Published:Updated:

ஓராண்டில் 1 மில்லியன், மொத்தம் 11 மில்லியன் விதைகள்! ஆர்டிக் விதை வங்கியின் டூம்ஸ் டே திட்டம் என்ன?

டூம்ஸ் டே விதை வங்கி
டூம்ஸ் டே விதை வங்கி ( Riccardo Gangale )

உலகம் எப்போது வேண்டுமானாலும் பேரழிவைச் சந்திக்கலாம். மனித இனம், அதன் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், மக்களுடைய உணவுப் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை ஏற்படாமல் இருக்கத்தான் இந்த ஆர்டிக் விதை வங்கி.

ஸ்வால்பார்டு உலக விதை வங்கி 2008-ம் ஆண்டில் ஆர்டிக் பிரதேசத்தின் ஒரு மலைப்பகுதியில் அமைக்கப்பட்டது. முக்கியமான, அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய பயிர்களின் மரபணுக்களைப் பாதுகாத்து வைப்பதற்காக இந்த விதை வங்கி அமைக்கப்பட்டது.

எதற்காக விதைகள் பாதுகாக்கப்பட வேண்டும்?

ஸ்வால்பார்டு சர்வதேச விதைப் பாதுகாப்பு வங்கி (டூம்ஸ் டே வால்ட்)
ஸ்வால்பார்டு சர்வதேச விதைப் பாதுகாப்பு வங்கி (டூம்ஸ் டே வால்ட்)

இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை, பூமியின் நிலை வேறு. அது முடிந்த பிறகு அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியது. பூமியில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதைச் சர்வதேச அளவில் பூமிவாசிகளுக்குப் புரியவைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை, பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அணு ஆயுதங்களால் மட்டுமே பேரழிவை ஏற்படுத்த முடியும் என்றில்லை. உயிரியல் போர் மூலம் நோய்களைப் பரப்புவது, சர்வதேச உணவுப் பாதுகாப்பை இல்லாமல் ஆக்குவது மட்டுமன்றி, இன்னும் பல ஐயங்கள் பூமிவாசிகளுக்கு ஆபத்தாக இருக்கின்றன. உலகளவில் 30 நாடுகளில் 450 அணு உலைகள் செயல்படுகின்றன. அதுபோக, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது. இவையெல்லாம் போதாதென்று, புவி வெப்பமயமாதலும் காலநிலை மாற்றமும் மோசமான பாதிப்புகளுக்கு எளிய மக்களை உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன.

உலகம் எப்போது வேண்டுமானாலும் பேரழிவைச் சந்திக்கலாம். மனித இனம், அதன் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், மக்களுடைய உணவுப் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? ஒருவேளை, உணவுப் பயிர்கள் பேரழிவில் மொத்தமாகத் துடைத்தழிக்கப்பட்டால்...

அப்படியான நிலை ஏற்படும்போதெல்லாம், அதிலிருந்து உணவுப் பயிர்களை மீட்டுக்கொண்டு வருவதற்காகத்தான் இந்த ஆர்டிக் விதை வங்கி. இதில், லட்சக்கணக்கான உணவுப் பயிர் வகைகளின் விதைகள் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுகின்றன. உலகமே அழிந்தாலும், இதற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாதவாறு இதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்புக்காகவே, டூம்ஸ் டே வால்ட் (Doomsday vault) என்று அழைக்கப்படுகின்றது.

டூம்ஸ் டே வால்ட், நார்வேவுக்கும் வட துருவத்துக்கும் நடுவிலுள்ள ஸ்பிட்ஸ்பெர்கென் என்ற தீவிலுள்ள ஸ்வால்பார்டு மலைக்கு அருகில் அமைந்துள்ளது. விதைகளைப் பராமரிப்பதற்காக மட்டும் ஓராண்டில் ஒருசில நாள்களுக்கு மட்டுமே திறந்திருக்கும், மற்ற நாள்களில் மூடியேதானிருக்கும்.

கடந்த செவ்வாய்க்கிழமை, இந்தியா, மாலி மற்றும் பெருவிலுள்ள 30 விதை வங்கிகள், தங்களிடமிருந்த விதைகளை இங்கு சேமித்து வைக்கக் கொடுத்துள்ளன. பிரிட்டனில் இளவரசர் சார்லஸினுடைய ராயல் பொடானிக்கல் கார்டனிலிருந்தும் விதைகள் இந்த விதை வங்கிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. புதுவகையான பயிர்களை உருவாக்குவதற்காக, இருக்கின்ற பயிர்களை மேம்படுத்துவதற்காக, பல்வேறு தாவர வகைகளும் இங்கு வளர்க்கப்படுகின்றன. உலகளவில், 7000 வகையான தாவரங்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால், நம்முடைய உணவில் 60 சதவிகித கலோரிகளை வழங்குவதில், சோளம், கோதுமை, அரிசி ஆகிய மூன்று வகையான பயிர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே, காலநிலை அவசரம் நம் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ளதாக உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இமயமலையில் அமைந்துள்ள இந்தியாவின் விதை வங்கி
இமயமலையில் அமைந்துள்ள இந்தியாவின் விதை வங்கி

பூமியில் வாழும் அனைத்து மக்களுக்குமான உணவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தச் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. உணவுப் பயிர்களிலுள்ள பன்மைத்துவத்தைப் பாதுகாத்தால்தான், மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கியமான உணவு கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், விவசாயிகளுக்கு, அதிலும் குறிப்பாக சிறுகுறு விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு அமைய எதிர்காலத்தில் இந்த விதைப் பாதுகாப்பு வங்கி உதவும்.

சர்வதேச அளவில் 9 பேரில் ஒருவர், தன்னுடைய ஒருநாளை பசியோடுதான் கழிக்கிறார் என்கின்றது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவுப் பாதுகாப்புத் திட்டத் தரவு. இப்போதே நிலை இப்படியிருக்க, காலநிலை அவசரம், பருவநிலையில் ஏற்படுத்துகின்ற வேறுபாடுகளால், உணவு உற்பத்தியின் அளவும் தரமும் குறைந்துகொண்டேயிருக்கிறது.

இப்போது நிலவுகின்ற காலநிலை ஆபத்துகளைக் கருத்தில் கொண்டுதான், இந்தச் சர்வதேச விதைப் பாதுகாப்புத் திட்டமே தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது திறக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை வரைக்கும் திறந்து வைக்கப்பட்டிருந்த இந்த விதை வங்கிக்கு இதுவரை ஒரு மில்லியன் விதைகள் பல்வேறு நாடுகளிலிருந்து சேமித்து வைப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன.

2015-ம் ஆண்டு, சிரியா உள்நாட்டுப் போரினால் அலெப்போ நகரத்திலிருந்த விதை வங்கி நாசமானது. அப்போதுதான் முதன்முறையாக டூம்ஸ் டே விதை வங்கியிலிருந்து விதைகள் திருப்பி வாங்கப்பட்டன. பிறகு, அவர்கள் 2017-ம் ஆண்டு அந்த விதைகளைப் பெருக்கியபின் மீண்டும் திருப்பி டூம்ஸ் டே வங்கியில் விதைகளைத் திருப்பிச்செலுத்தினர்.

இந்த ஆண்டு சேகரிக்கப்பட்டவற்றோடு சேர்த்து இதுவரையிலான கணக்குப்படி, அங்கு 11 மில்லியன் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஸ்வால்பார்டு விதை வங்கி மின்சாரத் தொடர்பை இழந்தாலும்கூட, விதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மிகவும் குளிர்ச்சியான ஆர்டிக் பிரதேசத்தில் அது அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், காலநிலை அவசரத்தினால் இந்த இடமும் இப்போது ஆபத்தில் இருப்பதாக ஐ.நா உணவுப் பாதுகாப்பு அமைப்பின் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த முறை திறந்தபோதுகூட, ஆர்டிக் பிரதேசத்தில் பனிப்பாறை உருகியதால் அதிகமான நீர், திறக்கும்போது வால்டிற்குள் புகுந்துவிட்டதாகச் சர்வதேசச் செய்திகள் குறிப்பிடுகின்றன. அதிர்ஷ்டவசமாக, விதைகள் சேதமடையவில்லை. இருப்பினும், இந்த ஆபத்திலிருந்து விதை வங்கியைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு