Election bannerElection banner
Published:Updated:

ஸ்டெர்லைட்... தீர்ப்புக்குப் பிறகு அரசு செய்ய வேண்டியது என்ன?

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடையை நீக்க முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு அடுத்ததாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்கிற சில கோரிக்கைகளை சூழலியலாளர்கள் முன்வைத்துள்ளனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சுற்றுவட்டார மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர். அதன் தொடர்ச்சியாக, 2018-ம் ஆண்டு 100 நாள்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது. அதன் இறுதி நாளான மே 22-ம் தேதி போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆணைப்படி மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி வழக்கு தொடர்ந்தது.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்
எல்.ராஜேந்திரன்

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேதாந்தாவால் தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன், `ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும்’ என்று இன்று (ஆகஸ்ட் 18) தீர்ப்பளித்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து தூத்துக்குடியில் மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சில கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வைத்துள்ளது. ``தமிழக அமைச்சரவையைக் கூட்டி, தமிழகத்தில் `இனிமேல் தாமிர உருக்காலைகளை எங்கும் அனுமதிப்பதில்லை’ என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவதற்கான (Decommissioning) நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

மன்னார் வளைகுடா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனம் செலுத்திய அபராதத் தொகை, சுற்றுச்சூழலை சீரமைப்பதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து, அதற்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போராடிய மக்கள்மீதும், செயல்பாட்டாளர்கள்மீதும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

`பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என தீர்ப்பு... கருத்துரிமையை நெரிக்கிறதா உச்சநீதிமன்றம்?

தமிழகத்தில் செயல்படும் அனைத்து ரசாயனத் தொழிற்சாலைகளையும் சோதனை செய்து, சூழல் சீர்கேடுகளைக் களைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” ஆகிய கோரிக்கைகள் `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுள்ள ஆட்சியாளர்கள், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு