் தங்கும் விடுதி நடத்தி வரும் ஊடகவியலாளர் தேவாவிடம் பேசினோம். அவர், ``இத்திட்டம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று கூறுவதை நான் ஏற்கவில்லை. கொடைக்கானலுக்கு வருவதற்கு ஐந்து வழிகள் உள்ளன. அவ்வழிகளில் வராத மக்கள் கூட்டம் ரோப் கார்களின் மூலம் வருவார்கள். இதனால் பொருளாதாரம் மேம்படும் என்று கூற முடியாது.

 ஆய்வுப் பணி..
ஆய்வுப் பணி..

இத்திட்டம் ஊட்டி மலை ரயிலைப் போல ஒரு முக்கியமான சுற்றுலா ஈர்ப்பாகத்தான் இருக்கும். ரோப் கார்கள் மூலம் கொடைக்கானலுக்கு வருவது ஒரு புது அனுபவத்தை மக்களுக்கு அளிக்கலாம். எப்படிப் பார்த்தாலும் ரோப் கார்களை மத்திய, மாநில அரசுகள் இயக்கப் போவதில்லை. ஒரு தனியார் நிறுவனமே இயக்கப்போகிறது. அவர்கள் நிர்ணயிப்பதுதான் விலையாகவும் இருக்கப்போகிறது. பழனி - கொடைக்கானல் ரோப் கார் திட்டம் உள்ளூர் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் வருமானத்தைப் பெருக்கும், அதே வகையில் இயற்கைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்த முடியும் என்றால் அதை நான் வரவேற்கிறேன். ஏதோ ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு மட்டும் லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் என்றால் `ஆணியே புடுங்க வேண்டாம்' '' என்று கூறி முடித்தார்.

ஸ்விட்சர்லாந்தில் அதிக அளவிலான ரோப் கார் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழகத்துக்கும் ரோப் கார் திட்டம் புதிதல்ல. 2004-ல் பழனி முருகனை முதியவர்கள், குழந்தைகள் தரிசிக்க ஏதுவாக மலை மீது செல்லும் வகையான ரோப் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சமீப காலமாக சென்னை மெரினா கடற்கரையோரம் ரோப் கார் அமைக்கும் பணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் சென்னை மாநகராட்சி சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. சென்னையிலோ, கொடைக்கானலிலோ இயற்கைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.