Published:Updated:

ஆஸ்திரேலியாவின் கடன் பத்திரங்களை விற்ற ஸ்வீடன் மத்திய வங்கி!- என்ன காரணம்?

"மிகப்பெரிய காலநிலைப் பிரச்னைகளோடு இருப்பவர்களின் சொத்துகள்மீது எங்கள் வங்கி இனி முதலீடு செய்யாது. அதன்மூலம் கிடைக்கும் லாபம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி" என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா ( Pixabay )

மேற்கு ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து, எண்ணெய் வளம்மிகுந்த கனடிய பிராந்தியமான ஆல்பர்ட்டா ஆகியவற்றில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு மிகவும் அதிகமாக இருப்பதால், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவின் கடன் பத்திரங்களை ஸ்வீடன் மத்திய வங்கி விற்றுள்ளது.

ரிக்ஸ் பேங்க்கின் துணைத்தலைவர், மார்ட்டின் ஃப்ளோடென் (Martin Floden), "மிகப்பெரிய காலநிலைப் பிரச்னைகளோடு இருப்பவர்களின் சொத்துகள்மீது எங்கள் வங்கி இனி முதலீடு செய்யாது. அதன்மூலம் கிடைக்கும் லாபம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி" என்று கூறியுள்ளார்.

வங்கித்துறையில் கடன் வாங்குபவர்கள், முதலீடு செய்பவர்களிடம் கொடுக்கும், நிரந்தர வருமானத்திற்கான சாதனமாக கடன் பத்திரங்கள் பார்க்கப்படுகின்றன.

குயின்ஸ்லாந்து
குயின்ஸ்லாந்து
Pixabay

"ஸ்வீடன் மத்திய வங்கி, காலநிலை மாற்றத்தைச் சரிசெய்வதில் உண்மையாகவே தீவிரமாக இருக்கிறதென்றால், ஆல்பர்ட்டா மாதிரியான பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைத்துள்ள பகுதிகளில்தானே முதலீடு செய்ய வேண்டும்" என்று இதுகுறித்துப் பேசிய ஆல்பர்ட்டாவின் முதல் அமைச்சர் ஜேசன் கென்னியின் பிரதிநிதி கிரிஸ்டின் மியாட் கூறியுள்ளார்.

ஸ்வீடன் வங்கி தங்கள் பத்திரங்களை விற்றது குறித்து, குயின்ஸ்லாந்திடமிருந்தும் மேற்கு ஆஸ்திரேலியாவிடமிருந்தும் இதுவரை எந்த எதிர்வினையும் இல்லை.

மேற்கொண்டு தகவல்களை வெளியிட மறுத்த ஃப்ளோடென், மற்ற பல்வேறு வழிகளில் ஆஸ்திரேலிய மற்றும் கனடியப் பத்திரங்களின் மீது 8 சதவிகிதம் முதலீடு செய்திருப்பதாக மட்டும் கூறியுள்ளார். இங்கிலாந்து வங்கியின் கவர்னர், மார்க் கார்னே கடந்த செப்டம்பர் மாதம், "நிதித்துறை, காலநிலை மாற்ற விளைவுகளை, புவி வெப்பமயமாதல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" என்று கூறியிருந்தார்.