Published:Updated:

ஊழிக்காலம் - 11 | கோடிக்கணக்கில் அகதிகள்... காலநிலை மாற்றத்தால் எதிர்காலச் சமூகம் என்னவாகும்?

மத்திய அமெரிக்க அகதிகள்
News
மத்திய அமெரிக்க அகதிகள் ( AP )

காலநிலை மாற்றத்தை 'Threat Multiplier' என்று வர்ணிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கெனவே இருக்கிற அச்சுறுத்தல்களைப் பலமடங்கு பெரிதாக்குவது காலநிலை மாற்றத்தின் பண்பு.

மிக மோசமாக வெயில் அடிக்கிறது, நாக்கு வறண்டுபோய் நிழல் தேடி அலைகிறோம் என்று வைத்துக்கொள்வோம். வெக்கை தாளாமல் ஏற்கெனவே எரிச்சலில் இருக்கும் நம்மிடம் யாராவது வேண்டுமென்றே வம்பிழுத்தால் என்ன ஆகும்? நிச்சயம் கைகலப்பு ஏற்படும். இப்போது சண்டைக்கு யார் முழுக்காரணம்? நம்மை வம்பிழுத்தவரா? வெயிலா? அவர் வம்பிழுக்கவில்லை என்றால் பிரச்சனை வந்திருக்காது, ஆனால் அதே சமயம் வெயில் வாட்டி வதைக்காவிட்டால் நாமும் கொஞ்சம் கோபப்படாமல் இருந்திருப்போம், இல்லையா?

காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் பூசல்களும் போர்களும் ஏற்படுமா என்று கேட்டால், இந்த உதாரணத்தைத்தான் பதிலாகச் சொல்லமுடியும். காலநிலை மாற்றத்துக்கும் பூசல்களுக்குமான தொடர்பு இதுபோன்றதுதான், நேரடியாக வரையறுக்க முடியாது.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காலநிலை மாற்றத்தால் எதிர்காலச் சமூகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றங்களை ஆராயும் விஞ்ஞானிகள், "காலநிலை மாற்றம் மட்டுமே இந்தப் போருக்குக் காரணம் என்று நேரடியாக ஒருபோதும் சொல்லிவிட முடியாது. ஆனால், காலநிலை மாற்றம் போர்களுக்கும் பூசல்களுக்கும் வினையூக்கியாக இருக்கும்" என்று தெரிவிக்கிறார்கள். சில குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு, காலநிலை மாற்றம் முக்கியமான காரணமாகக்கூட இருக்கும் என்பதையும் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகள், பூசல்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வழிவகுக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதிப்பின் அளவும் காலநிலை மாற்றத்தின் பங்களிப்பும் இடத்தைப் பொறுத்து மாறுபடும், அவ்வளவே.

போர்கள், உள்நாட்டுக் கலவரங்கள், கலகங்கள் ஆகியவை சிக்கலான பின்னணியைக் கொண்டவை. பலநாள்களாக இரண்டு தரப்பிலும் இருந்த புகைச்சல், கலவரமாக வெடித்ததற்கு மட்டும் ஒரு காரணத்தை நாம் கண்டறிய முடியுமே தவிர, இதுவே முழுக்காரணம் என்று எதையும் நாம் குறிப்பிட்டுச் சொல்லிவிடமுடியாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தண்ணீர், உணவு, ஆற்றல், மருத்துவ வசதி/உடல்நலம், போதுமான வருமானம், வாழ்வாதாரம் ஆகியவை இருந்தால் மட்டுமே ஒரு சமூகத்தில் மனிதன் பாதுகாப்பாக இருக்க முடியும். அரசியல் நிகழ்வுகள், வன்முறை, பூசல்கள்/முரண்கள், புலம்பெயர்தல், ஒன்றிணைந்து செயல்படுதல், அமைப்புகள் ஆகியவை ஒரு சமூகத்தின் நிலையான தன்மையை நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கக்கூடியவை.

காலநிலை மாற்றம், இவை எல்லாவற்றையும் தீவிரமாக பாதிக்கக்கூடியது. கடந்த பல வாரங்களாக, காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் உணவு, நீராதாரம், வாழ்வாதாரம், மக்களின் உடல்நலம் ஆகியவை எப்படி பாதிக்கப்படும் என்பதைப் பார்த்துவருகிறோம். இவையெல்லாம் பாதிக்கப்படும்போது, சமூகத்தின் சமநிலை குலையும். அப்படிப்பட்ட சமூகம், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடிய ஒரு வெடிகுண்டைப் போல அதீத அழுத்தத்திற்குத் தள்ளப்படுகிறது.

மியான்மர் மக்கள் போராட்டம்
மியான்மர் மக்கள் போராட்டம்

போராட்டங்கள், கலகங்கள், இரு சாராருக்கு இடையே நடக்கும் கலவரங்கள் போன்ற சமூகப் பிரச்சனைகள், உள்நாட்டுப் போர், கிளர்ச்சி, தீவிரவாதம் போன்ற ஆயுதமேந்திய கலவரங்கள் ஆகிய இரு வகைப் பூசல்களுக்கும் காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் வினையூக்கியாக இருக்கும். சூடானின் டார்ஃபர் பகுதியில் 2007ல் நடந்த கொடுமைகளை விவரிக்கும் பல வல்லுநர்கள், "உலகின் முதல் காலநிலைப் பூசல் (Climate conflict) இது" என்று குறிப்பிடுகிறார்கள். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வாழ்வாதார இழப்பும் வறட்சியும் இந்தப் போருக்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

2005-2014 காலகட்டத்தில், உலக அளவில் வறட்சி விகிதத்தையும் (Palmer Drought Severity Index) பூசல்களையும் ஒப்பிட்டுப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள், அதிகமாக வறட்சி இருக்கும் நாடுகளில் கலவரங்களும் போர்களும்கூட அதிகமாக இருக்கின்றன என்கிறார்கள். பொதுவான வாழ்க்கைச் சூழலில் அசௌகரியங்கள் அதிகரிக்கும்போது, சக மனிதன் மீதான அன்பு குறைந்து மூர்க்கமும் வன்முறையும் அதிகரிப்பது வரலாற்றில் தொடர்ந்து நடந்துவருகிறது என்பதை உளவியலாளர்களும் உறுதிசெய்கிறார்கள். சில பரிசோதனைகளின்போது, சோதனை அறையின் வெப்பநிலையை அதிகரித்தால், வன்முறை சார்ந்த முடிவுகளையே மனிதர்கள் எடுக்கிறார்கள் என்பதையும் உளவியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கைச் சீற்றங்கள் அதிகமாகும்போது, ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுக் கலவரங்களின் கால அளவும் அதிகரிக்கிறது. கடந்த நூற்றாண்டின் மொத்த சமூகப் பிரச்சனைகளில் கிட்டத்தட்ட 20% மோதல்களுக்கு ஏதோ ஒரு வகையில் காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

இதில் இன்னொரு அம்சமும் உண்டு - போர் அல்லது உள்நாட்டுக் கலவரங்களால் ஏற்கனவே நிலையில்லாத சமூக அமைப்பைக் கொண்ட நாடுகளில், காலநிலை மாற்றம் ஒரு புதிய பிரச்சனையாகக் குறுக்கிடுகிறது. அப்படிப்பட்ட சூழலில் காலநிலை மாற்றத்தையும் இயற்கைச் சீற்றங்களையும் எதிர்கொள்வதற்கான முயற்சிகள் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை. இருக்கும் வன்முறையோடு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் சேர்ந்துகொண்டு மக்களை அலைக்கழிக்கிறது.

நேரடியான கலகம் இல்லாவிட்டாலும், பல ஆண்டுகளாகவே வன்முறையின் விளிம்பில் இருக்கும் இடங்களும் சமூகங்களும் ஆபத்தானவை. வறட்சியோ வெள்ளமோ எந்த ஒரு சிறிய இயற்கை சீற்றம் வந்தாலும் அந்த சமூகங்களில் வன்முறை தொடங்கிவிடும். அது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கணிப்பதும் கடினம்.
உயரும் வெப்பநிலை
உயரும் வெப்பநிலை

எதிர்காலத்தில் நான்கு டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை அதிகரித்துவிட்டால், நாம் இருமடங்கு கூடுதலான போர்களையும் பூசல்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறது ஒரு ஆய்வு. வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் வன்முறைச் சம்பவங்களால் மட்டும் 2030க்குள் 3,93,000 பேர் இறக்க நேரிடும்! காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவு/குடிநீர்த் தட்டுப்பாடு, நோய்கள், இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றாலும் ஏற்படப்போகிற உயிரிழப்புகளையும் சேர்த்துக் கணக்குப் போட்டால் தலைசுற்றுகிறது!

இயற்கைச் சீற்றங்களுக்குப் பிறகு அனைவரும் மனிதநேயத்துடன் ஒன்றிணைந்து கைகோப்பது அடிக்கடி நடப்பதுதான். ஆனால், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நிலைமை அப்படியே இருக்கும் என்று சொல்லமுடியாது. தவிர, விஞ்ஞானிகளின் கணிப்பை கவனித்தால், எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களுக்குப் பிறகு மீண்டு எழுவதற்கான கால இடைவெளியும் இருக்காது என்பது புரிகிறது. தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும் சமூகம் எப்படி எழுந்து நிற்கும்?

கடுமையான இயற்கைச் சீற்றத்தால் மீளவே முடியாமல் நொடித்துப்போன சமூகங்களும் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் வன்முறையும் மூர்க்கமும் மிக மோசமாக இருக்கும். நீர் ஆதாரங்கள், உணவு, வாழ்வாதாரம், வருமானம் என்று எல்லாமே பாதிக்கப்படும்போது நிச்சயம் மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அந்தந்த அரசுகள் எப்படி இதை எதிர்கொள்கின்றன என்பதைப் பொறுத்து வன்முறையின் விகிதம் அமையும்.

ஊழிக்காலம்
ஊழிக்காலம்

வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போதும் வெள்ளம்/வறட்சி ஏற்படும்போதும் சமூகங்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கின்றன என்பதற்கு நம்மிடம் சமீபகால வரலாற்றிலேயே பல சான்றுகள் உண்டு. அவற்றை ஆழமாக அலசினாலே அரசுகள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், கடல்மட்டம் உயர்தல் என்பது புத்தம்புதிய சிக்கல். அது வடியாத வெள்ளநீரைப் போன்றது, ஒரு நிரந்தர இழப்பு, பிரமாண்ட அச்சுறுத்தல். இது எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது மனித இனத்திற்கு சரியாகத் தெரியாது. கடல்மட்டம் உயர்தல் என்பது ஒரு சிறு உதாரணம்தான். காலநிலை மாற்றம் என்பது இதுபோன்ற பல பிரச்சனைகளை, நாம் அறியாத பல சிக்கல்களைக் கொண்டது. பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் மட்டுமே இந்தக் கட்டுரையில் முக்கியமாகப் பேசப்பட்டிருக்கின்றன. காலநிலை மாற்றத்தால் குடும்ப வன்முறை, சாதி ரீதியான வன்முறை, இனவாத வன்முறை, பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் ஆகியவை அதிகரிக்குமா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் அலசி வருகிறார்கள்.

"எல்லாச் சமூகங்களின் சக்கரங்களும் வளம்/செழிப்பு என்ற எண்ணெயால் இயக்கப்படுகின்றன" என்கிறார் சூழலியலாளர் டேவிட் வாலஸ்-வெல்ஸ். போதுமான வளங்கள் இல்லாத எதிர்கால சமூகத்தில் எல்லாமே பிரச்னைக்குரியதாகத்தானே இருக்கும்?!

வளங்களை ஒழுங்காக மேலாண்மை செய்யாவிட்டாலோ வளங்களுக்குத் தட்டுப்பாடு இருந்தாலோ அங்கு எந்த அளவுக்குப் பதற்றம் நிலவுகிறது என்பதை அனைவரும் அறிவோம். "குழாயடி சண்டை" என்று நாம் போகிற போக்கில் கிண்டலடிக்கும் ஒரு விஷயம்கூட, நீர்வளத்துக்கான பெண்களின் தினசரிப் போராட்டத்தின் பிரதிபலிப்புதானே! உலகில் யாருக்குமே போதுமான அளவில் எதுவுமே கிடைக்காவிட்டால் நிலைமை என்னவாகும்?! நம் கற்பனைக்கு எட்டாத எதிர்காலம் இது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்த எதிர்காலமே நிதர்சனமாகிவிடும்.

தண்னீர்ப் பஞ்சம்
தண்னீர்ப் பஞ்சம்
ப.கதிரவன்

காலநிலை மாற்றத்தை 'Threat Multiplier' என்று வர்ணிக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கெனவே இருக்கிற அச்சுறுத்தல்களைப் பலமடங்கு பெரிதாக்குவது காலநிலை மாற்றத்தின் பண்பு. சமூக ஏற்றத்தாழ்வுகள், மோசமான வள மேலாண்மை, மத ரீதியான பிரிவினை,பாலின வேறுபாடு, இனவாதம் மற்றும் சாதிக்கட்டமைப்புகளால் ஏற்பட்டிருக்கிற பிளவுண்ட தன்மை என்று ஏற்கெனவே ஒற்றைக்காலில் கஷ்டப்பட்டு நின்றுகொண்டிருக்கும் ஒரு சமூகத்த்தைத் தலைகுப்புறத் தள்ளிவிடவேண்டுமானால் காலநிலை மாற்றம் என்கிற ஒரு சுண்டுவிரலின் அழுத்தம் போதும்.

காலநிலை மாற்றத்தால் பூசல்களும் கலவரங்களும் வெடிக்கும்போதும் வாழ்வாதாரங்கள் அழியும்போதும் மக்கள் புலம்பெயர்வதும் அதிகரிக்கும். அவர்களின் நிலை என்னவாகும்? இது பற்றி உலக அரசுகள் என்ன நினைக்கின்றன? இதற்குத் தீர்வு காண்பது மிகவும் கடினம் என்கிறார்களே ஏன்?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...