Published:Updated:

விசாகப்பட்டினம் ஆலையில் கசிந்த விஷ வாயு எப்படி நடந்தது... தமிழக அரசு கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

விஷ வாயுக் கசிவு

ஸ்டைரீன் அதன் அசல் தன்மையில் மிக வீரியமான வினைபுரியும் திறனைக்கொண்டிருக்கும். அப்படி வினைபுரியும்போது, உயிரையே பறிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

விசாகப்பட்டினம் ஆலையில் கசிந்த விஷ வாயு எப்படி நடந்தது... தமிழக அரசு கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

ஸ்டைரீன் அதன் அசல் தன்மையில் மிக வீரியமான வினைபுரியும் திறனைக்கொண்டிருக்கும். அப்படி வினைபுரியும்போது, உயிரையே பறிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

Published:Updated:
விஷ வாயுக் கசிவு

நாடு முழுக்கக் கொரோனாவின் தாக்குதல் அதிகரித்த வண்ணமிருக்க, விசாகப்பட்டினத்தில் இன்னொரு பேரிடரும் வந்துவிட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2:30 மணிக்கு, விசாகப்பட்டினம் ராஜரத்தின வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் அமைந்திருந்த எல்.ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டது. அங்கிருந்து கசிந்த ஸ்டைரீன் என்ற விஷ வாயுவினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இன்னமும் 280-க்கும் மேற்பட்டோருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த அருணிடம் பேசியபோது, இன்னும் பலர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

17 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையிலேயே பராமரிக்கப்பட வேண்டிய வேதிமம், அதைவிட அதிகமான வெப்பநிலையை எட்டியதால், அழுத்தம் அதிகமாகி டேங்கின் வால்வ் உடைந்து கசிவு ஏற்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம்

அங்கிருந்து வெளியான ஸ்டைரீன் என்ற வாயு, நச்சுத்தன்மைகொண்ட வேதியல் பொருள்களைக் கையாள்வதற்கான விதிகள், 1989-ன் கீழ் மிகவும் ஆபத்தான வேதிமப் பொருளாக வகைப்படுத்தப்படுத்தியுள்ளது. ஸ்டைரீன் வாயுவைச் சில நிமிடங்கள் சுவாசித்தால், கண் எரிச்சல், குடல் சார்ந்த கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதையே நீண்ட நேரம் சுவாசித்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அளவு ஆபத்தை விளைவிக்கும். கார்சினோஜெனிக் தன்மையுடையது என்பதால், இது கலந்திருக்கும் காற்றைச் சுவாசிக்கையில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இதே ஸ்டைரீன் வாயு மற்ற சில வேதிமங்களோடு வினை புரிந்தால் இன்னும் பல மோசமான ஹைட்ரோ கார்பன் வாயுக்களை உருவாக்கும். இந்நிலையில், எல்.ஜி பாலிமர்ஸிலிருந்து வெளியான விஷ வாயு ஸ்டைரீன் மட்டும்தானா அல்லது அது வேறு ஏதேனும் வேதிமக் கலவையுடன் வினை புரிந்திருந்ததா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஸ்டைரீன் வைக்கப்பட்டிருந்த டேங்க் முறையாகப் பராமரிக்கப்படாததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. 17 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையிலேயே பராமரிக்கப்பட வேண்டிய வேதிமம் அதைவிட அதிகமான வெப்பநிலையை எட்டியதால், அழுத்தம் அதிகமாகி டேங்கின் வால்வ் உடைந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான வேதிமங்களைப் பராமரிக்கையில் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலை போன்ற சில வேதிமக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க உணர்கருவிகளும் கண்காணிப்பு வசதிகளும் அவசியம். அது சரியாக இயங்காததுதான் இந்த விபத்துக்கு முக்கியக் காரணம். ஒருவேளை உணர் கருவிகளும் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளும் முறையாக நடந்திருந்தால், மக்களை எச்சரித்து வெளியேற்றியிருக்க முடியும்" என்கிறது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்.

பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்கள்

1989-ம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், இதுபோன்ற ரசாயனத் தொழிற்சாலைகளுக்குக் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும்போது, அங்கு நடைபெற வேண்டிய பராமரிப்புப் பணிகள் முதல் உற்பத்தியைத் தொடங்குவதற்கான நடைமுறைகள் வரை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆலை நிர்வாகம் கடைப்பிடிக்கவில்லை.

ஸ்டைரீன் வாயு பயன்படுத்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தமிழகத்தில் இல்லை. ஆனால், ஸ்டைரீன் வாயுவின் மூலம் தயாரிக்கப்பட்ட பாலி ஸ்டைரீன் என்ற மூலப்பொருளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் ஆலை மணலியில் செயல்படுகின்றது. அதனால், இதுபோன்ற ஆபத்துகள் நிகழாது. ஆனால், ஸ்டைரீன் அதன் அசல் தன்மையில் மிக வீரியமான வினைபுரியும் திறனைக் கொண்டிருக்கும்.

