Published:Updated:

``இந்தத் தீர்ப்பு மசினகுடிக்கானது மட்டுமல்ல!" யானைகள் வழித்தட தீர்ப்பைக் கொண்டாடும் ஆர்வலர்கள்

யானைகள் வழித்தடம்
யானைகள் வழித்தடம்

யானைகள் வழித்தடப் பாதுகாப்பில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிகழ்வு யானைகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்களிடம் பெரும் நம்பிக்கியை ஏற்படுத்தியுள்ளது.

யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு வழக்கில் 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், நீலகிரியில் யானை வழித்தடங்களில் கட்டப்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் வழித்தடம்
யானைகள் வழித்தடம்

ஒரே வாழிடத்தில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் வாழும் இடமாக உலகிலேயே நீலகிரி பல்லுயிர்ச்சூழல் மண்டலம் மட்டுமே திகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் பல்லுயிர் பெருக்க மண்டலத்தை சுமார் 1,000 யானைகள் கடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை கடக்க இங்கு மட்டும் 22.64 கிலோமீட்டர் நீளமும் 1.5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட வழித்தடத்தைப் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்துகின்றன.

யானைகள் வழித்தடம்
யானைகள் வழித்தடம்

முதுமலை அருகிலுள்ள மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்டுமானங்கள் எழுந்தன. இதைத் தெடர்ந்து சூழலியல் செயற்பாட்டாளர்கள் யானை வழித்தடத்தை மீட்க நீதிமன்றத்தை நாடினர்.

நீலகிரி மாவட்டம் சோலூர், பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் யானைகள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டன. முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதிகளில் சொகுசு விடுதிகள் அதிகளவில் செயல்பட்டு வந்தன. குடியிருப்புக்கான அனுமதி பெற்று தங்கும் விடுதி நடத்தப்பட்டு வருவதாகவும் இவற்றில் சில கட்டடங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

யானைகள் வழித்தடம்
யானைகள் வழித்தடம்

யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட ரிசார்ட்டுகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் 2011 ஜூலை 12 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அனுகினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 38 கட்டடங்கள் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்தக் கட்டடங்களுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்தக் கட்டடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு யானைகள் பாதுகாப்பில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாகவே கருதப்படுகிறது.

யானைகள் வழித்தடம்
யானைகள் வழித்தடம்

இந்தத் தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய ஓசை அமைப்பின் காளிதாஸ், "யானை வழித்தடப் பாதுகாப்பில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இன்றைக்கு உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதுவரை யானைகள் வழித்தடப் பாதுகாப்புக்கு என்று தனிச்சட்டம் கிடையாது. இந்தத் தீர்ப்பின் மூலம் காடுகளுக்கு வெளியே யானைகள் பயன்படுத்தும் வழித்தடத்தைப் பாத்துக்க முடியம். இது மசினகுடிக்கானது மட்டுமல்ல. நாட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும். யானைகள் பாதுகாப்பில் இதுவொரு மைல் கல்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு