Published:Updated:

`தாமிரபரணி பறவைகள் திருவிழா' - திருநெல்வேலியில் களைகட்டிய புகைப்படக் கண்காட்சி

தாமிரபரணி
தாமிரபரணி

இயற்கை வளங்கள், நீராதாரங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும்தான் என்ற கருத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கியமான நோக்கமாகும்.

தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி மற்றும் அதன் கிளை நதிகள், தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்குகின்றன. விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் நீர் வளத்தை வழங்கி வரும் தாமிரபரணி நதி, லட்சக்கணக்கான பறவைகளுக்கும் வாழ்வளித்துவருகிறது. தாமிரபரணி மற்றும் அதன் பாசனக் குளங்களின் பாதுகாப்பு அவசியத்தைப் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியாக, அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் சார்பில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில், தாமிரபரணி பறவைகள் திருவிழா புகைப்படக் கண்காட்சி, ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற்றது.

ஒளிப்படக் கண்காட்சி
ஒளிப்படக் கண்காட்சி

இந்தத் திருவிழாவில், திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் க.திருமால், தூய சவேரியார் கல்லூரி துணை முதல்வர் முனைவர் இன்னாசி ஆரோக்கியா, மாவட்ட அறிவியல் மைய அதிகாரி எஸ்.முத்துக்குமார், அசோகா காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த காட்டுயிர் ஆராய்ச்சியாளர் முனைவர் தி.கணேஷ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மைய ஒருங்கிணைப்பாளர்மதிவாணன், "கடந்த 2011-ம் ஆண்டு முதல் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் சார்பில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடத்திவருகிறோம். இந்த கணக்கெடுப்பின் 10-வது ஆண்டு நிறைவுபெறுவதையொட்டி, தாமிரபரணி பறவைகள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழா, பறவைமனிதர் சலீம் அலி பிறந்தநாளான நவம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட்டு, உலக சதுப்பு நில தினமான பிப்ரவரி 2-ம் தேதி வரை நடைபெற்றது.

சதுப்பு நிலங்களில்தான் 40 சதவிகித அரியவகை பறவைகள் வாழ்கின்றன #WorldWetlandsDay

திருவிழாவின் ஓர் அங்கமான புகைப்படக் கண்காட்சியில், பறவைகள் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களும் ஓவியங்களும், மணல் சிற்பங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி நீர்நிலைகளில் காணப்படும் 70 வகையான பறவைகளின்‌ புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்லுயிர்ச்சூழல், இயற்கை வளங்கள், நீராதாரங்கள் அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும்தான் என்ற பொதுவான கருத்தை மக்களிடத்தில் கொண்டுசேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் மிக முக்கியமான நோக்கமாகும்" என்றார்.

பறவைகள்
பறவைகள்

தொடர்ந்து பேசிய திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் க.திருமால், "பறவைகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பது வனத்துறையினருடைய பொறுப்பு என்று எதிர்பார்க்கக்கூடாது. அது, ஒவ்வொரு தனி மனிதருடைய கடமை. உலகில் 8,800 வகையான பறவைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 1,200 வகையான பறவைகள் உள்ளன. வெளிநாடுகளி லிருந்து வலசை வரும் பறவைகள் அனைத்தும் நம் விருந்தினர்கள்.

நாம்தான் அவற்றை உபசரித்துப் பாதுகாக்க வேண்டும். உங்கள் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகளை யாராவது ஆக்கிரமித்தாலோ அசுத்தம் செய்தாலோ, பயமின்றி எதிர்த்துக் கேள்வி கேளுங்கள். ஏனென்றால், அது உங்களுடைய சொத்து. பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வனத்துறை எப்போதும் ஆதரவளிக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு