Published:Updated:

பழைய பேருந்துகளை கடலில் போட்டு செயற்கை பவளப்பாறைகள்; இலங்கை செய்வது சரிதானா?

Artificial reef project
News
Artificial reef project

பேருந்துகளைப் போட்டு செயற்கை பவளப் பாறைகளை உருவாக்குவது இதுபோல் எவ்விதப் பலன்களையும் கொடுக்காது, மாறாகக் கேடுகளையே கொண்டு வரும் என்று எச்சரிக்கின்றனர்.

சமீபத்தில் இலங்கை அரசு கடலுக்குள் பழைய பேருந்துகளை சில பகுதிகளில் இறக்கியது. இலங்கையின் கடல் பகுதியில் மீன் வளத்தை அதிகரிப்பதற்காக, செயற்கையான பவளப் பாறைகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே பழைய பேருந்துகளைக் கடலில் இறக்கியதாக இலங்கை அரசு தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், வல்லுநர்கள் என்று பல தரப்பிலிருந்து இதற்குக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பொறுப்பற்ற, பேரழிவுக்கு வித்திடக்கூடிய வகையிலும் மீனவர்களின் நலனைச் சிதைக்கும் வகையிலும் இலங்கை அரசின் இந்தச் செயல்பாடு இருப்பதாக, பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

மீனவர் படகுகள்
மீனவர் படகுகள்
படம்: விகடன்/ உ .பாண்டி

இலங்கை கடற்படையின் உதவியோடு, இந்திய-இலங்கை சர்வதேச கடல் எல்லையிலிருந்து 5 நாடிகல் தூரத்தில் கச்சத்தீவு முதல் நெடுந்தீவு வரையிலான கடல் பகுதியில் பழைய பேருந்துக் கூடுகள் இறக்கப்பட்டன. நாளொன்றுக்கு நான்கு பேருந்துக் கூடுகள் என்ற கணக்கில் பத்து நாள்களில் 40 பேருந்துகளை கடலில் இறக்குவதுதான் திட்டம். ஜூன் 12-ம் தேதி முதல் இலங்கை கடல் பகுதியான நெடுந்தீவு, நயினா தீவு, கச்சத்தீவு பகுதிகளில் இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் இந்தப் பணிகள் நடைபெற்றன. இந்தத் தீவுகள் இலங்கை கடல் பரப்புக்குள் வந்தாலும், இந்திய கடல் எல்லைக்கு மிகவும் அருகில்தான் அவை அமைந்துள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இவற்றைக் கடலில் போடுவதன் மூலம், மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியான சூழலை உருவாக்கி, வடக்குக் கடலில் மீன் வளத்தைப் பெருக்க முடியும் என்றும் இதற்கு இலங்கை மீன் வளத்துறை விளக்கமளித்தது. மேலும், அமெரிக்கா, ஜப்பான், கனடா, இந்தியா உட்பட பல நாடுகளில் செயற்கை பவளப்பாறைகள் கடலில் போடப்படுவதாகவும் அதைப்போலவே இலங்கை கடல் பரப்புக்குள் பேருந்துகளை இறக்கி, செயற்கை பவளப்பாறைகளாக மாற்றுவதாகவும் கூறியது. இலங்கையின் கிழக்குக் கடல் பரப்பில், இதுபோல் பழைய பேருந்து கூடுகளைப் போட்டதால் ஆழ்கடல் மீனவர்கள் நல்ல பலன்களைக் கண்டுள்ளதாக இலங்கை அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

மீனவர் (மாதிரி படம்)
மீனவர் (மாதிரி படம்)

பேருந்துகளைப் போட்டு செயற்கை பவளப் பாறைகளை உருவாக்குவது இதுபோல் எவ்விதப் பலன்களையும் கொடுக்காது, மாறாகக் கேடுகளையே கொண்டு வரும் என்று எச்சரிக்கின்றனர். பேருந்துக் கூடுகளைக் கடலில் போடுவதால், உள்ளூர் மீனவர்களின் படுப்பு வலை தொழில் பாதிக்கப்படுவதோடு, இயற்கைச் சீற்றம் ஏற்படும் நேரங்களில் நடுக்கடலில் மீன் பிடிக்கும் படகுகள் கவிழ்ந்தால் படகிலுள்ள மீனவர்கள் இவற்றில் மோதவேண்டிய சூழல் ஏற்பட்டு, அவர்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம்.

பொதுவாக செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கும்போது, அவை ஒரேயிடத்தில் இருக்கும் வகையில்தான் ஏற்படுத்த வேண்டும். ஆனால், கைவிடப்பட்ட பேருந்துக் கூடுகள் எடை குறைந்தவை என்பதால் கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப இடத்துக்கு இடம் நகரும். இது நடைபெறும் பகுதிகளில் நண்டுவலை, சுறா வலை, திருக்கை வலை ஆகியவற்றைச் சேதப்படுத்தி அவற்றைப் பயன்படுத்துவதை சிக்கலாக்கிவிடும் எனத் தமிழக மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படுவது எதற்காக?

கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக, கடலடியில் காலியாக இருக்கும் இடத்தில் புதிதாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி, மீன் கூட்டங்களை அதை நோக்கி வர வைப்பதற்கும் அவை இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கும் வகையிலும் மனிதர்களால் உருவாக்கப்படுவதுதான் செயற்கை பவளப்பாறைகள். பெரும்பாலும், ஏற்கெனவே விபத்துக்கு உள்ளாகி மூழ்கிய கப்பல்களை அப்புறப்படுத்தாமல் அதை அப்படியே செயற்கை பவளப்பாறை கட்டமைப்பாக உருவாக்குவார்கள். மேலும் டிராலர் படகுகள் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் அதைத் தடுப்பதற்காக இத்தகைய கட்டமைப்பை உருவாக்குவார்கள்.

Artificial reef
Artificial reef
Steven fine/ Wikimedia Commons

இதைச் சரியாகத் திட்டமிட்டு வடிவமைக்கவில்லை என்றால், அது நிலையற்றதாகி வேறு பகுதிகளுக்குப் புயல் காற்றின்போது இடம் மாறக்கூடும். அது நன்மைகளைவிட அதிக தீமைகளையே கொண்டுவரும். உதாரணத்துக்கு, ஒருவேளை அது இயற்கையாக அமைந்திருக்கும் பவளத்திட்டுகள் மீது மோதி சேதங்களை விளைவிக்கலாம். அது மீன்களின் உறைவிடமாகவும் இனப்பெருக்கப் பகுதியாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த இயற்கையான பவளப் பாறைகளையே அழித்து, மீன்வளப் பெருக்கம் என்ற அதன் நோக்கத்துக்கே வினையாகலாம்.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலக நாடுகள் இதுபோல் பயன்படுத்தப்பட்ட பல பழைய வாகனங்களை கடலுக்குள் போட்டு செயற்கையான பவளப்பாறைகளை மீன்வளப் பெருக்கத்துக்காக உருவாக்கும் முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. இலங்கை அரசுத் தரப்பும் அதையே தங்கள் செயல்பாடுகளுக்கு உதாரணமாக முன்வைக்கிறது. ஆகவே, இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட உலக நாடுகளில் என்ன நிலை என்பதைப் பார்ப்போம்.

அமெரிக்காவில், மெக்சிகோ வளைகுடாவில் பழைய பேருந்துகளைப் போட்டு 1958-ம் ஆண்டு செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கினார்கள். 6 மைல் பரப்பளவுக்குள் மூன்று கட்டமைப்புகளை அமைத்தார்கள். ஆரம்பக்கட்ட சர்வேக்களில், அவை நல்ல பலன் தரக்கூடியதாகவும் பல்வேறு மீன் வகைகளை ஈர்க்கக்கூடியதாகவும் இருப்பது பதிவாகியுள்ளது. ஆனால், அது அமைக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்ட கார்லா புயலுக்குப் (Hurricane Carla) பிறகு, நீரோட்டப் பாதையிலேயே அந்தச் செயற்கை பவளப்பாறைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்று செயற்கை பவளப்பாறைகள் அமைக்க பயன்படுத்த வேண்டிய பொருள்களுக்கான கையேட்டில் (Guidelines for Marine artificial reef materials) குறிப்பிடப்பட்டுள்ளது.

Artificial reef construction
Artificial reef construction

14 அடி உயரம், 50 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 22,226 கிலோ எடை கொண்ட பெரிய வாகனத்தின் கூடுகளும் கூட, அமைக்கப்பட்ட முதல் 6 மாதங்களில் கவனித்தபோது நேர்மறை விளைவுகளைக் கொடுத்தாலும், 2 ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் அவற்றின் கட்டமைப்பிலிருந்து பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடையத் தொடங்கிவிட்டன. வடக்கு கரோலினாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, கடலில் இறக்கப்பட்ட இந்த கனரக வாகனக் கூடுகளில் 90 சதவிகிதம் பகுதிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தபோது அமைக்கப்பட்ட இடத்தில் இல்லை.

1985-ம் ஆண்டுக்கான அமெரிக்க கடல்வளத்துக்கான தேசிய திட்டத்தில், ``வாகனங்களின் பாகங்கள் கிடைப்பது எளிமையாக இருந்தாலும், அவை நீண்ட ஆயுள் கொண்டவையாகவோ, திடமானதாகவோ கடலுக்குள் இருப்பதில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அட்லான்டிக் கடற்கரையிலுள்ள செயற்கை பவளப்பாறை ஒருங்கிணைப்பாளர்கள், ``பழைய வாகனங்கள், கடல் சூழலியலுக்கு உகந்ததல்ல, நிலையற்றது, அதிகபட்சம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கே அவை தாக்குப்பிடிக்கும்" என்று இதுபற்றித் தெரிவித்துள்ளார்கள். சராசரியாக ஒரு செயற்கை பவளப்பாறை கட்டமைப்பின் ஆயுள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்.

இதேபோல், 1995-ம் ஆண்டு அலபாமா கடல் பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்தன. அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட ஒபல் புயலில் (Hurricane Opal), அதில் 80 சதவிகிதம் பாகங்கள் புயலுக்கு வேறு எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டன. பின்னர், அவற்றில் சில கண்டுபிடிக்கப்பட்டபோது 50 சதவிகிதம் பாகங்கள் சுமார் நான்கு அடி ஆழத்தில் கடல் தரை மணலுக்குள் புதைபட்டு, பயனற்றுக் கிடந்தன.

துருக்கியில், 1989-ம் ஆண்டு மாநகராட்சியின் 10 பழைய பேருந்துக் கூடுகளை செயற்கைப் பவளப்பாறை திட்டத்துக்காக இஸ்மிர் விரிகுடாவில் பயன்படுத்தினார்கள். அதன்பிறகு, 1991-ம் ஆண்டிலிருந்து கான்கிரீட் கற்களை பிரமிட் வடிவத்தில் அடுக்கி வைத்து செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி, பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

கான்கிரீட் கற்களில் செயற்கை பவளப்பாறைகள்
கான்கிரீட் கற்களில் செயற்கை பவளப்பாறைகள்
Reefmaker/ Wikimedia commons

1989-ம் ஆண்டு பேருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இதுதொடர்பான அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் அதன்பிறகு பேருந்து கூடுகளைப் பயன்படுத்துவதைத் துருக்கி தவிர்த்துவிட்டது. பின்னர், ஜனவரி 1999-ம் ஆண்டு, துருக்கி விவசாயம் மற்றும் கிராமப்புற அமைச்சகம், செயற்கை பவளப்பாறைக் கட்டுமானத்தில் பழைய பொருள்களைப் பயன்படுத்த தடை விதித்தது. 1989-ம் ஆண்டுக்குப் பிறகான அனைத்துத் திட்டங்களிலும் கான்கிரீட், இரும்பு ஆகியவற்றில் இதற்கென வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, செயற்கையாகப் பொருத்தப்படுகின்றன.

பொதுவாக, செயற்கை பவளப்பாறைகளை உருவாக்குவதில் கான்கிரீட் கற்கள் அதிகம் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது. அதில் கால்சியம், சுண்ணாம்பு போன்ற இயற்கையான பவளப்பாறைகளுக்கு ஏதுவானவை கலந்திருப்பதால், மீன்கள் மட்டுமன்றி பல்வேறு கடல்வாழ் சிற்றுயிர்கள் அவற்றின்மீது, பொருத்தப்பட்ட சில மாதங்களிலேயே வாழத் தொடங்கலாம்.

இது மீன்களின் உறைவிடமாகச் செயல்படுவதோடு, அவற்றுக்கானதோர் உணவு உற்பத்தி இடமாகவும் நாம் உருவாக்கும் செயற்கை பவளப்பாறைகளைக் கட்டமைக்கும். போர்ட்லாண்ட் பகுதியில் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்னர், கான்கிரீட் கற்களால் அமைக்கப்பட்ட செயற்கை பவளப்பாறையை ஆய்வு செய்தபோது, அவையனைத்தும் கடல்நீரிலேயே இருந்திருந்தாலும், அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்கூட அவை அதிகபட்ச ஆயுளோடு, தரமாக இருந்தது மட்டுமன்றி, அங்கு மீன் வளமும் அபரிமிதமாக வளர்ந்திருந்தது. மேலும் சில ஆய்வுகள், கான்கிரீட் பாறைகளில் உருவாக்கப்படும் செயற்கையான பவளப்பாறைகளால் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளில் தொடங்கி அதிகபட்சமாக 50 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்கலாம் என்று கூறுகின்றன.

கான்கிரீட் செயற்கை பவளப்பாறைகள்
கான்கிரீட் செயற்கை பவளப்பாறைகள்
Reefmaker/ Wikimedia commons

இந்தியாவிலும்கூட, அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக, செயற்கை பவளப்பாறை அமைக்கும் திட்டங்களை முன்னெடுக்கிறார்கள். அவர்கள் கான்கிரீட் கற்களில் உருவாக்கியவற்றையே கடல் தரையில், கடல் நீரோட்டத்தில் அதிகம் பாதிக்காத இடத்தில் பொருத்துகின்றனர். இயற்கையானதோ, செயற்கையானதோ, எதுவாக இருப்பினும், இத்தகைய கட்டமைப்பு, நீண்ட ஆயுளோடு, நிலையாக ஓரிடத்தில் நிலைத்திருந்து, இடையூறுகள் ஏதுமில்லாமல் இருந்தால் மட்டுமே மீன் வளத்தைப் பெருக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். ஆனால், இலங்கையின் பேருந்து கூடுகளால் அந்தளவுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை அந்த முறையைப் பின்பற்றிய அமெரிக்கா, துருக்கி போன்றவற்றின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.