Published:Updated:

`தமிழகத்தின் நிலத்தடிநீருக்கு ரெட் அலர்ட்!' மத்திய அரசின் அடுத்த புள்ளிவிவரம்

வருண்.நா
HARIF MOHAMED S

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மினரல் வாட்டர் நிறுவனங்கள் அதிகம் என்கிறது அரசின் புள்ளிவிவரம். இது நமக்கு உணர்த்துவது என்ன?

மினரல் வாட்டர்
மினரல் வாட்டர் ( விகடன் இன்ஃபோகிராபிக்ஸ் )

தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி ஒரு தனியார் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தச் செய்தித் தொகுப்பில் மாவட்டம் வாரியாக தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் தண்ணீர் பிரச்னை பற்றி நிருபர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். சென்னையிலிருந்து பேசிய முதியவர் ஒருவர் ``லாரியில வர தண்ணீருக்குப் பஞ்சம், ஆனா டெம்ப்போவில் வர கேன் தண்ணீருக்கும், கடையில விக்கிற பாட்டில் தண்ணிக்கும் பஞ்சமே இல்ல அது எப்படி?" என்று கேட்கிறார். நம்முடைய நிலத்தடிநீர் வளம் பறிபோவது குறித்த மிக முக்கியமான கேள்வி. இதுதொடர்பாக அண்மையில் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஜலசக்தி துறை அமைச்சகம். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மினரல் வாட்டர் நிறுவனங்கள் அதிகம் என்பதுதான் அது.

மினரல் வாட்டர்
மினரல் வாட்டர்
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்

``தண்ணீர்த் தட்டுப்பாடு இருப்பதால், 5 வருடத்துக்கு அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட தடை" என்றொரு அறிவிப்பை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது நம்ம அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு இல்லங்க... ``பெங்களூரில் 5 ஆண்டுகளுக்கு அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டத் தடை" என்று தண்ணீர்ப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பு. நம் தமிழக அமைச்சர்கள்தான், ``தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை" என்று சொல்லிவிட்டனரே. அவர்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவார்களா? நம் அமைச்சர்கள் சொல்வதும் உண்மைதான். தொலைபேசியில் அழைத்து `தண்ணீர் வேண்டும்' என்று சொன்னவுடன் தண்ணீர் வந்துவிடுகிறது. நம்பமுடியவில்லையா? நம்பித்தான் ஆகவேண்டும். நான் சொல்வது `கேன் வாட்டர்'. 1 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலிலிருந்து 20 லிட்டர் கேன் வாட்டர் வரை தங்குதடையின்றி தண்ணீர் கிடைக்கின்றது. மழை பொய்த்துவிட்டதால் லாரியில் வரும் தண்ணீரும், குடியிருப்புகளுக்கு அருகில் இருக்கும் நிலத்தடி நீரும்தான் பற்றாக்குறை ஆகிவிட்டது. ஆனால், கேனில் வரும் மினரல் வாட்டருக்கு எந்தவித பாதிப்புமில்லை.

பின் குறிப்பு - மினரல் கேன் வாட்டரும் நிலத்தடிநீர் மூலமாகக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மினரல் வாட்டர் ஆலைகள்
மினரல் வாட்டர் ஆலைகள்
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்

தமிழகத்தில் மினரல் வாட்டருக்கு பஞ்சமில்லை என்பதற்குச் சான்றாக இந்திய அரசாங்கமே ஒரு புள்ளி விவரப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக மினரல் வாட்டர் ஆலைகள் உள்ள மாநிலம் தமிழகம்தான் என்கிறது மத்திய ஜலசக்தி அமைச்சகம். FSSAI யிடம் முறையாக உரிமம் பெற்று தமிழ்நாட்டில் இயங்கும் மினரல் வாட்டர் ஆலைகளின் எண்ணிக்கை 3,299. தமிழகத்தை அடுத்து இந்தப் பட்டியலில் இராண்டாம் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிர(1882) மாநிலத்தில் மினரல் வாட்டர் ஆலைகளின் எண்ணிக்கை இன்னும் இரண்டாயிரத்தைக்கூடத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மினரல் வாட்டர் ஆலைகள் நிலத்தடி நீரை எடுப்பதற்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ள இடங்களின் எண்ணிக்கை 6,881. அரசு அனுமதி அளித்த 6,881 நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கும் மையங்களில், 1,186 இடங்களில் அளவுக்கு அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த 1,186 இடங்களில் 462 இடங்கள் தமிழகத்தில் உள்ளவை. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் சுரண்டப்படும் பட்டியலிலும் தமிழகத்துக்கே முதலிடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள மினரல் வாட்டர் ஆலைகளில், 18% சதவிகித ஆலைகள் தமிழகத்தில்தான் உள்ளன.
மினரல் வாட்டர்
மினரல் வாட்டர்
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 500 மினரல் வாட்டர் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் ஒவ்வொன்றும், ஒருமணி நேரத்துக்கு 3000 லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதாகக் கூறப்படுகிறது. நாளொன்றுக்கு 7 மணிநேரம் இயங்கும் இந்த ஆலைகளில் சுமார் 42,000 லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. சென்னையைச் சுற்றியுள்ள 500 மினரல் வாட்டர் ஆலைகளும் சேர்ந்து நாளொன்றுக்கு சுமார் 2.1 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன. அப்படியென்றால் தமிழகத்தில் உள்ள 3,299 ஆலைகள் எடுக்கும் நிலத்தடி நீரின் அளவு என்னவாக இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த 3,299 என்பது உரிமம் பெற்ற ஆலைகளின் எண்ணிக்கை மட்டுமே. முறையாக உரிமம் பெறாமல் அரசியல்வாதிகளின் ஆதரவில் இயங்கும் மினரல் வாட்டர் ஆலைகளும் தமிழகத்தில் இயங்கிவருகின்றன.

சென்னையைச் சுற்றியுள்ள 500 மினரல் வாட்டர் ஆலைகள், நாளொன்றுக்கு சுமார் 2.1 கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன.
Vikatan

உலக அளவில் நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்திய மாநிலங்களிலேயே அதிகம் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படும் மாநிலம் தமிழகம்தான் என்கிறது மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வறிக்கை. ஏற்கெனவே சொன்னதுபோல மினரல் வாட்டர் ஆலைகளுக்கு ஆற்று நீரோ மழை நீரோ மூலதனம் அல்ல. நிலத்தடி நீர்தான் மினரல் வாட்டர் ஆலைகளின் மூலதனம். நிலத்தடி நீர் பல வகையில் சுரண்டப்பட்டாலும் தினம்தோறும் பல கோடி லிட்டர் நிலத்தடி நீர், மினரல் வாட்டர் ஆலைகளால்தான் சுரண்டப்படுகிறது. இவ்வாறு நிலத்தடி நீர் சுரண்டப்படுவது தொடர்ந்தால் தமிழ்நாடு பாலைவனமாவதை யாராலும் தடுக்கமுடியாது.

மினரல் வாட்டர்
மினரல் வாட்டர்

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் நிலத்தடிநீர் குறித்து அதிர்ச்சிதரும் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டிருந்தது நிதி ஆயோக். தற்போது நம் நிலத்தடி நீர்வள சுரண்டல் குறித்து வந்திருக்கும் அடுத்த புள்ளிவிவரம் இது.

மக்கள் மழைநீரைச் சேமிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். நிலத்தடிநீர் சுரண்டலைத் தடுக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.