Published:Updated:

இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்!

அருண்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
அருண்குமார்

‘கழிவுநீர்த்தொட்டியைச் சுத்தம் செய்ய இறங்கியவர் மரணம்’ என்ற செய்தியை நாம் அடிக்கடி படிக்கிறோம், கேட்கிறோம், பார்க்கிறோம்.

னாலும் சமூகத்தில் எந்தச் சலனமும் ஏற்படவில்லை. சென்னையின் பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் சாக்கடைக்கழிவுகளைச் சுத்தம் செய்வதற்காகக் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய ரஞ்சித்குமார் விஷவாயுவால் தாக்கப்படுகிறார். அவரைக் காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கிய அவரின் அண்ணன் அருண்குமார் தம்பியைக் காப்பாற்றிவிட்டு விஷவாயுவால் மூச்சுத்திணறிக் கழிவுநீர்த்தொட்டிக்குள்ளேயே மூழ்கி இறந்து போகிறார். இந்த வருடத்தில் தமிழகத்தில் மட்டும் இது இருபதாவது மலக்குழி மரணம்.

சென்னைத் திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியில் இருக்கிறது அருண்குமாரின் வீடு. குறுகலான தெருக்களில் நெருக்கியடித்துக் கட்டப்பட்ட அந்த வீடுகளில் குடியிருக்கும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள் கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்ய அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இருட்டு கவிந்துகிடக்கிற ஒற்றை அறைக்குள்தான் அருண்குமாரின் அப்பா, அம்மா, தம்பி, தங்கை, மனைவி, குழந்தை என ஆறுபேர் வசிக்கிறார்கள். அறையின் ஓர் ஓரத்தில் சமையலறை. மற்றொரு பக்கம் வீட்டுச் சாமான்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. மிச்சமிருக்கும் சின்ன இடத்துக்குள் முடக்கப்பட்ட வாழ்க்கை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
அருண்குமார்
அருண்குமார்

அழுதழுது ஓய்ந்திருந்த அருண்குமாரின் அம்மா அம்சவள்ளியிடம் தயக்கத்துடன் பேசினேன். “வேலை செஞ்சுக்கிட்டிருந்தப்போ அருணோட அப்பாவுக்குக் கால்ல அடிபட்டுருச்சு. அதுக்கு அப்புறம் அவரால வேலைக்குப் போகமுடியலை. குடும்பத்தைக் காப்பாத்த அண்ணன், தம்பி ரெண்டு பேரும் வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. அருண் பத்தாவதுக்கு மேல படிக்கல. அன்னைக்குக்கூட ரோடு போடுற வேலைக்காகதான் கூட்டிட்டுப் போறதா சொன்னாங்க. போன இடத்துல சாக்கடைத் தொட்டிக்குள்ள இறக்கிவிட்டிருக்காங்க. அவன் பொண்டாட்டிக்குக் குழந்தை பொறந்து ஏழு மாசம்தான் ஆகுது. குழந்தைக்கு `தீக்சா’ன்னு பேரு. அது அப்பான்னு வாய்திறந்து கூப்பிடறதுக்குள்ள உசுர விட்டுட்டான்” என்று மீண்டும் கதறுகிறார் அம்சவள்ளி.

சிணுங்கிக்கொண்டிருக்கும் தீக்சாவுக்குப் பால் கொடுத்தபடி, ஆறாத துயரத்துடன் அமர்ந்திருந்தார் அருணின் மனைவி சுகன்யா. “அருணும் நானும் சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஸ். அஞ்சு வருஷம் காதலிச்சோம். ரெண்டு வருஷத்துக்கு முன்ன கல்யாணம் செஞ்சுகிட்டோம். கல்யாணத்துலயும் சரி, சமீபத்துல நடந்த சீமந்தத்துலயும் சரி, நாங்க போட்டோவே எடுத்துக்கலை. வர்ற ஏப்ரல் மாசம் தீக்சாவுக்கு ஒரு வயசாகும்போது மண்டபம் புடிச்சுப் பெருசாக் கொண்டாடலாம், குடும்பமா போட்டோ எடுத்துக்கலாம்னு சொன்னான். பிள்ளை பெரிசாயிட்டதால தனியா வீடு பாக்கலாம்ன்னு இருந்தோம். ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டலாம்னு திட்டம் போட்டிருந்தான். தீக்சா ஒரு நிமிஷம் அப்பா இல்லாம இருக்கமாட்டா. அவன் மேல படுத்துதான் தூங்குவா...” மகளை அணைத்துக்கொண்டு அழுகிறார் சுகன்யா. அண்ணனைக் கண்முன்னேயே பறிகொடுத்த துயரம் படிந்திருக்கிறது தம்பி ரஞ்சித் முகத்தில். விஷவாயு தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவர் இன்னமும் மீளவில்லை. கண் எரிச்சல், தலைவலி, வயிற்றுவலி, நுரையீரலில் பிரச்னை எனச் சுற்றிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான சூழலும் இல்லை. அருணின் தாயார் அம்சவள்ளியும் துப்புரவுப் பணியாளர். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளி. தற்போது மூச்சிரைப்புப் பிரச்னையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2013-ல் மத்திய அரசு கையால் மலம் அள்ளுவதைத் தடைசெய்து அப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வுக்காகத் தனியொரு சட்டமே இயற்றியது. ஆனால் சமூகநீதி மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ஐந்தாண்டுகளில் 144 இறப்புகளுடன் மலக்குழி மரணங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தது தமிழ்நாடு.

இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்!

துப்புரவுப் பணியாளர்களின் பிரச்னைகளுக்காகக் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் சஃபாய் கரம்சாரி அந்தோலன் அமைப்பின் தமிழகச் செயற்பாட்டாளர் சாமுவேல் வேளாங்கண்ணி, சுகன்யா சார்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்திருக்கிறார், “ஒவ்வொரு மலக்குழி மரணம் நிகழும்போதும் இதுவே கடைசி மரணமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு முதல்வருக்கு மனு கொடுக்கிறோம். ஆனால் ‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என்று யாரும் இல்லை’ என்று பதில் அளிக்கிறது அரசு. அப்படி யாருமே இல்லையென்றால் இப்படியான மரணங்கள் எப்படி நிகழ்கின்றன? இத்தனைக்கும் 2014 தொடங்கி மூன்று முறை அரசு சர்வே நடத்தியிருக்கிறது. விழிப்புணர்வுக்காகச் சென்னையில் மட்டும் பெயரளவில் ஐந்நூறு நோட்டீஸ் விநியோகித்திருக்கிறார்கள். மூன்று முறை சர்வே நடத்திய பிறகும் மலக்குழி மரணங்கள் நிகழ்கின்றன என்றால் இந்த அரசாங்கம் என்னதான் செய்கிறது? குழிக்குள் இறக்கினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்தே செய்வதற்குப் பெயர் விபத்து அல்ல, கொலை. அதுவும் மலக்குழி விஷவாயு நேரடியாக இதயத்தைத்தான் பாதிக்கும். அண்மையில் ஓர் உணவகத்தில் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய நான்கு பேரில் மூவர் விஷவாயு தாக்கி இறந்துவிட்டார்கள். ஒருவர் நரம்பு பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாகி விட்டார். வியாசர்பாடியில் ஒருவர் விஷவாயு தாக்கப்பட்டுத் தலைநரம்புகள் பாதிக்கப்பட்டதால் வலி தாங்க முடியாமல் கைப்படக் கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்” என்று மரணங்களைப் பட்டியலிடுகிறார் சாமுவேல் வேளாங்கண்ணி.

978 கோடி ரூபாய் சந்திரயானுக்காகக் கண்ணீர் விட்ட தேசம், உயிருள்ள மனிதனை மலக்குழிக்குள் இறக்கிவிடுவது குறித்து எவ்வித சலனமும் இல்லாமல் இருப்பதுதான் துயரம்.

துப்புரவாளர் மரணங்களைத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வரும் புகைப்படக்காரர் பழனிகுமார், “திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் கக்கூஸ் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அக்கறை மலக்குழிகளில் இறங்குபவர்களைக் காப்பாற்றுவதில் இருப்பதில்லை. விஷவாயு தாக்கி யாராவது இறந்த பிறகு அவர்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தருவதில்தான் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் முனைப்பாக இருக்கின்றன. அவர்கள் இறந்த பிறகுதான் அதுபற்றிப் பேசுகிறார்களே தவிர, சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என யாருமே போராடுவதில்லை. இப்படியான மரணங்களைப் பதிவு செய்வது என் வாழ்க்கையில் இதுவே கடைசியாக இருந்துவிட வேண்டும் என்பது எனக்கு ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கிறது” என்கிறார்.

இப்படியான மரணங்களைப் பற்றி எழுதுவதும் இதுவே கடைசிமுறையாக இருக்கட்டும். கண் திறந்து பாருங்கள் ஆட்சியாளர்களே!