Published:Updated:

`நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வேண்டும்!' - விண்ணப்பித்த டாடா; என்ன செய்வார் ஸ்டாலின்?

நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள இடம்
News
நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள இடம்

கடந்த மே 20-ம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தே தீருவோம் என்று இந்திய ஒன்றிய அரசு முயன்றுகொண்டிருக்கும் ஒரு திட்டம்தான் நியூட்ரினோ. 2013-ம் ஆண்டுக்குப் பின்னர், எழுந்த சர்ச்சைகள் மற்றும் சூழலியல் சிக்கல்கள் காரணமாக உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. அப்போதிலிருந்தே இந்தத் திட்டம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், வழக்கு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும்போதெல்லாம், இந்தத் திட்டம் தொடர்பான சர்ச்சைகளும் எழுந்தவண்ணம் இருக்கின்றன.

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில், பல்லுயிரிய வளம் மிகுந்த மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில் 2010-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தத் திட்டத்தை உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொட்டிபுரம் அம்பரப்பர் மலை
பொட்டிபுரம் அம்பரப்பர் மலை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்தத் திட்டத்துக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பாகத் தொடரப்பட்ட வழக்கில் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், இந்திய ஒன்றிய அரசு, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்காக வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்று கூறப்பட்டது. ஆனாலும் அதேநேரம், தேசிய காட்டுயிர் அனுமதி வாங்காமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்றும் அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி செல்லும் என்கிற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த மே 20-ம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழக வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research) விண்ணப்பித்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்படி, Category A என்ற வகைப்பாட்டின் கீழ்தான் வகைப்படுத்தி பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் கூறியிருந்தது. ஆனாலும், இதை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில், அதாவது Category B வகைப்பாட்டுக்கு மாற்றி, தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து நேரடியாக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது.

நியூட்ரினோ ஆய்வுத் திட்ட மாதிரி
நியூட்ரினோ ஆய்வுத் திட்ட மாதிரி

தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் தமிழ்நாடு பகுதியிலுள்ள காட்டுப் பகுதியை மட்டும் தவிர்த்துவிட்டுப் பிற பகுதிகள் அனைத்தையும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஒன்றிய அரசு அறிவித்தது. இப்படி தமிழ்நாடு அரசின் முடிவையும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இதைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முயல்கிறது.

2018-ம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு எதிராக மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டார். இந்த நடைப்பயணத்தை அப்போது தி.மு.க செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாநில அரசாங்கத்திடம் காட்டுயிர் வாரிய அனுமதி கோரியுள்ள இந்த விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். அதோடு, ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வனத்துறை அனுமதியையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்யவேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து, சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்படும் வகையில் தீர்ப்பைப் பெறவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்த அறிக்கை வாயிலாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

பொட்டிபுரம் அம்பரப்பர் மலை
பொட்டிபுரம் அம்பரப்பர் மலை

தமிழ்நாடு அரசின் உரிமைகளையும் தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல் ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இதற்கென தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிலத்தையும் திரும்பப்பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்த உலகில் பழம் பெருமை வாய்ந்த இடங்களுள் ஒன்றாக, ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ள, மேற்குத்தொடர்ச்சி மலை, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமாகத் திகழ்கிறது. ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டாக அங்கே கடுமையான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. யானைகளின் காட்டு வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சுற்றுலா விடுதிகளை, முழுமையாக இடித்துத் தகர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், லட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து, குகை குடைந்து, நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி மையம் அமைக்கு முயற்சியில், 2010-ம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை, உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, என் தலைமையில் 13 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டோம். இந்த நடைப்பயணத்தை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பொட்டிபுரம் அம்பரப்பர் மலை
பொட்டிபுரம் அம்பரப்பர் மலை

காட்டுயிர்களுக்குக் கேடு இல்லை என மாநில அரசிடம் சான்று கோரி வந்துள்ள விண்ணப்பத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து சுற்றுச்சூழல் சான்றுக்கு தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்தைக் கடந்த பத்தாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து வருகின்றனர். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதன் மூலம் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் என்று கூறி அதை அமல்படுத்த இந்திய அரசு பல வழிகளில் முயற்சி செய்துகொண்டிருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அந்தத் திட்டத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.