Published:Updated:

அனுமதியற்ற செங்கற்சூளைகள்... ஆபத்தில் மக்கள்... கோவையை அச்சுறுத்தும் பயங்கரம்!

தோலுக்குக் கீழ் ஜவ்வில் கட்டி உருவாகும் இந்த விசித்திரமான நோய் (neurofibroma), இங்கு நூறில் நாற்பது பேருக்கு இருக்கும். சராசரியாக ஒருவருக்கு இரண்டு முதல் 300 கட்டிகள் வரை இருக்கும்.

அனுமதியற்ற செங்கற்சூளைகள்... ஆபத்தில் மக்கள்... கோவையை அச்சுறுத்தும் பயங்கரம்!

தோலுக்குக் கீழ் ஜவ்வில் கட்டி உருவாகும் இந்த விசித்திரமான நோய் (neurofibroma), இங்கு நூறில் நாற்பது பேருக்கு இருக்கும். சராசரியாக ஒருவருக்கு இரண்டு முதல் 300 கட்டிகள் வரை இருக்கும்.

Published:Updated:

கோவை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கின்றன தடாகம், சின்னத்தடாகம், பன்னீர்மடை, வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், ஆனைக்கட்டி கிராமங்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் பேரழகுடன் காட்சியளிக்கும் இந்தக் கிராமங்களில், 204 செங்கல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. சூளைகளாக தொடங்கப்பட்ட இந்தத் தொழில், தற்போது ரோபோக்களின் உதவியுடன் தொழிற்சாலைகளாக மாறிவிட்டன.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

இயற்கை வளம் கொட்டிக் கிடப்பதால், செங்கற்களுக்கான, செம்மண் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால், பட்டாநிலம், புறம்போக்கு நிலம் என்று பாரபட்சம் பார்க்காமல், அனைத்து நிலங்களிலும் கனிம வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன.

பல நூறு அடிகளுக்குச் சுரண்டப்படும் கனிம வளங்களால், ஒருபுறம் சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் கடுமையான பாதிப்புகள் இருக்கின்றன. மறுபுறம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி வாங்காமல், விதிகளைமீறி தொழில் செய்வதால் இந்தப் பகுதி மக்கள் நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

முக்கியமாகத் தூசியாலும் நச்சுக்காற்றாலும் இங்கிருக்கும் மக்களை ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற ஏராளமான நோய்கள் தாக்குகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் 20 பேரும், கடந்த மூன்று நாள்களில் மூன்று பேரும் இங்கு புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்களுக்கு இரண்டு தசாப்தங்களாக மருத்துவச் சேவை செய்துவரும் மருத்துவர் ரமேஷ், "ப்ரோன்கியல் ஆஸ்துமா (bronchial asthma) பற்றிப் படிப்பதற்காகத்தான், நான் தடாகம் பகுதிக்கு வந்தேன். 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. தூசிகள் அதிகமிருப்பதால், முதலில் சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள்தான் அதிகம் வரும்.

ரமேஷ்
ரமேஷ்

சளி, இருமலில் தொடங்கி தீராத இருமலாக மாறி, அது ப்ரோன்கியல் ஆஸ்துமாவாகி, இதயம் செயலிழந்து உயிரிழப்பு வரை சென்றுவிடும். மேலும், வாய், தொண்டை, இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்களும் வரும். வாயில் புண் வந்து, புற்றுநோய் வரை செல்வதும் உண்டு.

முதலில் இங்கு ஒரு சில மதுக்கடைகள்தான் இருந்தன. இப்போது மதுக்கடைகள் அதிகமாகிவிட்டன. இதனால், ஈரல் பாதிப்பு, காமாலை நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. தற்போது வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

ஆனால், சாலை விரிவாக்கம் செய்யாததால், அதிக விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக, மண் அள்ளும் லாரி மோதி உயிரிழந்தவர்கள் அதிகம்.

குறிப்பாக, தோலுக்குக் கீழ் ஜவ்வில் கட்டி உருவாகும், இந்த விசித்திரமான நோய் (neurofibroma), இங்கு நூறில் நாற்பது பேருக்கு இருக்கும். சராசரியாக ஒருவருக்கு இரண்டு முதல் 300 கட்டிகள் வரை இருக்கும். நுரையீரலில் இந்த மண் துகள்கள் படிவதால், இருமல் ஆரம்பித்து புற்றுநோய் வரை ஏராளமான நோய்கள் வரும். எனக்குத் தெரிந்த ஒருவருக்கு வாயில் கட்டி வந்து கேன்சராக மாறிவிட்டது.

ரமேஷ்
ரமேஷ்

அவரால் எங்கேயும் சிகிச்சை பெற முடியவில்லை. கடைசியில், கட்டியை அறுத்துக்கொண்டு அவரே இறந்துவிட்டார். இப்படி நோய்த் தாக்கத்தால் தற்கொலை செய்பவர்களும் ஏராளம். எனக்குத் தெரிந்த மற்றொரு பெண்ணுக்கு இந்தத் தூசியால் நுரையீரல் பாதிக்கப்பட்டுவிட்டது. இருமும்போது அவருக்கு ரத்தம் வரும்.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கு செங்கல் தொழிற்சாலைகள் அதிகரிக்கத் தொடங்கின. அப்போது தென் தமிழகங்களில் இருந்து வந்து அதிக தொழிலாளர்கள் இங்குப் பணியாற்றி வந்தனர். அப்படி வருபவர்கள், நோய் தாக்கி மீண்டும் தங்களது ஊருக்கே சென்று இறந்தவர்கள் அதிகம். வெளியூர் தொழிலாளிகள், இங்கு நிரந்தரமாக இருப்பதில்லை. அப்படியே இருந்து ஏதாவது பாதிப்பு என்றாலும், அவர்களால் காப்பீட்டுத் தொகையைக்கூடப் பெற முடியாது. இப்போது, வட இந்தியத் தொழிலாளர்கள்தான் அதிகம்.

செம்மண் கொள்ளை
செம்மண் கொள்ளை

வட இந்தியத் தொழிலாளிகளுக்குக் குறைந்த ஊதியம் கொடுத்தால் போதும். அவர்களுக்கு ஏதாவது என்றால், பத்தாயிரம், இருபதாயிரம் கொடுத்து செங்கல் தொழிற்சாலை அதிபர்களை அமைதியாக்கிவிடுவார்கள். கை, கால்களை இழந்து, கண்களை இழந்தவர்கள் ஏராளம். உயிரைப் பற்றிச் செங்கல் அதிபர்கள் கவலைப்படுவதில்லை.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞர் சிகிச்சைக்குப் பணமில்லாமல் இருக்கிறார். இப்போதும் வாய், நுரையீல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். இந்தப் பிரச்னையை, யார் எதிர்த்தாலும் அவர்களை மிரட்டிவிடுவார்கள். என்னையும் மிரட்டியிருக்கிறார்கள். குடிசைத் தொழில் என்று சொல்கிறார்கள்.

Doctor Ramesh
Doctor Ramesh

ஆனால், இதில் எந்த நிறுவனமும் குடிசைத்தொழில் என்று சொல்வதற்கான தகுதியை இழந்துவிட்டன. ஆயிரக்கணக்கில் லாரிகள் இயங்கி வருகின்றன. உயர் ரக எந்திரங்களை வைத்து செங்கற்களைத் தயாரிக்கின்றனர்.

அரசால் ஒழுங்குபடுத்தப்படாத தொழில் இது. இதனால், மக்களுக்கான பாதிப்பு குறித்து என்னைப் போன்றவர்கள் ஆவணப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட ஆய்வுகள் செய்து, செங்கல் தொழிற்சாலைகளை ஒழுங்குப்படுத்தினால்தான், பிரச்னைகளுக்கான தீர்வைக் கண்டறிய முடியும். அரசு ஆய்வு செய்வதற்கான தொகையை, இங்கிருக்கும் செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்களே வழங்க வேண்டும்" என்றார் தெளிவாக.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, "இதுதொடர்பாக, அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை செய்திருக்கிறோம். தற்போது இருக்கும் மாசு அளவைக் குறைப்பதற்கு வழிமுறைகள் மேற்கொண்டுள்ளோம்" என்றார்.