Published:Updated:

`மும்பைக் கடலோரத் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!'- ஆபத்தில் பவளப்பாறைகள்

இந்தத் திட்டம் வரவுள்ள மும்பைக் கடலோரப் பகுதி பவளப் பாறைகள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை
மும்பை ( Pixabay )

ரூ.14,000 கோடி செலவில் திட்டமிடப்பட்ட மும்பைக் கடலோரச் சாலைத் திட்டத்துக்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துத் தீர்ப்பளித்திருந்தது. அதுகுறித்த மேல்முறையீடு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மும்பைப் பெருநகரத்தின் தெற்குப் பகுதிக்கும் வடக்குப் பகுதிக்குமான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், காட்டுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அனுமதிகளைச் சரியாகப் பெறவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு ஆரம்பத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது, மும்பை உயர்நீதிமன்றம், இந்தத் திட்டத்தை நிறுத்துமாறு 2019 ஜூலை 26-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

மும்பைக் கடற்கரை
மும்பைக் கடற்கரை
India Water portal

கிரேடர் மும்பையின் முனிசிபல் கார்ப்பரேஷன், எல்&டி நிறுவனத்தை இந்தத் திட்டத்திற்கு ஒப்பந்ததாரராக நியமித்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யமுடியாது என்று கூறிய நீதிபதிகள், திட்டத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளை மட்டும் செய்யலாம் என்று அனுமதி வழங்கியுள்ளனர். மேற்கொண்டு உத்தரவுகள் வரும்வரை, ஆரம்பகட்ட வேலைகளைத் தவிர வேறு எந்த முக்கியப் பணியையும் மாநகராட்சி நிர்வாகமும் எல்&டி நிறுவனமும் மேற்கொள்ளக் கூடாதென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திட்டத்திற்கு எதிராகச் சூழலியலாளர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் கோலின் கொன்சால்வெஸ் மற்றும் சி.யூ.சிங் தீர்ப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``காட்டுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அனுமதிகளை வாங்காமல் தொடங்கிய திட்டத்திற்கான வேலைகளைத் தொடங்கலாம் என்று கூறுவது, மீட்டெடுக்க முடியாத சேதாரங்களைச் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளனர்.

Mumbai Beach
Mumbai Beach
Pixabay

எல் & டி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹாத்கி, ``கடலோரப் பாதுகாப்பு மண்டலத்திடம் வாங்கியுள்ள அனுமதியே போதும். ஒப்பந்ததாரர், இந்தத் திட்டத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். இன்னும் ஒரு தொழிலாளிகூட பணியைத் தொடங்கவில்லை. இப்படியே போனால், அனைவருக்கும் பெரிய நஷ்டம் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த இறுதித் தீர்ப்பு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதுவரை அடிப்படை வேலைகளை ஒப்பந்ததாரர் மேற்கொள்ளலாம். இப்போது உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்துவிட்டதால், அடிப்படை வேலைகளை எல்&டி நிறுவனம் தொடங்க முடியும். இந்தத் திட்டம் வரவுள்ள மும்பைக் கடலோரப் பகுதி பவளப் பாறைகள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.