அப்படி வினைபுரியும்போது, உயிரையே பறிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த அளவுக்கு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது ஸ்டைரீன். இதன் வெப்பநிலை அதிகரிக்கையில் மற்ற வேதிமங்களோடு கலந்து, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனோ ஆக்சைடு, பென்டேன் வாயு ஆகிய ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் உருவாகின்றன. இதுமாதிரியான ஸ்டைரீன் வாயுக்கசிவு ஏற்படும்போது, உடனடி முதலுதவியாக ஈரத்துணியால் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த வாயு நீரில் கரையாது, பென்சீனில் மட்டும்தான் கரையும். ஆகவே, நாம் ஈரத்துணி பயன்படுத்தும்போது ஸ்டைரீன் வாயுவையோ, கார்பன் மோனோ ஆக்சைடையோ நாம் நுகர முடியாதபடி தடுத்து நிறுத்திவிடும்.

எல்.ஜி.பாலிமர்ஸ்
எல்.ஜி.பாலிமர்ஸ்

தமிழகத்தில், மணலி, கடலூர், தூத்துக்குடி, பெருந்துறை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதிகமான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த விஷ வாயுக் கசிவும் அதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளும் தமிழகத்திற்குச் சொல்லும் பாடம் குறித்துப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த ரசாயன ஆலைகளைத் தமிழக அரசு எப்படியெல்லாம் கவனிக்கவேண்டும், என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பன குறித்துப் பட்டியலிட்டுள்ளது. அவை,

  • தமிழகத்தில் உள்ள அனைத்து ரசாயனத் தொழிற்சாலைகளிலும் பாதுகாப்புக் கட்டமைப்புகளை உறுதிசெய்வதற்கான பராமரிப்பு மற்றும் மேற்பார்வைப் பணிகளைத் தமிழக அரசு உடனடியாகத் தொடங்கவேண்டும். அந்தப் பணிகள் முடிவடையும் வரை உற்பத்தியைத் தொடக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

  • அனைத்து நிறுவனங்களிலும் வெப்பநிலை, வேதிம வினை, வேதியல் கலவைகள் உள்ளிட்டவற்றை அளவிடும் அளவீட்டுக் கருவிகள் அனைத்தும் "மறு அளவுத்திருத்தம்" (calibration)செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும்.

  • ரசாயனத் தொழிற்சாலைகளின் அருகில் அமைந்துள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களுக்குத் தொடர்ச்சியாகப் பேரிடர்க்காலப் பயிற்சிகளை நடத்தவேண்டும்.

மீட்புப் பணி
மீட்புப் பணி
  • MSDS என்று சொல்லக்கூடிய மெட்டீரியல் டேட்டா ஷீட் எப்போதும் பூர்த்திசெய்யப்பட்டு, அடிக்கடி புதுப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கவேண்டும்.

  • மேலை நாடுகளிலுள்ள பாதுகாப்புக் கட்டமைப்புகளை எந்தவிதக் குறைபாடுமின்றி இதைப்போன்ற ரசாயனத் தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

  • ரசாயனத் தொழிற்சாலைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்க அனுமதிக்கக் கூடாது. சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு அல்லது திரவம் இன்னொரு தொழிற்சாலையில் உள்ள வாயுவிற்கு எரிபொருளாக மாறலாம். அதனால் கடுமையான பாதிப்புகள் நிகழும். ஆகவே, வேதிமத் தொழிற்சாலைகள் மொத்தமாக ஒரே பகுதியில் குவியக்கூடாது.

  • இதைப்போன்ற ரசாயனத் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளைக் கடைப்பிடிக்கின்றனவா என்பதைச் சுதந்திரமான அறிஞர்களைக் கொண்டு தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.

  • மேற்குலக நாடுகள் இதைப்போன்ற தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாடுகளில் அமைத்து உற்பத்தி செய்து வாங்கிக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, சூழலின் முக்கியத்துவத்தை அந்நாடுகள் எவ்வாறு உணர்ந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இனிமேல் அதிகளவில் ரசாயனத் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதைத் தவிர்க்கவேண்டும்.

  • தமிழகத்திலுள்ள அனைத்து ரசாயனத் தொழிற்சாலைகளும் அனுமதி வாங்கப்பட்ட வேதியல் கலவைகளைத்தான் உற்பத்தி செய்கின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.

வாயுக்கசிவு
வாயுக்கசிவு
  • சூழலில் ஏற்பட்ட சீர்கேடுகளும், சூழல் சங்கிலியில் ஏற்பட்ட விரிசல்களும்தான் கொரோனா போன்ற தொற்றுகள் அதிகமாகக் காரணமாகவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் பின்னணியில் சூழலைச் சீர்கெடுக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது.

தொழிற்சாலைகள் 50 சதவிகிதப் பணியாளர்களோடு இயங்கலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், ஆலைகள் தங்கள் பணிகளைத் தொடங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, தமிழக அரசு விரைந்து மேற்குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா ஆபத்து இன்னும் நீங்காத நிலையில், தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்றதொரு இழப்பைச் சந்திக்கும் அளவுக்குத் தமிழகம் தயாராக இல்லை. ஆகவே, வரும் முன் காக்கும் அணுகுமுறையோடு அரசு இதைக் கவனிக்கவேண்டும்.