Published:Updated:

`மனிதகுலத்துக்கே பேரிடராக முடியும்!’ - ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்க முடிவை எடுத்து தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும் முன்வர வேண்டும் - ஸ்டாலின்

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், `இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எளிமையான முறையில் ஹட்ரோ கார்பன் எடுப்பதற்கு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்’ என முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் சில புதிய விதிகளைக் கொண்டு வந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

அதன்படி,``நாட்டில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு இனி சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறுவது என்பது கட்டாயம் கிடையாது. ஆய்வுக்கிணறு அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தவும் அவசியமில்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் இந்தப் புதிய அறிவிப்பால் பெரும் அழிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

``ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்த தேவையில்லை என மத்திய பா.ஜ.க அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதற்கு தி.மு.க சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து அவர், ``மனிதநேயம் சிறிதேனும் இன்றி எடுக்கப்படும் இந்த முடிவுகள், மனிதகுலத்துக்கே பேரிடராக முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. `தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்’ எனச் சட்டமன்றத்தில் உறுதியளித்த அ.தி.மு.க அரசு, அது தொடர்பாக எவ்வித கொள்கை முடிவையும் இதுவரை எடுக்காமல், வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, மத்திய அரசின் செயலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரவேற்று வருகிறது.

ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதை அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குக்கூட இதுவரை அறிவுரைகள் வழங்கிடவில்லை. விவசாயிகள் நலன்களை புறந்தள்ளி மத்திய அரசும் மாநில அரசும் கூட்டு சேர்ந்து தனியார் நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் உதவி உற்சாக்கப்படுத்துவது, தமிழக வேளாண் தொழிலை முற்றிலும் சீர்குலைத்து காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலாகவே தி.மு.க கருதுகிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

எனவே, மத்திய அரசு இந்தப் புதிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அரசிதழில் வெளியிட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியை வலியுறுத்திடவும், நாளை (இன்று 20.01.2020) கூடவிருக்கும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாடோம் என்ற கொள்க முடிவை எடுத்து தமிழக மக்களின் நலன்களைக் காப்பாற்றிடவும் முன் வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பின் செல்ல