‘சீமைக்கருவேலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அந்நிய தாவரங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. படிப்படியாக 10 ஆண்டுகளுக்குள் சீமைக்கருவேல மரங்கள் தமிழகத்திலிருந்து அழிக்கப்படும்’ என்று உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது தமிழக வனத்துறை.
‘சீமைக்கருவேல மரத்தை தமிழகத்திலிருந்து முற்றாக அழிக்கவேண்டும்’ என்று உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இப்படி வனத்துறை பதில் மனுத்தாக்கல் செய்திருக்கும் நிலையில், ஜூன் மூதல் வாரத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
சீமைக்கருவேல மரங்கள் அத்தனை ஆபத்தானவையா? என்கிற கேள்விக்கு முழுமையான பதில் கிடைக்காத சூழலில், வனத்துறையின் இந்த வேகம் பலவிதமான கேள்விகளை எழுப்பத் தவறவில்லை.
‘அந்நிய தாவரங்கள் என்று கணக்கிட ஆரம்பித்தால்... கிட்டத்தட்ட 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் அந்நிய மண்ணிலிருந்து வந்தவையே. இன்றைக்கு நாம் போற்றிப் புகழும் தேக்கு, காபி, டீ உள்பட பலவும் அந்நிய தாவரங்களே. சொல்லப்போனால், கோடைக்கால கொண்டாட்ட இடங்களாக நாம் குதூகலிக்கும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களை அதிகம் ஆக்கிரமித்திருக்கும் காபி, டீ போன்ற தாவரங்களால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் கேடு சொல்லி மாளாது. ஒருகாலத்தில், நம் மண்ணுக்கேயுரிய மரங்களுடன் சோலைக்காடுகளாக இருந்தவைதான் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்றவை. அவையெல்லாம் அழிக்கப்பட்டுதான் காபி மற்றும் தேயிலைக் காடுகள் உருவாக்கப்பட்டன’ என்று சொல்லும் சூழல் ஆர்வலர்கள், இந்தத் தேயிலைக் காடுகளை, ‘பசுமைப் பாலைவனம்’ என்றுதான் அழைக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇப்படிப்பட்ட சூழலில், பெரிதாக ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமல் அந்நிய தாவரங்கள் என்கிற பெயரில் சீமைக்கருவேல மரத்துக்கு எதிராக வனத்துறையும் நீதிமன்றமும் அரிவாள் தூக்குவது சரியா? என்கிற கேள்வி எழ... சீமைக்கருவேல மரங்கள் பற்றி அறிவியல்பூர்வமாக அடிப்படைத் தகவல்களை தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம்.
100 அடி ஆழத்துக்கும் மேல் வேர்கள்?
‘சீமைக்கருவேல மரங்களின் வேர்கள் நிலத்தினுள் 100 அடிக்குக் கீழ் சென்று நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. இதனால் நிலத்தடிநீர் குறைகிறது; காற்றிலுள்ள ஈரப்பதத்தைக்கூட இது விட்டுவைப்பதில்லை; அளவுக்கதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிட்டு, காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது; இதன் அருகில் வேறு எந்தச் செடி, கொடி, மரங்களும் வளராது; குருவிகள்கூட இந்த மரத்தில் கூடு கட்டுவதில்லை; கால்நடைகள் இந்த மரங்களின் அருகில்கூட செல்வதில்லை; இத்தகைய சீமைக்கருவேல மரங்களை அழிக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாக மாறிவிடும்’ இப்படி தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிலிருக்கும் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதுதான் நோக்கம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உயிர் ஆற்றல் துறையின் முன்னாள் தலைவரும், உயிர் ஆற்றல் சம்பந்தமாகத் தீவிரமாக இயங்கி வருபவருமான முனைவர் ப.வெங்கடாசலத்தை இதற்காக அணுகியபோது, ஆர்வமுடன் ஒப்புக்கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மூன்றரை அடிக்குக் கீழ் வேர் செல்லவில்லை!
முசிறி அருகேயுள்ள ஓரிடத்தில் வளர்ந்து நிற்கும் சீமைக்கருவேல மரங்களை வைத்துத்தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்காக 60, 40 மற்றும் 4 வயது என மூன்று சீமைக்கருவேல மரங்களைத் தேர்ந்ததெடுத்தார் வெங்கடாச்சலம். அவற்றை ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் வேரோடு பறித்தோம். 60 வயதான மரத்தின் வேர் மூன்றரை அடிக்குக் கீழ் இறங்கவில்லை. இந்த மரத்தின் வேர்கள் பெரும்பாலும் சல்லிவேர்களாகவே இருந்தன. பக்கவாட்டு வேரொன்று மட்டும் 6 அடி நீளத்துக்கு இருந்தது. மண் கடினமானதாக இருந்தால்கூட நிலத்தினுள் வேர் ஆழமாகப் பிடிக்காது என நினைக்கலாம். ஆனால், நாங்கள் சோதனைக்கு எடுத்துக்கொண்ட பகுதி ஆற்று மணல்போல பொலபொலவென இருந்தது.
அடுத்தாக, நீர்நிலைக்கு அருகிலிருந்த 40 வயதான மரத்தின் ஆணிவேர்களும் மூன்று, நான்கு அடிகளுக்கு மேல் செல்லவில்லை. ஒரேயொரு பக்கவாட்டு வேர் 18 அடி நீளத்துக்கு இருந்தது. இந்த மரத்தின் மேல் சுரைக்காய் கொடி படர்ந்து காய்த்திருந்தது. வேப்ப மரங்கள், தென்னை மரங்கள், பனை மரங்கள் என பலவித மரங்கள் சுற்றிலும் வளர்ந்திருந்தன. நான்கு வயதுள்ள மரத்திலும் மூன்று, நான்கு அடி நீளமுள்ள வேர்களே இருந்தன. பக்கவாட்டு வேர் மட்டும் 8 அடி நீளத்துக்கு இருந்தது.
வெப்ப ஆற்றல் மிக்கது சீமைக்கருவேல மரம்
ஆய்வை நேரடியாக மேற்கொண்ட பேராசிரியர் வெங்கடாசலம், “50 சதவிகித கிராம மக்கள் இப்போதும் பயன்படுத்துவது வெப்பஆற்றல்தான். அதிக அளவு மின் ஆற்றல் உற்பத்திக்கு அடிப்படையாக இருப்பதும் வெப்பஆற்றல்தான். இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரியின் இடத்தை நிரப்பும் திறன்கொண்டது சீமைக் கருவேல மரம் மட்டுமே. ஒரு காலத்தில் காடுகளிலிருந்தும் பெற்ற மரங்கள், உயிர் வேலிகளிலிருந்து கிடைத்த கிளைகள், சாணத்தில் செய்த வறட்டிகள் என பல வகை எரிபொருள்களைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் காடுகள் அழிந்து வந்தன என பல ஆய்வுகள் கூறுகின்றன. செங்கல் சூளைகள் வந்து பனைமரங்களை அழித்தன.
10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மாணவர்கள் எடுத்த கணக்குப்படி ஒரு நாளில் 1,000 லாரிகள் திருப்பூருக்கு விறகைக் கொண்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் உடனடி மாற்றாக இவர்கள் என்ன சொல்கின்றனர்? எரிவாயு (எல்பிஜி கேஸ்), நிலக்கரி, எரி எண்ணெய்(பர்னஸ் ஆயில் ) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத்தான் சொல்வார்கள். இவற்றை இறக்குமதி செய்வதா, இல்லை நம் டெல்டா பகுதியில் வெட்டி எடுப்பதா? என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள்தான் சொல்லவேண்டும்” என்று சொன்ன வெங்கடாசலம், தொடர்ந்தார்.
மாட்டுக்கொட்டகையே சீமைக்கருவேல மரம்தான்!
“நிலத்தடி நீரை இவை உறிஞ்சி வளரவில்லை. ஒரு சாதாரண மரத்துக்கு எப்படி வேர் இருக்குமோ, அது எப்படி நிலத்திலுள்ள நீரை எடுத்துக்கொண்டு வளருமோ அப்படித்தான் இவையும் வளர்கின்றன. கால்நடைகளுக்கான கொட்டகையாகவே இருப்பவை இந்த மரங்கள்தான். இதன் காயைக்கூட கால்நடைகள் நன்றாக உண்ணும்.
ஆகக்கூடி, மொத்தமாக அழித்தால்தான் தமிழகத்தையே காப்பற்ற முடியும் என்கிற நோக்கில் அழிக்கத் தேவையில்லை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சீமைக்கருவேலமரம் குறித்த ஆய்வுகளை குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் செய்த அளவுக்கு நமது மாநிலத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான். அதேசமயம், இதன் பல பயன்பாடுகளை மக்கள் அறிந்தே வைத்துள்ளனர். அவர்களாகவே காலப்போக்கில் ஆய்ந்தறிந்து, நடைமுறையில் இம்மரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், அந்தியூர் போன்ற பகுதிகளில் சீமைக்கருவேலமரத்தில் இருந்து பல்வேறு கைவினைப் பொருள்களைத் தயாரித்து விற்கின்றனர். இதில் செய்யப்பட்ட கட்டில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன.
தென் மாவட்டங்களில், எரிகரி தயாரிக்கும் தொழில் மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மண்அரிப்பைத் தடுப்பது, புயல் மூலம் ஏற்படும் அழிவைத் தடுப்பது, கால்நடைகளுக்கு இதன் காய்களை உணவாகப் பயன்படுத்துவது என பல பயன்பாடுகள் இருக்கின்றன.
உன்னதமான உயிர்க்கரி!
இதில் சீமைக்கருவேல மரத்திலிருந்து உயிர்க்கரி (பையோச்சார்) என்ற மண்வளப் பொருள் தயாரிக்கலாம் என்பதும் அது மண்ணில் உள்ள கரிக்கு (கார்பனுக்கு) ஒரு மாற்றாக பயன்படுகிறது என்பது புதிய செய்தியாகும். உள்நாட்டில் எந்தவித இடுபொருளும் இடாமல் உற்பத்தியாகும் ஒரே உயிர் ஆற்றல் எரிபொருள் சீமைக் கருவேல மரம் மட்டுமே. இன்னும் வேளாண் உற்பத்தியில் பெரும்பங்காற்றும் தேனீக்கள் நிலைத்திருக்க உதவுவதும் சீமைக்கருவேல் மட்டுமே. இந்த மரங்களை நட வேண்டியதில்லை. தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டிய அவசியமில்லை. எந்தவகை மண்ணாக இருந்தாலும் வறட்சியான பகுதியாக இருந்தாலும் தொய்வின்றி வளர்ந்து, பூக்கும் ஒரே மரம் இது மட்டுமே. உள்நாட்டுத் தாவரங்கள், வெளிநாட்டுத் தாவரங்கள் என பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. அப்படிப்பார்த்தால், மேற்குத்தொடர்ச்சி மலையை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டிலிருந்து வந்த டீ, காப்பியையும் எதிர்க்க வேண்டும்.
ஆக்சிஜன் ஆலை!
இதை அழிப்பதற்கு கூறப்படும் காரணங்கள் அனைத்தும் அறிவியலுக்கு ஒவ்வாத, பொய்யான புனைவுகளாகவே உள்ளன. கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இந்த மரங்களை அதிகம் காணமுடியாது. ஆனால், அந்த மாவட்டங்களில்தான் நிலத்தடி நீர் அதல பாதாளத்தில் உள்ளது. அப்படியென்றால், சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன என்பதில் உண்மையில்லைதானே? எங்கெல்லாம் தீவிர வேளாண்மை நடைமுறையில் உள்ளதோ... அங்கெல்லாம் நிலத்தடி நீர் குறைந்துள்ளது என்பதுதான் உண்மை.

இது அதிக அளவு ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது. இன்றைய தேவையே அதிக ஆக்ஸிஜன்தான். அதைத்தான் இந்த மரம் செய்கிறது. ஒரு ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை என்றே கூறவேண்டும். உயிர்காற்றைக் நமக்கு கொடுக்கும் அதற்கு, நாம் கொடுக்கும் தண்டனை மரணதண்டனை. இது எந்த வகையில் நியாயம்?
நீதிமன்றங்களும் சரி, இந்த அரசும் சரி உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது, மரங்களின் மீதான மரணதண்டனையை அல்ல; அவற்றை முறையாகப் பயன்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்கள், அதற்கான ஆய்வுகள் மற்றும் திட்டங்களைத்தான் முன்னெடுக்க வேண்டும்” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
சீமைக்கருவேல மரத்தின் நன்மைகள் மற்றும் பயன்பாடுகளை இன்னும் இன்னும் அடுக்கிக்கொண்டே போகுமளவுக்குத் தகவல்களை கையில் வைத்திருக்கிறார் முனைவர் வெங்கடாசலம். ஆனால், சீமைக்கருவேல் மரத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட சிலர் இதையெல்லாம் ஆராய்ந்தார்களா என்று தெரியவில்லை.
ஜூன் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊர்முழுக்க எதிர்ப்புக்குரல் கேட்கிறது... நீதிமன்றமும் உறுமுகிறது என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்து, சீமைக்கருவேல மரங்களுக்கு மரணதண்டனையை வழங்குவது ஆபத்தானதாகக்கூட முடியலாம்.
தமிழக அரசின் சார்பில் ஒரு குழுவை அமைத்து, தீவிரமாக ஆய்வை மேற்கொள்ளலாம். அதில் தகுதி வாய்ந்த அறிஞர்கள், விவசாயிகள், சீமைக்கருவேல மரப் பயன்பாட்டாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று அனைவரையும் இணைத்து நேரடியாக ஓர் ஆய்வை மேற்கொள்ளலாம். அந்த ஆய்வு முறையாக நடத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம்.
உதாரணமாக, ‘அந்நிய மரங்கள்’ என்கிற பெயரில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு தாவரங்களில் ஒன்றுதான் இந்தச் சீமைக்கருவேல மரம். இதன் மீது காட்டப்படும் வெறுப்புணர்வு எந்த அளவுக்குச் சரி என்று உறுதிப்படுத்திக் கொள்ளாமலே முடிவுகள் எடுத்துவிடக்கூடாது என்பது மட்டும்தான் பசுமை விகடனின் ஒரே நோக்கம். முறையான ஆய்வுகளே இல்லாமல் ஒரு மரத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக்கொல்லப் பார்ப்பது, நாளைய சமூகத்துக்கு நாம் செய்யக்கூடிய கேடாகவே மாறக்கூடும்-ஜாக்கிரதை!