Published:Updated:

`இது பிரேசிலுக்கான பிரச்னை மட்டும் கிடையாது!' - அமேசான் தீயால் ஏற்படப் போகும் அழிவுகள்

பிரேம் குமார் எஸ்.கே.

பிரேசில் பிரதமர் ஜெயிர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்களின் அழிவு உச்சத்தை எட்டியது!

Amazon Fire
Amazon Fire ( AP )

சிறுவயது முதலே அமேசான் காடுகள் குறித்து பல்வேறு தகவல்களை நாம் கடந்து வந்திருப்போம். பள்ளிப் பாடம் தொடங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் வரை அமேசான் தொடர்பான ஏதோ ஒன்று, நம் கண்ணில் தவறாமல் தென்படும். பல்வேறு சிறப்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் அமேசான் மழைக் காடுகள் கடந்த 3 வாரங்களாகப் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.

Amazon Fire
Amazon Fire
AP

கோடைக்காலங்களில்கூட, அமேசான் மழைக்காடுகளில் அத்தனை எளிதில் தீ விபத்து ஏற்பட்டுவிடாது. அங்கு நிலவி வரும் ஈரப்பதம் அதற்கு முக்கியமான காரணம். உலகின் மிகப்பெரிய காடாக அமேசான் அறியப்படுகிறது. சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. லத்தீன் அமெரிக்காவின் சுமார் 40 சதவிகித பகுதியை இந்தக் காடு கொண்டுள்ளது.

மேலும் இந்த மழைக்காடுகள் சுமார் 9 நாடுகளில் பரந்து விரிந்து இயற்கையான பசுமைப் போர்வையாக விரிந்திருக்கிறது. பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈகுவேடார், பிரெஞ்ச், கயானா, பெரு, சுரிநேம், வெனிசூலா ஆகிய நாடுகளில் அமேசான் காடு படர்ந்து காணப்படுகிறது. 60 சதவிகித அமேசான் காடு பிரேசில் நாட்டில் இருக்கிறது. பிரேசிலில்தான் தற்போது காட்டுத் தீ கடுமையாகப் பரவி வருகிறது. மொத்தக் காட்டின் பரப்பளவில் 2.1 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருக்கிறது.

Amazon
Amazon

அமேசான் மழைக்காடுகளை பல்லுயிர் சரணாலயம் என்றும் அழைக்கிறார்கள். பூமியில் இருக்கும் இனங்களில் 4-ல் ஒரு பங்கை தன்னுள் கொண்டுள்ளது இந்த அமேசான். உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. சுமார் 30,000 வகையான செடிகள், 2,500 வகையான மீன்கள், 1,500 பறவைகள், 500 பாலூட்டிகள், 550 ஊர்வன மற்றும் 2.5 மில்லியன் பூச்சிகள் இருப்பதாக ACTO (Amazon Cooperation Treaty Organization) அமைப்பு கூறுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 2,200 புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கின்றன.

பலரும் அறிந்த அமேசானின் மற்றொரு பெயர் `பூமியின் நுரையீரல்’. உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தில் சுமார் 20 சதவிகிதத்துக்கும் மேலாக அமேசானில் இருந்து கிடைக்கிறது. மேலும் அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கிகொள்கிறது. அமேசான் ஆறு உலகின் மிக நீளமான ஆறு. இது சுமார் 6,900 கிலோமோட்டர் ஓடுகிறது. இந்த அமேசான் நதி மற்றும் அதன் கிளை நதிகள் உலகின் மொத்த நன்னீரில் 20 சதவிகித நீரைத் தருவதாகப் புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.

Tribes on Amazon
Tribes on Amazon

மேலும் இந்த அடர்ந்த மழைக்காடுகளில் சுமார் 420 பழங்குடிகளைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்திய பழங்குடியினரும் அடக்கம். அமேசானில் இருக்கும் இந்திய பழங்குடியினர் சுமார் 86 மொழிகளை பேசுவதாக ACTO (Amazon Cooperation Treaty Organization) அமைப்பு கூறுகிறது. அமேசானில் இருகும் பெரிய பழங்குடியின இனமாக `டிகுனா’ இனம் அறியப்படுகிறது. சுமார் 40,000 மக்கள் கொண்ட இந்தப் பழங்குடியினர் பிரேசில், பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர்.

காடு அழிப்பு... கனிமவளக் கொள்ளை... பழங்குடிகளை விரட்டும் பிரேசில்!

இத்தனை பெரிய அமேசான் மழைக்காடு தற்போது மரங்கள் வெட்டப்படுவதாலும் பெரும் காட்டுத் தீ சம்பவங்களாலும் பெரும் அழிவைச் சந்தித்து வருகிறது. உலகில் இத்தனை உயிர்களை வாழவைக்கும் அமேசான், கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 20 சதவிகிதம் அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதற்கு காரணம் பெரும்பாலான காட்டுத்தீ, மனிதர்களால் ஏற்படுத்தப்படுவதுதான்.

Amazon Fire
Amazon Fire
AP

தற்போதைய பிரேசிலின் பிரதமர் ஜெயர் போல்சொனாரோ 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் பதவிக்கு வந்த பின்னர், மரங்கள் அழிவு உச்சத்தை எட்டியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலையில் மட்டும் பன்மடங்கு அதிகமாகக் காடு அழிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் தரும் தகவலின்படி கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2,254 சதுர கிலோமீட்டர் காடு அழிப்பு அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 278 சதவிகிதம் அதிகம்.

மேலும், விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் புள்ளிவிவரக் கணக்குகளின்படி, பிரேசிலில் இந்த ஆண்டு தற்போது வரை 73,000 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை அமேசானில்தான் பதிவாகியுள்ளன. இதுவே 2018-ம் ஆண்டு 39,759 ஆக உள்ளது. எத்தனை வேகமாக அமேசான் அழிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒன்றே சான்றாகும்.

Pray For amazon
Pray For amazon

இதற்குப் பெரும்பாலும் சொல்லப்படும் காரணங்கள், ஒன்று வளர்ச்சி, மற்றொன்று பெரு விவசாயிகள். பிரேசில் அதிபர், `விவசாயிகள் நிலத்தில் தீ வைக்கும் காலம் இது. இதன் மூலமாக தான் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை நாங்கள் சரிசெய்துகொள்வோம்” என்று தெரிவித்தார். பிரேசில் அரசு தொடர்ச்சியாக வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதாக மற்ற நாடுகள் குற்றம்சாட்டி வருவதுடன் பிரேசில் அரசுக்கு வழங்கிய நிதி உதவிகளியும் நிறுத்தப்போவதாக ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

பற்றியெரியும் உலகின் நுரையீரல்... அமேசான் தீ சொல்லும் அழிவுச்செய்தி! #PrayforAmazonas

ஒரு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், அதில் சிக்கியிருப்பவர்களை மீட்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம். `அமேசான் காட்டில் தீ என்பது பிரேசிலின் பிரச்னை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த உலகின் பிரச்னை' எனக் கவலைதோய்ந்த குரலில் பேசுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.