Election bannerElection banner
Published:Updated:

காற்று மாசுபாட்டுக்கும் கொரோனாவுக்கும் தொடர்புண்டா? - ஓர் அலசல்!

கொரோனா
கொரோனா ( Pixabay )

காற்று மாசுபாடு அதிகமுள்ள நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை விகிதம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கைபேசி இல்லாமல் ஒருவரைக் காண்பது எப்படி இன்றைய சூழலில் சாத்தியமில்லையோ, அதே நிலைமைதான் முகக்கவசப் பயன்பாட்டுக்கும். பர்ஸ், அலைபேசி, ஹெல்மெட் வரிசையில் முகக்கவசமும் அதில் சேர்ந்துவிட்டது. அழுக்காகும்போது சுத்தத்துக்காகக் கை கழுவுதல் என்பது மாறி, அதுவொரு பழக்கமாகவே மாறிவிட்டது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாத இறுதியில் அமலுக்கு வந்ததையடுத்து, எந்த தலைமுறையும் பார்த்திராத ஒரு சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கல்வித்துறை, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் என யாவும் மூடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டது இந்தத் தொற்று. ஆனால், மனிதர்களின் இயல்பு வாழ்க்கையைத் தாண்டி மற்ற உயிரினங்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும், இந்த ஊரடங்கு நன்மையையே விளைவித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி/காற்று மாசுபாடு
டெல்லி/காற்று மாசுபாடு
Pixabay

சுமாராக ஒரு மனிதன் வெளியே பணியிடத்துக்கோ, கடைவீதிக்கோ சென்று வரும்பட்சத்தில் வாகனங்களை உபயோகப்படுத்தலாம்... பதப்படுத்தப்பட்ட உணவுப் பதார்த்தங்களை உட்கொள்ளலாம்... நெகிழிப் பைகளில் பொருள்களை வாங்கலாம்... புகை பிடிக்கலாம். இப்படிப் பல விதமான பயன்பாடுகள் மூலம் திரவ மற்றும் திடக்கழிவுகளைச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டுக்கும் வழிவகுக்கின்றோம். பொதுப் போக்குவரத்து மட்டுமின்றி தனியார் வாகனப் பயன்பாடும் இல்லாமல் போனதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு குறைந்து, காற்றின் தரக்குறியீடு, காற்று நல்ல தரத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுவாகவே வான்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளின் இயக்கம் ஆகியவை காற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த நுண்துகள்களை நிறையச் செய்யும். இந்த நுண்துகள்கள் சுவாசப் பாதையில் தொற்று, சுவாசிப்பதில் சிரமம் என கொரோனாவை விட அதிக பாதிப்புகளைப் பல தலைமுறையினருக்குச் சத்தமின்றி கொடுக்கக்கூடியவை. ஆனால், ஊரடங்கு உத்தரவின் காரணமாக டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த நுண்துகளின் அளவு, முன்னெப்போதும் இல்லாத அளவில் பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், இந்த நிலை தற்காலிகமானதுதான்; நிரந்தரமில்லை என்பதைக் குறுகிய காலகட்டத்துக்குள்ளாகவே மனிதர்களாகிய நாம் சுட்டிக்காட்டி விட்டோம். ஊரடங்கில் சிறிதளவு தளர்வுகள் ஏற்படத் தொடங்கியதுமே, காற்றில் மாசுபாட்டுக் காரணிகளை அதிகரிப்பதற்கான வேலைகளையும் நாம் தொடங்கிவிட்டோம்.

உலகம் முழுவதும் 7 மில்லியன் மக்கள் மாசடைந்த காற்றைச் சுவாசித்தபடியேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகப் பலவிதமான நோய்கள் ஏற்படுவதோடு, இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் இது கொரோனா தொற்றுப் பரவலை மேலும் சிக்கலாக்கலாம்.

காற்று மாசுபாடு குறைந்ததாகச் சொன்ன தரவுகள், ஒருபுறம் மகிழ்ச்சியூட்டினாலும் மறுபுறம் மற்ற சில தகவல்களும் அச்சுறுத்துகின்றன. காற்று மாசுபாடு அதிகமுள்ள நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை விகிதம் அதிகமாக இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. “கொரோனா பரவும் நேரத்தில் உலக நாடுகள் காற்று மாசுபாட்டையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 7 மில்லியன் மக்கள் மாசடைந்த காற்றைச் சுவாசித்தபடியேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகப் பலவிதமான நோய்களும் ஏற்படுவதோடு, இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் இது கொரோனா தொற்றுப் பரவலை மேலும் சிக்கலாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கழிவு மேலாண்மையைக் கவனிக்காவிடில் காற்று மாசுபாடு மட்டுமின்றி, இதன் நச்சுத் துகள்கள் நிலத்தடியிலும் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரின் வளமும் பாதிக்கப்படும்.
உமேஷ், சூழலியல் ஆர்வலர்
சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 - சூழலியாளர்களின் குரலுக்கு செவி கொடுக்குமா மத்திய அரசு?

கோவையைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் உமேஷ் கூறுகையில், "சிமென்ட் ஆலைகள், செங்கற்சூளைகள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் ஊரடங்கு உத்தரவின் பேரில் முடங்கியபோது, அதன் கழிவு மேலாண்மை திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். வேளாண் நிறுவனங்கள், உருக்கு ஆலைகள், சுரங்க நிறுவனங்கள் போன்றவை நீண்டகாலத்துக்கு இயக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், எந்த அளவுக்குக் காற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த அமிலங்களை அவை பரப்பும் என்றும் ஊரடங்குக்குப் பின் தொழிற்சாலைகள் திடீரென இயங்கும்போது உருவாகும் பின்விளைவுகளைப் பற்றியும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிவு மேலாண்மையைக் கவனிக்காவிடில் காற்று மாசுபாடு மட்டுமின்றி, இதன் நச்சுத் துகள்கள் நிலத்தடியிலும் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரின் வளமும் பாதிக்கப்படும். இதனால் ஆஸ்துமா, தோல் பாதிப்புகள், சுவாசக் கோளாறு, பல் பிரச்னைகள் எனப் பல்வேறு உடல் சார்ந்த ஒவ்வாமைகளும் வியாதிகளும் பரவ வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வார்டிலும் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்தில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவிற்குப்பின் வரும் நோயாளிகளின் இப்படிப்பட்ட வியாதிகளைக் கூர்ந்து நோக்கி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அதற்கான தக்க தீர்வினையும் அளிக்க வேண்டும். அரசாங்கம் மட்டுமின்றி பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம். பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தினால் தனியார் வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் தனது வாகனம் சரியான நிலையில் உள்ளதா எனப் பரிசோதித்து இயக்கவேண்டும். Compulsive buying behavior என்று சொல்லப்படக்கூடிய தேவையில்லாத அதிகப்படியான பொருள்களைக் கொள்முதல் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இது தேவைக்கு அதிகமான பொருள்களை உற்பத்தி செய்வதையும் கழிவுகள் பெருகுவதையும் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

மாசுபாடு
மாசுபாடு
Pixabay

பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் பகுதியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதால் இமயமலையின் எழில்மிகு தோற்றத்தை அப்பகுதி மக்கள் கண்டு களித்துள்ளனர். அதேபோல், இத்தாலியில் வெனிஸ் நகரின் கால்வாய்ப் பகுதிகளில், நீர்வழிப் போக்குவரத்து குறைவாக இருப்பதால் நீர் தெளிவாகக் காட்சி அளிக்கிறது என்றும் கூறப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கை தன்னைத்தானே புதிப்பித்துக்கொள்வதை கண்கூடாகக் காண முடிகின்றது.

இது தொடர்பாக காற்று மாசுபாடு தொடர்பான தகவல், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையமான UrbanEmissions.info நிறுவனத்தின் இயக்குநர் திரு.சரத் குட்டிகுண்டாவைத் தொடர்பு கொண்டோம். இந்நிறுவனம் கடந்த மே மாதம் தெளிவானதோர் அறிக்கையைத் தனது இணையதளத்தில் வெளியிட்டது. "காற்றில் மாசுபாட்டுக் காரணிகளின் சுற்றுப்புறச் செறிவுகளின் வீழ்ச்சி 0% முதல் 50% வரை இருந்தது. நாடு முழுவதும் தொலைதூரப் பகுதிகளுக்கான மதிப்பீடுகள் எங்களிடம் இல்லை. 30 ஆண்டுகளில் முதல் முறையாக 200 கி.மீ தூரத்திலிருந்து இமயமலை மலைகளை மக்கள் காண முடிந்ததாகக் கூறப்படுகின்றது.

இது கடந்த ஐந்து வாரங்கள் அனைத்துப் போக்குவரத்து மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளையும் நிறுத்தியதன் விளைவே. இந்தச் சூழலில், ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகள், மத்தியக் கிழக்கிலிருந்து புழுதிப் புயல்களைக் (dust- storm) கண்டன. மத்திய இந்தியா சில தீவிபத்துக்களைச் சந்திக்க நேர்ந்தது. இந்தோ-கங்கைச் சமவெளியில், காற்று மாசுபாட்டின் வீழ்ச்சி நாசா செயற்கைக்கோள் ஒளிப்படங்களில் தெளிவாகத் தெரிந்துள்ளது. அதே நாசா செயற்கைக்கோள் பதிவுகளின்படி, 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டவற்றோடு ஒப்பிடும்போது, PM 2.5 மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவுகள் அப்போது இருந்ததைவிட இந்த லாக்டௌன் காலகட்டத்தில் 50 சதவிகிதம் குறைந்துள்ளது" என்று கூறினார்.

சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்த காற்றைக் கொண்ட டெல்லியில் கொரோனாவுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,802. அங்குத் தொற்றுநோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை, 2,803.

1918 ஃப்ளூ (flu), 2003 SARS போன்ற வைரஸ் தொற்றுநோய்களின் ஆய்வுகளின் மூலம், காற்று மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரியவந்தது. ஹார்வர்டில் உள்ள ஒரு குழு அமெரிக்கா முழுவதும் இறப்பு விகிதங்களின் தரவைப் பயன்படுத்தி கோவிட் -19 பற்றி இதேபோன்ற ஆய்வை மேற்கொண்டது. "மாசுத் துகள்களின் அளவீடான PM2.5 அளவு நுண்துகள் மாசுபாடு அதிகமுள்ள பகுதிகளுக்கும் கோவிட்-19 மரணங்களுக்கும் தொடர்பு இருக்கும் போக்கு கண்டறியப்பட்டுள்ளது'' என்று ஹார்வர்டு பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. PM2.5 அளவிலான நுண்ணிய மாசுத் துகள்கள் அதிகமாக இருந்தால், மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதனின் தலைமுடியுடைய தடிமனில் 13-ல் ஒரு பகுதி அளவே இருப்பதுதான் PM2.5 அளவு ஆகும். அது சுவாசத்துடன் உள்ளே சென்றால், நுரையீரல் மற்றும் ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். சுவாசத் தொற்றுகள் மற்றும் நுரையீரல் புற்றுநோயுடன் முன்பு இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. இப்போது கொரோனா போன்ற தொற்று நோய்களோடும் இவை தொடர்புபடுத்தப் படுகின்றன. மற்றொருபுறம், இந்த அறிக்கைகள் நம்பத்தகுந்தவையல்ல என்றும் இது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை என்றும் ஒரு சில ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களில் கொரோனா தொற்றுப் பரவலும் பலி எண்ணிக்கையும் அதிகமிருப்பது உண்மைதானா என்பதைப் புரிந்துகொள்ள இந்திய நகரங்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தோம்.

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகள் தான் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்படுகிறது. இதில், நாட்டின் 60% கொரோனா இறப்பு விகிதம் மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத்தில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இப்போது காற்று மாசுபாடு அதிகமுள்ள மாநகரங்களில், கொரோனா தொற்றின் எண்ணிக்கையைக் காண்போம்.

தொழிற்சாலைகள் இயக்கம்
தொழிற்சாலைகள் இயக்கம்
Pixabay
Vikatan

சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்த காற்றைக் கொண்ட டெல்லியில் கொரோனாவுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,802. அங்குத் தொற்று நோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை, 2,803. டெல்லிக்கு அடுத்தபடியாக மோசமான காற்று மாசுபாட்டுப் பிரச்னையைச் சந்திக்கும் தமிழகத் தலைநகரமான சென்னையில் 60,533 பேர் கொரோனாவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர், 929 பேர் பலியாகியுள்ளனர். அதுவே கோவையில் மொத்தம் 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மைசூருவில் 268 பேர் தொற்றுநோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசுபாடு அதிகமுள்ள நகரங்களிலும் மற்ற நகரங்களிலும் தொற்றுப் பரவலின் தீவிரம் எந்தளவுக்கு உள்ளது என்பதை இந்தத் தரவுகள் ஓரளவுக்குப் புரிய வைக்கின்றன. இதுவே, காற்று மாசுபாட்டிற்கும் கொரோனாவிற்கும் கூட தொடர்பு இருக்கலாம் என்பதற்கான ஒரு சான்று.

இது தவிர, பசுமைச் சூழலை நினைவு கூற வைக்கும் வடகிழக்கு மாநிலங்களில் அசாம் தவிர மற்ற மாநிலங்கள் மிகவும் பாதுகாப்பான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன என்பது ஓர் ஆறுதலான செய்தியாக உள்ளது. தரமான சுற்றுச்சூழல் நிலவுகின்ற பகுதிகளில் கொரோனாவுடைய பாதிப்பு பெருமளவு குறைவாக இருப்பது, சூழலியல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இயற்கையே நமக்குச் சுட்டுவது போலிருக்கின்றது.

கரிம வெளியீடு
கரிம வெளியீடு
Pixabay

‘ஐ.கியூ.ஏர்–விஷுவல்’ என்ற நிறுவனம், உலக அளவில் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கிற நகரங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கையில், உலகளவில் காற்று மிகவும் மாசடைந்துள்ள நகரங்களின் பட்டியலில் சென்ற ஆண்டு ஏழாம் இடம் பெற்றிருந்த இந்தியா, நடப்பு ஆண்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஊரடங்குக்குப் பின் காற்றின் மாசு அளவு ஓரளவுக்குக் குறைந்து நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. ஆனால், இப்போது மீண்டும் பொதுவெளியில் மக்கள் புழக்கம், வாகனப் பயன்பாடு, தொழிற்சாலைகள் இயக்கம் அனைத்தும் தொடங்கிவிட்டன. அதனால், இடைப்பட்ட காலகட்டத்தில் அடைந்த காற்றின் தூய்மையை மீண்டும் இழந்துகொண்டிருக்கிறோம். இது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. காற்றின் தரத்தை லாக் டெளனில் இருந்ததைப் போலவே தக்கவைக்கக் கூடிய திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். இல்லையேல், இந்தப் பிரச்னை கொரோனாவோடு நிற்காது.

- ரஞ்சிதா ரவீந்திரன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு