Published:Updated:

வெட்டுக்கிளிகள் படை... இயற்கைப் பேரிடரா... மனிதர்களின் பசுமைப் பேரிடரா?

உயிரினங்களுடைய வாழ்வியலுக்கு உகந்த நிலையிலிருக்கும் நிலம் குலைக்கப்பட்டு, பசுமையை வலிய நுழைக்கும்போது, அவை தம் இயல்பை இழந்து அங்கு வாழ்ந்த பூர்வீக உயிரினங்களுக்கு வாழ்வளிக்கும் தகுதியை இழக்கின்றன. அது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றது.

கடந்த ஆண்டு நாசா வெளியிட்ட ஒரு செயற்கைக்கோள் ஒளிப்படம், இந்தியாவும் சீனாவும் அவர்களுடைய நாடுகளைப் பசுமையாக்கிக்கொண்டிருப்பதாகக் கூறியது. ’இந்தியாவைப் பசுமையாக்குதல்’ என்ற சித்தாந்தம் ஆங்கிலேயக் காலனி ஆட்சியின்போது வழங்கப்பட்டது. அந்தச் சித்தாந்தத்தை, அடுத்தடுத்து வந்த அரசுகள் சிற்சில மாற்றங்களோடு தூக்கிப் பிடிக்கத் தொடங்கின. இந்தியாவுக்கான முதல் தேசியக் காடுகள் கொள்கையை பிரிட்டிஷ் வகுத்தது. அந்தக் கொள்கைகள் காடுகளை மர வளர்ப்புத் தொழிற்சாலையாக மாற்றுவதற்கானது. சில பத்தாண்டுகள் கழித்து, இந்திய அரசு அதே கொள்கைகளைக் கொஞ்சம் மாற்றங்களைச் செய்து, காடுகள் பாதுகாப்பு என்ற நோக்கத்தையும் உள்நுழைத்தது. காலப்போக்கில் மரம் வெட்டுவது தடை செய்யப்பட்டு, இயற்கைப் பாதுகாப்பே தலையாயக் கொள்கையாகச் செயல்படத் தொடங்கியது.

அழிப்பதற்கு ஈடாகச் செய்யும் காடுகள் மீட்டுருவாக்கத்தை இனி, பாலைவனப் பகுதிகளிலும் அரை பாலைவனப் பகுதிகளிலும் மேற்கொள்ளலாம்.
சமீபத்திய தேசியக் காடுகள் கொள்கை

இந்தியக் காடுகள், வெப்பமண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள இதர வளரும் நாடுகளில் இருப்பதைவிடச் சிறப்பாகவே பாதுகாக்கப்படுகின்றன. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், நம்முடைய மனதில் இயற்கை என்றாலே, ஆரோக்கியமான சூழலியல் என்றாலே அது பசுமை நிறைந்த பகுதிதான் என்ற சிந்தனை ஆழமாகப் பதிந்துவிட்டது. பாலைவனப் பகுதிகள், வறண்ட நிலங்கள், தரிசான புல்வெளி நிலங்கள் என்று பல்வேறு வகையான நிலப்பகுதிகள் இந்தியாவில் அமைந்துள்ளன. அவையெல்லாம் பசுமையானவை என்ற வகைப்பாட்டிற்குள் அடங்குவதில்லை. பசுமையாக்குகிறேன் என்ற பெயரில் அவை அழிக்கப்படுவதும் நடக்கின்றது. பாலைவனங்களைப் பசுமையாக்குகிறேன் என்றுகூறி நிலத்தைப் பசுமையாக்க முயல்வதைவிட அபத்தம் வேறு எதுவுமே கிடையாது.

இந்த நிலப்பகுதிகளை ’பழுப்பு நிலங்கள்’ என்று கூறலாம். காடுகள் மீட்டுருவாக்கக் கொள்கைகளில்கூட இத்தகைய பழுப்பு நிலங்களுக்கு எதிரான அணுகுமுறைகள் இருப்பதைக் காணமுடியும். இந்தியாவிலுள்ள இயற்கைக் காடுகளில் பலவும் வியாபார நோக்கத்திற்குப் பலியாகிவிட்டிருக்க, அப்படி வியாபார நோக்கோடு பயன்படுத்தப்படும் பகுதிகளுக்கு நிகரான பரப்பளவுக்குக் காடுகளை உருவாக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இயற்கையாக இருக்கின்ற நிலப்பகுதிகளை அழிப்பதோடு நில்லாமல் இவர்கள் பழுப்பு நிலங்களின் சூழலியலைச் சிதைத்து புதிய பசுமையை உருவாக்குகின்றனர். இவர்களுடைய நோக்கம் அழித்த, அழிக்கின்ற காட்டிற்கு நிகராக மற்றுமொரு பசுமையான காட்டை உருவாக்கவேண்டும், அவ்வளவே.

ராஜஸ்தான்
ராஜஸ்தான்
Ji-Elle
உயிரினங்களுடைய வாழ்வியலுக்கு உகந்த நிலையிலிருக்கும் நிலம் குலைக்கப்பட்டு, பசுமையை வலிய நுழைக்கும்போது, அவை தம் இயல்பை இழந்து அங்கு வாழ்ந்த பூர்வீக உயிரினங்களுக்கு வாழ்வளிக்கும் தகுதியை இழக்கின்றன.

சமீபத்திய தேசியக் காடுகள் கொள்கையில், "அழிப்பதற்கு ஈடாகச் செய்யும் காடுகள் மீட்டுருவாக்கத்தை இனி, பாலைவனப் பகுதிகளிலும் அரை பாலைவனப் பகுதிகளிலும் மேற்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்மூலம் அவற்றின் இயல்பான நிலையைக் குலைத்து 'பசுமையாக்க'ப் போகிறார்கள். அந்த முயற்சியில் இயற்கையான முற்றிலும் வேறுபட்ட சூழலியல் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ள தரிசு நிலமோ புல்வெளிக் காடோ அழியப்போவது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. அங்கிருக்கும் உயிரினங்களுடைய வாழ்வியலுக்கு உகந்த நிலையிலிருக்கும் நிலம் குலைக்கப்பட்டு, பசுமையை வலிய நுழைக்கும்போது, அவை தம் இயல்பை இழந்து அங்கு வாழ்ந்த பூர்வீக உயிரினங்களுக்கு வாழ்வளிக்கும் தகுதியை இழக்கின்றன. அல்லது, அங்கு வாழ்ந்துகொண்டிருந்த சில உயிரினங்களுக்குக் கூடுதல் உணவைக் கொடுத்து அவற்றைப் பிரச்னை ஏற்படுத்தும் வண்ணம் எண்ணிக்கையில் அதிகப்படுத்துகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரலாற்று முந்தைய காலத்திலிருந்தே, மரங்களற்ற, தீவிர காலநிலையைக் கொண்ட பகுதிகளில் வாழ்வதற்குரிய பரிணாம வளர்ச்சியைப் பல்வேறு உயிரினங்களுக்கு இயற்கை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான ஒரு பகுதியாக பாலைவனப் பகுதிகளும் அரைப் பாலைவனப் பகுதிகளும் விளங்குகின்றன. மனித நாகரிகங்கள், பேரரசுகள் அத்தகைய மண்ணில்தான் வாழ்வியல், கலை, நாகரிகம் என்று சிறந்து விளங்கின. ஒவ்வொரு நாகரிகமும் தம் நிலவியலுக்குத் தகுந்த வாழ்வியலை அமைத்துக்கொண்டன. இந்த நாகரிகங்களில், விவசாயம் அனைவருடைய தலையாயத் தொழிலாகவும் இருந்ததில்லை. இந்தியாவில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள பாலைவன நாடுகளின் பெரும்பகுதி, மங்கோலியா போன்ற அரை பாலைவன, புல்வெளி நாடுகள் அனைத்துமே கால்நடை மேய்ப்பர் சமூகங்களை, நாடோடிச் சமூகங்களைக் கொண்டிருந்தன. அங்கெல்லாம், விவசாயம் தலையாய தொழிலாக இருந்ததில்லை.

தார்ப் பாலைவனம்
தார்ப் பாலைவனம்
Pixabay

அந்தந்த நிலத்துக்குத் தகுந்த உணவுப் பழக்கங்களை அப்போது கொண்டிருந்தனர். அதையெல்லாம் உடைத்து, எந்த வகை நிலப்பகுதியாக இருந்தாலும் அங்கு விவசாயமே உணவு உற்பத்திக்கான தலையாய தொழிலாக மாறியது நவீன வரலாற்றில்தான்.

இப்போதைய நவீனத்திற்கே வருவோம். 1958-ம் ஆண்டில் இந்திரா காந்தி கால்வாய் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர்தான், ராஜஸ்தானில் விவசாயம் நிலப் பயன்பாட்டில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. விவசாயமே முதன்மையான நிலப் பயன்பாடாக இருக்க வேண்டுமென்ற தாகமே, ஷார்டா - யமுனை இணைப்புக்கு வழிவகுத்தது. ஆனால், அடிப்படையில் ராஜஸ்தானின் தார்ப் பாலைவனப் பகுதி முழுமையாக விவசாயத்திற்கு உகந்ததல்ல. இப்படியாக, இயற்கையின் நிலப்பகுதிகளில் மனிதத் தலையீடுகள் மாற்றங்களை ஏற்படுத்தும்போது, அந்த மாற்றங்களுக்கு ஏற்ப விபரீத விளைவுகளும் இயற்கையில் இருக்கவே செய்யும்.

கடந்த நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், பாலைப் பகுதிகளைப் பசுமையாக்கும் கருத்து பிரபலமடையத் தொடங்கியது. அந்தக் கருத்தைத் தூக்கிப் பிடித்து, பசுமையாக்கக் களமிறங்கியவர்கள் பூர்வீகப் பழுப்பு நிலங்களை அலட்சியப்படுத்தினர். அதே அணுகுமுறை, இந்தியாவின் பனிப் பாலைகளான இமயமலைப் பகுதிகளிலும் தொடங்கின. அதன்விளைவாக, லடாக்கின் தரிசு நிலங்களைப் பசுமையாக்கும் முயற்சி கின்னஸ் ரெக்கார்டு அளவுக்கு மாறியது. இப்படிச் செய்யப்படும் மாற்றங்களுக்குரிய விலையை நேரடியாகவோ மறைமுகவாகவோ இயற்கைக்கு நாம் கொடுத்தாக வேண்டுமல்லவா?

ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மட்டுமே சுமார் 1,70,000 ஹெக்டேர் விவசாயப் பகுதிகளைப் படைவெட்டுக்கிளிகள் அழித்துவிட்டன.

அந்த விலை தற்காலிகமானதாகவும் சில நேரங்களில் நிரந்தரமானதாகவும் இருக்கின்றது. இயல் தாவர வளத்தை ஆக்கிரமிப்புத் தாவரங்களுக்குப் பலி கொடுத்தது மற்றும் பூர்வீக வாழ்க்கை முறையை விவசாய ஆதிக்கத் தொழில்களுக்குப் பலி கொடுத்தது போன்றவற்றை நிரந்தரமான விலையாகக் கூறலாம். தற்காலிகமான விலையாக இப்போது நடந்துகொண்டிருக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை முன்வைக்கலாம்.

2018-ம் ஆண்டு, இரண்டு சீன ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவு, கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள பாலைவனப் பகுதிகளில் 30 சதவிகிதம் மழைப்பொழிவவு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றது. பாலையில் அதிகரித்துள்ள மழைப்பொழிவு, மண்ணின் ஈரப்பதத்தை அதிகரிக்கவே அதிகமாகப் பயிரிட்டு, பாலையைப் பசுமையாக அது வழிவகுத்தது.

மழை குறைவது இயற்கையிலேயே பசுமையான நிலப்பகுதிகளுக்குப் பிரச்னையை ஏற்படுத்துகிறதென்றால், மழை அதிகரிப்பது பாலைவனப் பகுதிகளுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும்.

மழைப்பொழிவு விகிதம் குறையக் காடழிப்பு காரணமென்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தீர்வு பாலையைப் பசுமையாக்குவதுதான் என்று அர்த்தமல்ல. இந்த முரண்பாடான அணுகுமுறையை நாம் தவிர்த்துவிட்டுப் பேசவே முடியாது. மழை குறைவது இயற்கையிலேயே பசுமையான நிலப்பகுதிகளுக்குப் பிரச்னையை ஏற்படுத்துகிறதென்றால், மழை அதிகரிப்பது பாலைவனப் பகுதிகளுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும். அங்கு இயல்பாக என்ன மழையளவு இருக்குமோ அந்த அளவுதான் அதற்கு உகந்தது. இல்லையென்றால், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைப் போலவே வேறு ஏதேனும் உயிரினத்தின் படையெடுப்பும் நிகழலாம்.

இந்திரா காந்தி கால்வாய்
இந்திரா காந்தி கால்வாய்
Shemaroo/Wikimedia

கடந்த ஆண்டு, கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்க மற்றும் ஆசியப் பாலைவனங்களில் பயணித்தன. பாலை நிலங்களிலுள்ள விவசாயப் பகுதிகளில் கிடைத்த உணவுப் பயிர்களை மொத்தமாகச் சாப்பிட்டன. அதன்மூலம் விவசாய வாழ்வுமுறைக்குள் நுழைந்து அதையே சார்ந்துவாழப் பழகிவிட்ட மக்களின் வாழ்வைப் பாதாளத்தில் தள்ளிச் சென்றுவிட்டது. ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் மட்டுமே சுமார் 1,70,000 ஹெக்டேர் விவசாயப் பகுதிகளை அவை அழித்துவிட்டன. பாகிஸ்தான் தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. ஐக்கிய நாடுகளுடைய உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு, இதை இயற்கைப் பேரிடர் என்று அழைத்தது. இந்தப் பிரச்னை 1960-களிலும் 1990-களிலும்கூட ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பும்கூட எப்போதாவது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய படையெடுப்புகளை அவை நிகழ்த்தியுள்ளன. அதற்குக் காரணம் அந்தக் குறிப்பிட்ட ஆண்டில் அதிக உணவு கிடைத்து, அதிக நீர் கிடைத்து அவை அளவுக்கு அதிகமாக இனப்பெருக்கம் செய்துவிடுவதே. இப்போது உணவும் நீரும் ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகக் கிடைப்பதால் அவை எண்ணிக்கையில் ஒவ்வோர் ஆண்டுமே அதிகரிக்கின்றன.

இந்த வகை வெட்டுக்கிளிகள் கடுமையான கோடையில் செயலற்று (Dormant) உறங்குகின்றன. அப்படிச் செயலற்றுக் கிடக்கும் இவை, பாலையில் மழைக்காலம் வரும்போது உயிர்ப்புடன் செயல்படத் தொடங்கும். மழைப்பொழிவால் பாலையில் வளர்கின்ற பசுமையான செடிகளைச் சாப்பிட்டுப் பசியாறுகின்றன. அதன்மூலம் பாலை நிலத்தின் சமநிலையும் குலையாமல் அவை பேணுகின்றன. இத்தகைய உயிரினத்தின் நிலையை, மழையும் பசுமைப் பரப்பும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும்போது எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்?

தார்ப் பாலைவனம்
தார்ப் பாலைவனம்
Pixabay

தீவிரமாகத் தின்று பசுமையைக் கொன்று பாலையைத் தக்கவைத்து இயல் நிலவியலைப் பாதுகாக்கும் அவற்றின் பசி, பசுமை அதிகரிக்கும்போது கூடவே அதிகரிக்கும். அவற்றுக்குத் தேவையான உணவையும் நீரையும் தொடர்ந்து வழங்கிக்கொண்டேயிருப்பதால் அவற்றின் இனப்பெருக்க விகிதமும் முன்பைவிடப் பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். அப்படிக் கூடுகின்ற எண்ணிக்கை விகிதம் மனிதர்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றது. ஆகவே, இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் பேரிடர், இயற்கைப் பேரிடரல்ல மனிதப் பேரிடர். இன்னும் பொருத்தமான பெயர் வேண்டுமென்றால், இது பசுமைப் பேரிடர்.

நாம் முதலில், எங்கு பார்ப்பினும் மரம் நட்டுப் பசுமையாக்கத் துடிக்கும் சில முதிர்ச்சியற்ற சூழலியலாளர்களுக்கு இதைப் புரிய வைக்கவேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பசுமையாக்குவது மட்டுமே தீர்வாகாது. நிலத்தின் தன்மையை உணராமல் மேற்கொள்ளப்படும் மனிதத் தலையீடு, அதற்கு உபகாரம் செய்வதைவிட உபத்திரவமே செய்கின்றது. 2018-19 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவிலும் அரேபிய தீபகற்பத்திலும் ஏற்பட்ட இரண்டு புயல்களே இந்தப் படையெடுப்புக்கு அடிப்படைக் காரணமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தப் புயல்கள் மழைப்பொழிவை அதிகப்படுத்தியுள்ளன. அந்த மழைப்பொழிவு, இந்தப் பேரிடருக்கான பொறியைத் தூவியுள்ளது. அந்தப் பொறி காட்டுத்தீயாக மாறி ஆப்பிரிக்கக் கண்டத்தையும் தென்கிழக்கு ஆசியாவையும் வாட்டியெடுப்பதற்குரிய தீனியை பாலைவனங்களிலிருந்த 'பசுமை' ஏற்படுத்திக் கொடுத்தது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
AP

இந்தப் பசுமைப் பேரிடரைக் கட்டுப்படுத்த, பூச்சிக்கொல்லிகளைத் தெளித்துக்கொண்டிருக்கிறது அரசாங்கம். அது அவற்றின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தலாம். ஆனால், பயிர்கள்மீது பூச்சிக்கொலிகள் ஏற்படுத்தும் விபரீத விளைவுகள் இன்னும் காத்திருக்கின்றன. இப்போது பூச்சிக்கொலிகளைப் பயன்படுத்துகிறோம். இதேபோன்ற இன்னொரு படையெடுப்பு நிகழாமல் தடுக்கவும் நாம் அதே பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தப் போகிறோமா அல்லது நிலத்தின் இயல்பு நிலையான பழுப்புக்குத் திரும்பப் போகிறோமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு