Published:Updated:

``வறண்ட ஏரி நிலங்களைப் பாதுகாத்தாலே போதும்!” - அன்று சகாயம் சொன்னதைக் கேட்டிருக்கலாமோ?

தண்ணீர்
தண்ணீர் ( Pixabay )

17 ஆண்டுகளுக்கும் முன்பே சகாயம் ஐ.ஏ.எஸ், சென்னையின் தண்ணீர்ப் பிரச்னையைத் தற்காலிகமாகச் சரிசெய்வதைவிட நிரந்தரமாகச் சரிசெய்ய வேண்டுமென்று சொன்னார்.

சென்னையின் தண்ணீர்ப் பிரச்னை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக்கொண்டே போகிறது. தன் எல்லைகளில் அமைந்துள்ள ஊர்களை விழுங்கி விழுங்கிப் பெருத்துக்கொண்டே போகும் இந்தத் தலைநகரம், உடலில் ஒட்டிய அட்டை ரத்தம் குடிப்பதுபோல் இந்நிலத்தின் நீரை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. அட்டை பாவம், அதன்படிக்குத் தகுந்தவாறு வயிறுமுட்டக் குடித்துவிட்டு உடலிலிருந்து உதிர்ந்துவிடும். அதனால், ஒன்றும் உயிர்போய்விடாது. ஆனால், இந்தத் தலைநகரம் அப்படியில்லை. இது அதைவிட ஆபத்தானது.

2001-ம் ஆண்டு சென்னையிலிருந்த 14,000 தெருக்களுக்குத் தினசரி தேவைப்பட்ட தண்ணீர் 250 - 300 மில்லியன் லிட்டர். ஆண்டுக்குச் சுமார் 12,000 கோடி லிட்டர். அதுவே தற்போது 37,056 தெருக்களைக் கொண்ட விரிவடைந்த சென்னையின் ஓர் ஆண்டுக்கான தண்ணீர் தேவை 33,600 கோடி லிட்டர்.

தண்ணீர்ப் பயன்பாடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு அதிகமாகத் தண்ணீர் மேலாண்மையும் கட்டுப்பாடுகளும் இருக்க வேண்டும். அதைச் சிறிதும் செய்யாமல், வெறுமனே தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இது இன்று நேற்று கதையல்ல. இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இதுதான் நடக்கிறது. இதை அன்றே உணர்ந்த சகாயம் ஐ.ஏ.எஸ், சென்னையின் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காணச் சில பரிந்துரைகளை முன்வைத்தார். அதைச் செய்திருந்தாலே இந்நேரம் நம்மால் சென்னையின் தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருக்க முடியும்.

சகாயம் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் அப்போதைய ஆக்கிரமிப்புகள் குறித்துப் பேசியிருக்கிறார். அதோடு, நதியோரக் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பாளர்களாகக் குறிப்பிடும் அரசாங்கம் சமுதாயத்தின் பல்வேறு தட்டு மக்கள் ஏரிகளை ஆக்கிரமித்திருப்பதையும் பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். உதாரணமாக, ஜமீன் ராயப்பேட்டை ஏரி, ராஜா கீழ்பாக்கம் ஏரி ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் பங்களாக்கள். அவை இன்றளவும் அகற்றப்படவில்லை.

தண்ணீர் பற்றாக்குறை
தண்ணீர் பற்றாக்குறை

ஏரிகளும் குளங்களும், நிலத்தடி நீரகங்களும் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதை அன்றே சகாயம் சொல்லியிருக்கிறார். சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் சுமார் 4,000 ஏரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஏரிக்கும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியோடு சேர்த்துச் சுமார் 40 முதல் 70 ஏக்கர் வரை நிலம் இருந்தது.

அந்த நிலங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுச் சிறிய அளவிலான நிலப்பகுதியில் மட்டுமே அந்த ஏரி நீரைச் சுமந்து நிற்கிறது. ஏரிகளின் இந்த நிலங்களை ஆங்காங்கே சில தன்னார்வலர்களும் இளைஞர் குழுக்களும் பராமரித்தும் வருகின்றனர். அவர் சமர்ப்பித்த அறிக்கையில்,

"30,000 ஏக்கர் பரப்பளவுக்கு ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியைப் பராமரித்தாலே போதும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு 1000 லிட்டர்களைச் சேமிக்கலாம். 30,000 ஏக்கர்களுக்கு 12,000 கோடி லிட்டர்களைச் சேமித்துச் சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யலாம்"
சகாயம் ஐ.ஏ.எஸ் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து...

சென்னையின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் அதற்கு முதலில் அரசாங்கம் நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, நீர்நிலைகளின் வடிகால் பகுதிகளையும் ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டும். அப்போதுதான், எவ்வளவு மழை பெய்தாலும் அவற்றைச் சேமித்து வைத்துத் தண்ணீர் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியும்.

இன்றைய நிலவரப்படி இதைப் பொருத்திப் பார்ப்போம். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் தமிழ்நாடு நீர்க்கொள்கைக்காக வழங்கிய 20 பரிந்துரைகளில் ஒன்று இதை நமக்குத் தெளிவாகப் புரியவைக்கும்.

"திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களும் சென்னையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள்தான். தற்போது விரிவாக்கப்பட்டுள்ள சென்னையின் மொத்தப் பரப்பிலுள்ள ஏறத்தாழ 4100 ஏரிகளில் 150 டிஎம்சி நீரைத் தேக்க முடியும் என்கிற வல்லுநர்களின் கருத்தை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இத்தோடு வெள்ள வடிநிலங்களையும் (Flood Plain), சதுப்பு நிலங்களையும் மீட்க வேண்டும். இந்த ஒருங்கிணைந்த மீட்புமுறை கட்டாயம் சென்னையை ‘உபரிநீர்’ நகரமாக மாற்றும்"
நக்கீரன்

சென்னையின் நீர்நிலை ஓரங்களிலும் அதற்குச் சொந்தமான நிலங்களிலும் பெரியளவில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அது, பேராசை மிகுந்த நில ஆக்கிரமிப்பாளர்களால் அவை ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க ஒருவகையான பாதுகாப்பாக அமையும் என்றும் தன் அறிக்கையில் கூறியுள்ளார். அவை, இதற்கு மட்டுமன்றி சென்னையில் பசுமை பெல்ட் (Green Belt) உருவாகவும் வழிவகுக்கும். அதன்மூலம், தலைநகரத்தின் மோசமான மாசுபாட்டுக் காரணிகளைக் குறைக்கலாம். அதோடு, கோடையின் கடுமையான வெப்பத்தைத் தணிக்கவும் இவை உதவும். இதோடு, ஏரி, குளங்களுக்கு நீர் கிடைக்க வழிசெய்யும் வரத்துக் கால்வாய்களைப் பத்திரமாகப் பராமரிப்பதும் மிக முக்கியம். அப்போதுதான் தடையற்ற நீரோட்டம் ஏரிகளிலும் ஆறுகளிலும் இருந்துகொண்டேயிருக்கும் என்று சகாயம் தன் அறிக்கையில் கூறியிருந்தார். வரத்துக் கால்வாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை எந்தவித சமரசமுமின்றி அகற்றவும் அதைப் பாதுகாக்கவும் வேண்டியது அவசியமென்றும் கூறியிருந்தார்.

2001-ம் ஆண்டு அவர் சமர்ப்பித்த அறிக்கையில் பேசப்பட்ட அம்சங்கள், இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. அதில் பாதியளவு நிறைவேற்றியிருந்தாலாவது சென்னையின் தண்ணீர்த் தட்டுப்பாடு ஓரளவுக்குச் சமாளிக்கப்பட்டிருக்கும். இன்று சென்னை சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை நீர். நிலத்தடி நீர் குறைவது, மழை பெய்யாதது என்று பல காரணங்களை மாநில அரசு முன்வைத்துக் கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரி
வீராணம் ஏரி

இந்தக் காரணங்களால், சென்னையைச் சுற்றி அமைந்திருக்கும் கிராமங்களிலிருந்து தண்ணீரைச் சுரண்டிக் கொண்டுவந்து சென்னைக்கு விநியோகித்துக்கொண்டிருக்கிறது. 2001-ம் ஆண்டு சகாயம் சமர்ப்பித்த பரிந்துரைகளைச் சரிவரச் செய்திருந்தால், தண்ணீருக்காகச் சென்னை இன்று இப்படிப் பக்கத்து மாவட்டங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

``ஒரு துளி மழைநீர்கூட வீணாகாது!” - சென்னையின் ஆர்கானிக் அப்பார்ட்மென்ட்

தற்போது தேசிய நீர்க்கொள்கை தனியாருக்கு ஆதரவளிக்கும் நிலை அமைந்துள்ளதால், தமிழகத்தின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் பரிந்துரைத்துள்ள 2 பரிந்துரைகளையும் சகாயம் ஐ.ஏ.எஸ் முன்னர் சமர்ப்பித்த அறிக்கையையும் கருத்தில்கொண்டு மாநில அரசு செயல்பட்டால் சென்னையின் தண்ணீர் பற்றாக்குறைக்கு எதிர்காலத்தில் தீர்வுகாண முடியும்.

அடுத்த கட்டுரைக்கு