Published:Updated:

`இந்திய அளவில் மிகச் சிறந்த காப்பகம்!' - சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு மத்திய அரசு விருது

துரை.நாகராஜன்

இந்தியாவில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை சார்பில் புலிகளின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 29-ம் தேதி, 'உலக புலிகள் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

புலிகள் தினம்
புலிகள் தினம்

20 -ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான புலிகள் இருந்தன. அடுத்த 100 ஆண்டுகளுக்குள், புலிகளின் எண்ணிக்கை வெறும் இரண்டாயிரமாகக் குறைந்தது. இந்தியாவில், புலிகளைப் பாதுகாக்கும்பொருட்டு புராஜெக்ட் டைகர் (புலிகள் பாதுகாப்புத் திட்டம்) திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, உலகில் உள்ள மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. புலிகளின் தாயகமாக இந்தியா விளங்கிவருகிறது.

இந்தியாவில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற துறை சார்பில் புலிகளின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 29-ம் தேதி, 'உலக புலிகள் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. அழிந்துவரும் பட்டியலில் உள்ள தேசிய விலங்கான புலிகளைப் பாதுகாக்க, இந்தியாவில் 48 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்த தினத்தையொட்டி, புலிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் காப்பகங்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.

இதன்படி, இந்திய அளவில் மிகச் சிறந்த புலிகள் காப்பகம் எனும் விருதை தமிழ்நாடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பெற்றுள்ளது. இந்த விருதை பிரதமர் நரேந்திர மோடியிடம் சத்யமங்கலம் புலிகள் காப்பக வனப்பாதுகாவலர், இயக்குநர் டாக்டர் நாகநாதன் பெற்றுக் கொண்டார்.