Published:Updated:

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம்... தமிழக அரசின் பதில் என்ன?

காவிரி
காவிரி

இனி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக்கொள்வதற்கு, மத்திய அரசே அனுமதி கொடுத்துவிடும். தமிழக அரசு தடுத்தாலும், அது நீர்வளத்துறையின் கீழ் வருகிறது, மாநில அரசு தலையிட முடியாது என விளக்கம் தருவார்கள்.

''காவிரி மேலாண்மை வாரியம் நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து, விளக்கம் தரவேண்டியது மத்திய அரசே தவிர மாநில அரசு அல்ல'' என காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறையின் சார்பில் நேற்று விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், ''இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும். 'சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான வழக்கமான நடைமுறையாகும். இதனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு, இதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது'' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பொதுப்பணித்துறையின் இந்த விளக்கத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையின் விளக்கம்
பொதுப்பணித்துறையின் விளக்கம்

இதுகுறித்து, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் பேசும்போது,

"காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், மத்திய அரசின் நீர்வளத்துறையின்கீழ் கொண்டு வரப்படுவதாக திருத்தம் கொண்டு வந்தது மத்திய நீர்வளத்துறை. அதற்கு எதிராக மக்கள் கேள்விகளை எழுப்பும்போது, மத்திய அரசுதான் விளக்கம் தரவேண்டுமே தவிர, மாநில அரசு ஏன் விளக்கம் அளிக்கிறது. மத்திய நீர்வளத்துறை மாநில பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறதா என்ன? தமிழ்நாட்டு மக்களுக்கு, இறங்கி விளக்கம் சொல்வது கேவலம் என மத்திய அரசு நினைக்கிறது. அந்தப் பணியை தங்களின் முகவர் எடப்பாடி பழனிசாமி செய்துகொள்வார் என்று மத்திய அரசு கருதுகிறது. தமிழக முதல்வரும் அதைச் செவ்வனே செய்துவருகிறார். பொதுப்பணித்துறை முதல்வரின் கீழ்தான் வருகிறது.

மத்திய அரசின் உரிமை பறிப்புக்கு தமிழக அரசு துணைபோகிறது. தவிர, 7A என்கிற புதிய பிரிவின் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மை சீர்கேட்டைத் தடுப்பது ஆகிய அதிகாரங்கள் இந்திய நீர்வளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஆறுகள் அனைத்தும் மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. அதை, மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் மாற்றியிருக்கிறார்கள். அதுவும் சட்டத் திருத்தத்தின் மூலமாகக்கூட அல்ல, ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. அதற்கு நம் தமிழக அரசும் துணைபோகிறது. இனி, கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டிக்கொள்வதற்கு, மத்திய அரசே அனுமதி கொடுத்துவிடும். தமிழக அரசு தடுத்தாலும் அது நீர்வளத்துறையின் கீழ் வருகிறது, மாநில அரசு தலையிட முடியாது என விளக்கம் தருவார்கள். இது தொடர்ந்தால், காவிரியின் உரிமையை நாம் முழுமையாக இழந்துவிடுவோம்.

சம்பளம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளுக்காக எனச் சொல்வது தவறான தகவல் மட்டுமல்ல, விதி மீறலும்கூட. காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16-ல் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பு கூறியது. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு, அந்தத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதாக இந்திய அரசு 2018 ஜூன் 1-ம் நாளிட்ட ஆணையின் வழியாக அரசிதழில் வெளியிட்டது.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்

அந்த அறிவிப்பிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் தற்சார்பான கூட்டுரு நிறுவனம் (Corporate Body) எனத் தெளிவாக அறிவித்தது. இந்த ஆணையத்தின் தலைவரையும், 2 நிரந்தர உறுப்பினர்களையும் வாக்களிக்கும் உரிமை இல்லாத செயலாளரையும் பணியமர்த்துவது இந்திய அரசின் உரிமை. தொடர்புடைய ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சார்பாக இரண்டு இரண்டு பகுதி நேர உறுப்பினர்களை இந்த ஆணையத்துக்கு அமர்த்த வேண்டும் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. அவ்வாறு ஆணையம் அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதன் நிகழ்ச்சி நிரலையும், மற்ற பணிகளையும் முடிவுசெய்துகொண்டு இயங்கும் தற்சார்பு அதிகாரம் ஆணையத்துக்கே உண்டு என்பதையும் 2018 ஜூன் 1 அறிக்கை தெளிவுபடக் கூறுகிறது.

``எனக்கு இன்னும் தகவல் வரலையே!'' காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்... வேளாண் அமைச்சரின் பதில்!

இந்த ஆணையம் செயல்படுவதற்கு, முன் தொகையாக 2 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்கினாலும், அதன் தொடர் செயல்பாட்டுக்கான நிதிப் பொறுப்புக்கு தற்சார்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு 40%, கர்நாடகம் 40%, கேரளம் 15%, புதுச்சேரி 5% என்ற வகையில் பிரித்துக்கொள்ள வேண்டுமென்றும், தங்கள் தங்கள் மாநிலம் தொடர்பான ஆணைய உறுப்பினர்களின் செலவுகளை அந்தந்த மாநிலமே ஏற்க வேண்டும் என்றுதான் விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, சம்பளத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமே இல்லை'' என்கிறார், மணியரசன்.

பொதுப்பணித்துறையின் விளக்கம்
பொதுப்பணித்துறையின் விளக்கம்

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழக பொதுப்பணித்துறைச் செயலாளர் மணிவாசனிடம் பேசினோம்.

"சம்பளம் என்பதை ஒரு உதாரணமாகத்தான் குறிப்பிட்டோம். அதை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. எந்தவொரு ஆணையத்தையும், வாரியத்தையும் ஏதாவதொரு துறையின் கீழ் கொண்டுவருவது வழக்கமான நடைமுறை. பல ஆணையங்கள் இதற்கு முன்பே மத்திய நீர்வளத்துறையின் கீழ் இருந்தது. காவிரி உட்பட சில ஆணையங்கள் தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டுத் தெளிவுபெற்றுத்தான் அந்த அறிக்கையை வெளியிட்டோம். இதனால், ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆறுகள் அனைத்தும் இன்னும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்கிறார் மணிவாசன்.

அடுத்த கட்டுரைக்கு