Published:Updated:

அமைச்சர் வேலுமணியின் ரெயின் வாட்டர் சேலஞ்ச்.... என்ன சொல்கிறார்கள் நெட்டிசன்கள்?

தனக்கான இமேஜை சரிசெய்யும் விதமாக, இளைஞர்களைக் குறிவைத்து மழைநீர் சேகரிப்பு குறித்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

சென்னை மெட்ரோ மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து மழைநீர் சேகரிப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளது. இதுவரை 71,000 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு முறையாக உள்ளது. மழைநீர் சேகரிப்பு இல்லாத 41,000 கட்டடங்களுக்கு, மழைநீர் சேகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். சில கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். இனி நிலத்தடிநீர் எடுக்க வேண்டுமென்றால், முறையாக லைசென்ஸ் பெற வேண்டும். 0.5 ஹெச்.பி-யைவிட அதிக விசையுள்ள மோட்டார் பயன்படுத்தி நிலத்தடிநீர் எடுத்தாலும் லைசென்ஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று தகவல்கள் வந்த நிலையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மழைநீர் சேமிப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மழைநீரைச் சேமிப்போம், நமக்காக நாட்டுக்காக நாளைக்காக!
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதில், ''200 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழைநீரைச் சேகரித்தால், ஒரு குடும்பம் ஓராண்டுக்குத் தேவையான மழைநீரைச் சேமிக்கலாம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் மழைநீரைச் சேகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் பெய்யும் ஒரு துளி மழைநீரைக்கூட வீணாக்கக் கூடாது. இதை நாம் சவாலாக வீட்டுக்கு வீடு செயல்படுத்துவோம். மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களும், மக்கள் மேல் அக்கறை உள்ளவர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும். மழைநீரைச் சேமிப்போம், நமக்காக நாட்டுக்காக நாளைக்காக'' என்று அதில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மழைநீர் வடிகால் அமைப்பதில் 750 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்‍கம் குற்றச்சாட்டு எழுப்பியது. சிட்லபாக்கத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாகக் கேள்வி எழுப்பிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில், 2021-ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது, தமிழகம். ஆளும் அ.தி.மு.க அரசுமீது மக்களுக்கு அதிருப்தி அதிகமாக இருப்பதைக் கருத்தில்கொண்டு அதைச் சரிசெய்யும் விதமாக, இதுபோன்ற வீடியோக்களை அ.தி.மு.க அமைச்சர்களிடம் இனி எதிர்பார்க்கலாம் எனக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில்தான், தனக்கான இமேஜைச் சரிசெய்யும் விதமாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இளைஞர்களைக் குறிவைத்து இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். 2001-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால், தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

Jayalalitha
Jayalalitha

இதைச் செயல்படுத்த வீட்டுக்குவீடு மானியமும் கொடுக்கப்பட்டது. மழைநீர் சேகரிப்பு குறித்த ஆர்வம், செயல்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்தது. அதன்பிறகு, பெரும்பாலான வீடுகளில் மழைநீர் முறையாகச் சேமிக்கப்படவில்லை. ஆறுகள் தூர்வாரப்படுவதில்லை. கோயில் குளங்களில் மழைநீர் சேமிக்க வழிவகை செய்யப்படவில்லை. 2015-ல் சென்னை வெள்ளத்துக்குப் பிறகு, அப்போது பெய்த மழையின் அளவில் ஒரு சதவிகித நீரைக்கூடச் சேமிக்க முடியவில்லை என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். அரசு இயந்திரம் இப்படித்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மழைநீர் சேகரிப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, தன்னுடைய அரசியல் இமேஜை உயர்த்தும் என்று நினைத்த அமைச்சர் வேலுமணியை இணையத்தில் பலர் விமர்சனம் செய்துவருகின்றனர். அதேசமயம், அமைச்சரை ஆதரித்தும் சிலர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பேகூட சென்னை நகரில் மட்டும்தான் செயல் படுத்தப்படுகிறதே தவிர, வேறு நகரங்களில் பெரிய அளவில் செயல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. வேலுமணியைப் பொறுத்தவரை, 'குடியிருப்புகளில் ஒரு சொட்டு மழைநீர்கூட விரயமாக்கப்படாமல் சேகரிக்கப்பட வேண்டும்' என்கிறார். அப்படியானால், அவர் துறையின் கட்டுப்பாட்டில் வரும் மாநகர்ப் பூங்காக்களில் பொழியும் மழைநீரை முதலில் சேமிக்க வேண்டும். குறிப்பாக, அதை நிலத்தடி நீராக மாற்றுவதற்கு, குறைந்தது 1,000 ச.அடியில் 10 அடி ஆழத்தில் ஒரு குளம் அமைக்க ஆணையிடப்பட வேண்டும். பிறகு, அது வட கிழக்குப் பருவ மழையின் வரவுக்கு முன் செயல்படுத்தப்பட்டதா என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும்'' என டி.வி.மதுரநாயகம் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் உள்ள ஏரியொன்று, வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவருவதைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார், விக்னேஷ்வரன் கார்த்திகேயன். அதில், ''தொட்டி கட்ட முடிந்தவர்களுக்கே மழை பொய்த்துப்போனால் திண்டாட்டம்தான்! அப்ப ஏரிகள், ஏரிகளின் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரும் அவசியம்தானே?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மழை நீர்
மழை நீர்
Pixabay

அதேபோல், இளமதி சாய்ராம், ''மழை நீர் சவாலாம். சேகரிக்க வேண்டுமாம். மழை நீரைச் சேகரிக்கணும்னா போர்க்கால அடிப்படையில் அரசு ஏரி, குளம், ஆறுனு அனைத்தையும் தூர்வார வேண்டுமென்று குறிப்பா, ஆத்துல மணல் அள்ளக்கூடாதென்று ஒரு சின்ன பிள்ளைக்குக்கூடத் தெரியும். இங்க என்னடானா டி.வி-க்கு வந்து நம்மள பார்த்து மழை நீரைச் சேமிக்கச் சொல்றாங்க" என்று கருத்துப் பதிவிட்டிருக்கிறார் அவர்.

மழைநீர் சேமிப்புக்காக அமைச்சர் வெளியிட்ட வீடியோ குறித்து உங்கள் கருத்தையும் இங்கே பகிருங்கள்..