Published:Updated:

கொண்டாட்டத்தால் சிவந்த சிட்னி... காட்டுத்தீயால் சிவந்த மல்லக்கூட்டா... இது, ஆஸ்திரேலிய புத்தாண்டு!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தொடங்கும் முன்பே, சிட்னி - மெல்பர்ன் நகரங்களுக்கு இடைப்பட்ட மல்லக்கூட்டா (Mallacoota) என்ற கடற்கரை நகரம், ரத்தச் சிவப்பு நிறத்திலான வானத்தை உடுத்தியிருந்தது. ஆனால் அது, கொண்டாட்டத்தால் ஏற்பட்டதல்ல!

2020-ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தை உலகமே கொண்டாடியது. தங்கள் மகிழ்ச்சியை வாணவேடிக்கைகள் மூலம் வெளிப்படுத்துவது, பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் பழக்கம். ஆஸ்திரேலியாவும் அப்படித்தானிருந்தது. நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி நகர வானத்தை ஒருமணி நேரத்திற்கும் மேலான வாணவேடிக்கை சிவப்பாக்கின.

ஆனால், இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் தொடங்கும் முன்பே சிட்னி - மெல்பர்ன் நகரங்களுக்கு இடைப்பட்ட மல்லக்கூட்டா (Mallacoota) என்ற கடற்கரை நகரம், ரத்தச் சிவப்பு நிறத்திலான வானத்தை உடுத்தியிருந்தது. ஆனால் அது, கொண்டாட்டத்தால் ஏற்பட்டதல்ல.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

மல்லக்கூட்டா, பால்மோரல் நகரங்களில் தற்போது எரிந்துவரும் காட்டுத்தீயால், வானம் முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மல்லக்கூட்டா கடற்கரைக்கு சுற்றுலா சென்ற 4,000 பயணிகள், இந்த சிவப்பு வான சங்கிலியில் சிக்கிக்கொண்டனர். இன்று மட்டும், இந்த மாகாணத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தில் சிக்கிக்கொண்டவர்களைக் காப்பாற்ற விரைந்த வாகனங்களும், மோசமான வானிலையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய காட்டுத் தீ, தன்னுடைய கோபத்தை இன்னும் தணித்தபாடில்லை. மூன்று மாதங்களாகப் பொல்லாத கொடுமைகளையெல்லாம் இந்த கங்காரு தேசம் கண்டுவருகிறது. ஆஸ்திரேலிய ஊடகங்கள், "விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிழக்கு ஜிப்ஸ்லாண்ட் மாகாணத்தில், காட்டுத்தீ காரணமாகக் கடும் வெப்பஅலை நிலவுகிறது. இதனால் கடந்த திங்கட்கிழமை (30.12.2019) மட்டும் சுமார் 30,000 -க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்" என்று தெரிவிக்கின்றன.

காட்டுத்தீ
காட்டுத்தீ

தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் தனித்தனியாக ஆஸ்திரேலியாவைப் பாதித்துள்ளன. இதுவரை 1,50,00,000 ஏக்கர் நிலம் தீக்கிரையானது. 2,500 -க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்துள்ளன. 1000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர். "ராணுவப் படையினர் மூலமாகவும் ஹெலிகாப்டர் மூலமாகவும் தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்று ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒருபுறமிருக்க, கங்காரு, கோலா கரடி எனப் பல தனித்துவமான காட்டுயிர்களின் சாம்ராஜ்யமான ஆஸ்திரேலியாவை நினைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். காட்டுத்தீயில் பல உயிரினங்கள் உடல் கருகி இறக்கின்றன.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சூசன் லே (Susan Ley), 'சமீப நாள்களில் மட்டும் 30 சதவிகிதம் கோலாக்கள், நியூ சௌத் வேல்ஸ் பகுதியில் இறந்திருக்கலாம். எனினும் காட்டுத்தீ குறைந்த பின்பே உறுதியாகக் கூறமுடியும். கரடிகளைக் காப்பாற்றுவதற்கென்றே 6 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளோம்" என்றார்.

அந்தப் பகுதியில் 28,000 கோலா கரடிகள் இருந்தன என்று முன்னணி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிட்டத்தட்ட 8,400 கோலாக்கள் இறந்திருக்கக்கூடும். "இந்தக் காட்டுத்தீ உண்டாகும் முன்பேகூட கோலாக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டுதான் இருந்தன. 80,000-க்கும் குறைவாகவே இருந்த இவை, ஆரோக்கியமான குட்டிகளை ஈனுவது அரிது என ஆஸ்திரேலியன் கோலா மையம் தெரிவித்திருந்தது.

ஆஸ்திரேலியாவின் மஸ்காட் (mascot) என்று அழைக்கப்படும் கோலாக்கள், நீர் அருந்துவதில்லை. தங்களுக்குத் தேவையான நீரை, யூகலிப்டஸ் இலையில் இருந்தே எடுத்துக்கொள்ளும். ஆனால், குழந்தைகளைப் போல கோலாக்கள் நீர் அருந்தும் காட்சி சமீபத்தில் வைரலானது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர்கள், இதை அவற்றுக்கு ஏற்பட்ட அவலநிலையாகக் கருதுகின்றனர்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது மிகக் கொடிய தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதனாலேயே பல உயிரினங்கள் இறந்துள்ளன.

ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவும் இந்தச் சோகத்தில் மூழ்கியிருந்த நேரத்தில்தான், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கான வாணவேடிக்கையை சிட்னி ஆரம்பித்திருந்தது. துக்க அனுசரிப்பால் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையெல்லாம் ஆஸ்திரேலியா ஒன்றியம் ரத்து செய்திருந்தது. சிட்னியின் இந்தச் செயலை 'முகத்தில் அறைந்தாற்போல்' சீற்றத்துடன் எதிர்கொண்டனர் அந்நாட்டு மக்கள். ஏனென்றால் ஆஸ்திரேலியா, புது வருடத்தை ஆனந்தமாகக் கொண்டாடி வரவேற்கும் நிலையில் இருக்கவில்லை.

`காட்டுத் தீ; கடும் வெப்பம்!’- ஆஸ்திரேலியாவில் தண்ணீருக்காக சாலையை மறித்த கோலா கரடி #Video
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு