Published:Updated:

`காக்கப்பட வேண்டிய தமிழகத்தின் சூழலியல் நலன்!' - பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியவை என்னென்ன?

தமிழ்நாட்டின் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்றம், விவசாயம் ஆகியவற்றுக்காக என்னென்ன அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக சட்டப்பேரவையில் வரும் 13-ம் தேதியன்று 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, காகிதமில்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கு தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

மாநில அளவிலான காடுகள் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் அதேநேரம், காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தக்கூடிய காரணிகளில் தமிழ்நாட்டின் நிலை என்ன, அதைச் சரிகட்டுவதில் மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில், தமிழ்நாட்டின் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட்டில் சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்றம், விவசாயம், நீர் பாதுகாப்பு போன்றவற்றிலுள்ள எதிர்பார்ப்புகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். அவர் இந்த பட்ஜெட்டில் இருக்கும் சூழலியல் எதிர்பார்ப்புகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு பட்ஜெட்

காலநிலை ஆணையம்

``தமிழ்நாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த நலத்துக்கான ஆணையம் கிடையாது. ஏனெனில், காலநிலை மாற்றம் என்பது வெறுமனே சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை கிடையாது. மீன்வளம், தொழிற்சாலைகள், விவசாயம், நீர், கடலோர சமூகங்கள், ஆரோக்கியம், கால்நடை என்று பல துறைகளில் பாதிப்புகளை உண்டாக்குகிறது. ஆகவே, முதலமைச்சர் தலைமையில் அதற்கான ஆணையம் மற்றும் காலநிலை திட்டத்திற்கான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வர வேண்டும். இதன்மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் எவ்வளவு கரிமம் வெளியிடுகிறது என்பதை ஒழுங்குபடுத்தவும் 2040-ம் ஆண்டுக்குள் கரிம சமநிலை மாநிலமாகத் தமிழ்நாடு மாறுவதற்கும் வழிசெய்ய முடியும்.

அதுபோக, காலநிலை குறித்த அறிவை பள்ளிகளில் தொடங்கி அனைவரிடமும் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு காலநிலை கல்வி திட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

புதிதாகக் கட்டப்படும், திட்டமிடப்படும் அனைத்து அனல்மின் நிலைய கட்டுமானங்களையும் நிறுத்திவிட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். அனல்மின் நிலையங்களில் கரிம வெளியீடு இருக்கும், மின்சார விலை 6 ரூபாய்க்கும் மேலாக இருக்கும். ஆனால், சூரிய மின் ஆற்றலில் ஒரு யூனிட்டின் விலை 3 ரூபாய். அதில் கரிம வெளியீடு கிடையாது. அதேநேரம், இதை மையப்படுத்தப்பட்டதாக இல்லாமல், பரந்துபட்டதாக, மையப்படுத்தப்படாத மின் உற்பத்தியாக முன்னெடுக்க வேண்டும்.

காற்றாலை மின் உற்பத்தி
காற்றாலை மின் உற்பத்தி
காலநிலை மாற்றம்: ``இனி ஒவ்வோர் ஆண்டும் பேரிடர்கள் நிகழும்!" - எச்சரிக்கும் IPCC அறிக்கை

காற்றாலை மின் உற்பத்தியிலும் பழைய கால இயந்திரங்கள் செயல்படுகின்றன. அவற்றைவிட நவீன இயந்திரங்களை மாற்றினால், சுமார் 20 மடங்கு அதிக மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். தமிழ்நாட்டின் காற்று அதிகமுள்ள காலகட்டமான மே முதல் செப்டம்பர் வரை முழுக்க காற்றாலை மின் உற்பத்தியையே சார்ந்திருக்கும் அளவுக்கு நம்மால் வளரமுடியும். அதற்கான திட்டங்களை, கட்டுமானங்களை, முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும்.

சதுப்புநிலங்கள்

சதுப்புநிலங்களை வகைப்படுத்தி பாதுகாப்பதற்கான திட்டங்கள் வேண்டும். ராம்சார் உடன்படிக்கையின்படி, கோடியக்கரை ஒன்று மட்டும்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்கவுள்ள சதுப்புநிலங்களை வகைப்படுத்தி, அவற்றைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீர் பாதுகாப்பு

நீர்நிலைகளை மீட்டெடுத்து, அவற்றை முழுமையாகச் சீரமைத்து, ஆழப்படுத்த வேண்டும். குறைந்த காலகட்டத்தில் அதீத மழை பெய்யும் நிலையில்தான் காலநிலை இருக்கும். அந்த நீரைச் சேமித்து வைக்கும் வகையில், நீர்நிலைகள் அனைத்தும் அவற்றின் முழு திறனோடு இருக்க வேண்டும். சென்னையின் ஓராண்டு மழைப்பொழிவு சுமார் 1,200 மி.மீ. இந்த அளவு குறுகிய காலகட்டத்தில் பெய்யும்போது, அதைச் சேமித்து வைக்க நீர்நிலைகள் இருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்றால் உடனே அடுத்தடுத்த ஆண்டுகளில் வறட்சியைச் சந்திக்க வேண்டியிருக்கும். மாநிலம் முழுக்க, அனைத்து நீர்நிலைகளையும் அவற்றின் முழு திறனை அடையும் அளவுக்கு சரிசெய்ய திட்டம் வகுக்க வேண்டும்.

நீர் பாதுகாப்பு
நீர் பாதுகாப்பு
தமிழக விவசாயிகள் தலைநிமிர ஸ்டாலின் செய்ய வேண்டியவை என்னென்ன? பட்டியலிடும் செயற்பாட்டாளர்!

தொழில்துறை

வடசென்னை, திருப்பூர், ஆம்பூர், வாணியம்பாடி, கடலூர், தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் அதிக தொழில்மயமாக்கப் பட்ட பகுதிகள். இந்த நகரங்களின் காற்று, நீர், நில மாசுபாடுகள் எந்த நிலையில் உள்ளன, மோசமாக இருந்தால் அதைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், இந்த நகரங்களின் பாதுகாப்புக்கு செய்யவேண்டியது என்ன என்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

சிறுதானியங்கள்

அங்கன்வாடியின் ஒரு பகுதியாக சிறுதானியங்களைக் கொண்டு வர வேண்டும். ரேஷன் கடைகளில் அவை கிடைக்க வேண்டும். அதற்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கொண்டு வர வேண்டும். அனைத்து விவசாயிகளும் சிறுதானியங்களைப் பயிரிட ஊக்குவித்து, உதவ வேண்டும். ஏனெனில், நாம் பயன்படுத்தும் பயிர்கள் அனைத்தும் அதிகமாக நீர்பிடிக்கின்றன. சிறுதானியங்கள் அந்தப் பிரச்னையைச் சரி செய்யும்.

பொதுப் போக்குவரத்து

தமிழ்நாட்டிலுள்ள நகரங்கள் தனிநபர் போக்குவரத்தை ஊக்குவிப்பவையாகவே இருக்கின்றன. அப்படியன்றி, பொதுப் போக்குவரத்தை அதிகமாக ஊக்குவிக்கவேண்டும். சென்னையில் சுமார் 3,000 பேருந்துகளே இருக்கின்றன. ஆனால், சுமார் 6,500 பேருந்துகள் தேவைப்படுகின்றன. கூடுதலாகத் தேவைப்படும் பேருந்துகளை மின் பேருந்துகளாகவே கொண்டுவரவேண்டும். வளர்ந்த நாடு என்பது ஏழைகளும் மத்திய தர வர்க்கத்தினரும் கார்களில் போவதல்ல, பணக்காரர்களும்கூட பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதே. ஆகவே, அதில் அதிக அளவிலான முதலீடுகளைச் செய்ய வேண்டும்.

பழவேற்காடு
பழவேற்காடு

நீரியல் சரணாலயம்

எண்ணூர் மற்றும் பழவேற்காடு பகுதிகளை, பூர்வகுடி மீனவ மக்களின் உரிமைகளை உள்ளடக்கிய, அவர்களுடைய வாழ்வாதாரங்களை அங்கீகரித்த நீரியல் சரணாலயமாக அறிவிக்க வேண்டும். அங்கு ஏற்கெனவே கொட்டப்பட்டிருக்கும் சாம்பல் கழிவுகள் உட்பட அனைத்து தொழிற்சாலை கழிவுகளையும் அகற்றிவிட்டு, ஒரு முக்கியமான சூழலியல் பகுதியாகப் பாதுகாக்க வேண்டும். அதேபோல், பிச்சாவரம், கோடியக்கரை போன்ற முக்கியப் பகுதிகளையும் அறிவிக்க வேண்டும்.

காடுகள் பாதுகாப்பு

மேற்கு மலைத்தொடரிலுள்ள ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுவதற்கான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். முதல்கட்டமாக, காட்டுயிர் காப்பிடங்களிலாவது இதற்கான பணிகளை முன்னெடுக்க திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதுபோக, காட்டுயிர் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதை அதிகப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல், காடு மற்றும் காட்டுயிர் குற்றங்களுக்கு எனத் தனித் துறையைக் கொண்டு வர வேண்டும்."

மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை
Pixabay

சுற்றுச்சூழல், காடு மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் தமிழ்நாடு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் முன்னெப்போதையும்விட தற்போது அதிகரித்துள்ளது. அதோடு, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அதிகமாகச் சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இருப்பது கவனிக்கப்பட வேண்டியது.

நேற்று (09-08-2021) வெளியான சர்வதேச காலநிலை இடை அரசுக் குழுவின் அறிக்கை, இயற்கைப் பேரிடர்கள் மற்றும் சூழலியல் சேதங்களை இனி ஒவ்வோர் ஆண்டும் எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கிறது. ஏற்கெனவே, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்கள் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தமிழ்நாடு அரசு அதன் நிதித் திட்டமிடலில் இதற்கான திட்டங்களையும் அறிவிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு