Published:Updated:

`கடல் மட்டம் உயர்வது உறுதி; அழிவு பின்னர் அறிவிக்கப்படும்!' - அச்சத்தை உறுதிசெய்த பெருங்கடல் ஆய்வு

உருகும் பனிப்பாறைகள்

காப்பர்நிகஸ் கடல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நடத்திய ஓர் ஆய்வு மொத்த மனித சமூகத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய உண்மையை வெளிக் கொண்டுவந்துள்ளது.

`கடல் மட்டம் உயர்வது உறுதி; அழிவு பின்னர் அறிவிக்கப்படும்!' - அச்சத்தை உறுதிசெய்த பெருங்கடல் ஆய்வு

காப்பர்நிகஸ் கடல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நடத்திய ஓர் ஆய்வு மொத்த மனித சமூகத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய உண்மையை வெளிக் கொண்டுவந்துள்ளது.

Published:Updated:
உருகும் பனிப்பாறைகள்

பூமியிலுள்ள பெருங்கடல் அனைத்தின் மட்டமும் உயர்ந்து வருவதாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் எச்சரித்து வந்தனர். ஆனால், அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அரசுகள் தொடர்ந்து, தங்கள் இயற்கை விரோத வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருந்தனர். தற்போது அவற்றுக்கான விளைவுகளை உலகம் முழுவதும் கடந்த இரண்டு தசாப்தங்களில் பல்வேறு வகைகளில் மக்கள் எதிர்கொண்டு விட்டனர். இன்னமும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காப்பர்நிகஸ் கடல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நடத்திய ஓர் ஆய்வு மொத்த மனித சமூகத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய உண்மையை வெளிக் கொண்டுவந்துள்ளது.

Ocean (Representational Image)
Ocean (Representational Image)
Photo by Sebastian Voortman from Pexels

பூமியின் 71 சதவிகித பெருங்கடல்களால் ஆனது. அதுவே, பூமியின் உயிர்ச்சூழல், காலநிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதோடு, அங்கு நிகழும் மாற்றங்கள் நிலத்திலும் பல மாற்றங்களுக்கு வித்திடும் வகையில் உள்ளார்ந்த தொடர்புடையதாக இருக்கிறது. இருப்பினும், இந்த மென்மையான, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல், வரலாறு நெடுகப் பல சுரண்டல்கள் கடல் சூழலியல் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்விளைவே இப்போது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ள உண்மை என்று சொல்லப்படுகிறது. பல்வேறு மனித நடவடிக்கைகள், அதீத சுரண்டல், கடலின் இயற்கை வளங்களை / கனிம வளங்களைச் சுரண்டுவதற்கான திட்டங்கள் என்று அனைத்தையுமே இதற்கான காரணங்களாகச் சொல்வதோடு, நிலத்தில் நடந்தவையும் இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1993 ஜனவரி முதல் 2020-ம் ஆண்டு மே மாதம் வரையும், உலகம் முழுக்கக் கடல் மட்டம் ஓராண்டுக்கு 3.1 மில்லிமீட்டர் என்ற கணக்கில் சராசரியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது இந்த ஆய்வறிக்கை. பெருங்கடல்களின் நிலை குறித்த அறிக்கையை (The Ocean State Report) சமீபத்தில் காப்பர்நிகஸ் கடல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி,

Ocean (Representational Image)
Ocean (Representational Image)
Photo by Kellie Churchman from Pexels
  • பெருங்கடல் சூடாகிக்கொண்டிருக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்துவருகிறது.

  • மத்திய தரைக்கடல் பகுதியில் கடல் மட்டம் ஓராண்டில் சராசரியாக 2.5 மி.மீ என்ற அளவில் அதிகரித்துள்ளது.

  • பால்டிக் கடல் பகுதியில் ஓராண்டுக்கு 4.5 மி.மீ என்ற அளவில் உயர்கிறது.

  • மேற்கு பசிபிக் தீவுப் பகுதிகளில் ஓராண்டுக்கு 4.2 மி.மீ என்ற கணக்கில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது.

  • கருங்கடல் பகுதியில் ஓராண்டுக்கு 1.7 மி.மீ கடல் மட்டம் உயர்ந்துள்ளது.

  • அயர்லாந்து கடல்பகுதியில் ஓராண்டுக்குச் சராசரியாக 3.6 மி.மீ என்ற கணக்கில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது.

  • மத்திய பசிபிக்கில் 3.5 மி.மீ கடல் மட்டம் உயர்ந்துள்ளது.

அதோடு, ``பெருங்கடல் முழுவதும் அதீத வெப்பமடைவதால், கடல்வாழ் உயிரினங்கள் குளிர்ந்த நீரோட்டமுள்ள பகுதியை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளன. இந்த இடப்பெயர்வு, வெவ்வேறு விதமான கடல் சூழலியலுக்குத் தொடர்பில்லாத புதிய உயிரினங்கள் அங்கு வருவதற்குக் காரணமாகிறது. இதனால், ஒரு குறிப்பிட்ட சூழலியலுக்குத் தொடர்பில்லாத, அயல் உயிரினம் அறிமுகமாகும்போது அங்கு வாழும் உயிரினங்களுடைய வாழ்வியல் சுழற்சி பாதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அந்த இடத்துக்குத் தொடர்பில்லாத லயன்ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் சூயஸ் கால்வாய் வழியாக இடம்பெயர்ந்து வந்தது. இது அங்கு வாழ்ந்துகொண்டிருந்த மற்ற மீன்களுடைய வாழ்வியல் சுழற்சியில் சிக்கலை உண்டாக்கியது" என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

Venice
Venice
Photo: Pixabay

2019-ம் ஆண்டு வெனிஸில், கடல்மட்ட உயர்வு நிகழ்வுகள் நடைபெற்றன. அப்போது உயர் அலை நிகழ்வுகள், தீவிர உள்ளூர் பருவநிலை பாதிப்புகள் போன்றவை நிகழ்ந்தன. அதோடு நீர்மட்டம் 1.89 மீட்டருக்கு உயர்ந்தது. 1966-ம் ஆண்டிலிருந்து பதிவானதிலேயே இதுதான் அதிகபட்சம். 2019-ம் ஆண்டு நவம்பர் 11 முதல் 18-ம் ஆண்டு வரை ஏற்பட்ட வெள்ளத்தால் 50 சதவிகித வெனிஸ் நகரம் மூழ்கியது.

பூமி முழுவதும் பல்வேறு கடல் பகுதிகளில் ஆண்டுவாரியாக நடைபெறும் கடல் மட்ட உயர்வு, இந்த ஆய்வறிக்கையின் கணக்குப்படி, ஓராண்டுக்குச் சராசரியாக 3.1 மில்லிமீட்டர்.

அதோடு, பூமியின் சுமார் 50 சதவிகித ஆக்சிஜன் உற்பத்தி பெருங்கடலில்தான் நடைபெறுகிறது. மேலும், இந்தச் செயல்முறைதான் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வியல் சுழற்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில், கப்பல் போக்குவரத்து, டிராலர் போன்ற மரபற்ற நவீனகால மீன்பிடி முறைகளின்மூலம் நடக்கும் அதீத மீன்பிடித்தல், கடல் அமிலமயமாதல், பவளப் பாறைகளின் அழிவு போன்றவை, பெருங்கடல்களின் வாழ்வியல் சுழற்சியைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

இதுபோக இன்னும் பல பேரிடர்களை அமைதியாகப் பெருங்கடல்கள் எதிர்கொண்டுவருகின்றன.

அழியும் கடல் சூழலியல்
அழியும் கடல் சூழலியல்

பூமியில் 2017-ல் ஒரே ஆண்டில் சுமார் 7,000 டன்கள் எண்ணெய்க் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டுள்ளது. அதில் பாதிக்கும் அதிகமாக இந்தியப் பெருங்கடலைக் கொலை செய்வதற்காகக் கொட்டப்பட்டது. ஆம், இது கொலைதான். மீன்களும், சிப்பி வகைகளும் எண்ணெய்க் கழிவு படிந்த நீரில் வாழும் சிற்றுயிர்களைச் சாப்பிடுகின்றன. அதனால் வளர்ச்சியில் குறைபாடு, உப்பிய கல்லீரல், இதயச் செயற்பாடுகளில் மாற்றம், சுவாசக் கோளாறு, இனப்பெருக்கக் குறைபாடுகள் என்று பல பிரச்னைகளைச் சந்திக்கின்றன. இதனால், கடல் பல்லுயிரிய வளமே பேரழிவுக்கு உள்ளாகிக்கொண்டிருப்பதை, பலகட்ட ஆய்வுகள் உணர்த்தியுள்ளன.

கடலில் வாழும் நீர்க்கீரி, பாலூட்டிகள், நீர்ப்பறவைகள் அனைத்தும் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழந்து வருகின்றன. அதனால் அவற்றுக்கு அதிகமான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் நாம் கொட்டிய எண்ணெய்க் கழிவுகள். கடலில் தட்பவெப்பநிலை எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. அந்த மாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் திறனோடுதான் கடலில் உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த எண்ணெய்க் கழிவுகள் கடல்வாழ் பாலூட்டிகளின் அந்தத் திறனைக் குறைக்கின்றன. அதனால் ஹைபோதெர்மியா (Hypothermia) என்ற செயற்கை உடல்வெப்பக் குறைப்பு கடல்வாழ் உயிரினங்களின் உடலில் ஏற்படுகிறது.

Climate Change (Representational Image)
Climate Change (Representational Image)
Photo by Andrea Schettino from Pexels

பெருங்கடல் சூழலியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை இந்த ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது. இதன்மூலம், பல்லாண்டுக்காலமாக ஆய்வாளர்கள் முன்வைத்துக் கொண்டிருந்த எச்சரிக்கையான கடல்மட்ட உயர்வு எவ்வளவு அமைதியாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இந்த ஆய்வறிக்கை அமைந்துள்ளது. மேலும், இப்போதுள்ள கரிம வெளியீட்டு அளவை நிகர பூஜ்ஜியத்துக்கு விரைவில் கொண்டுவரவில்லை என்றால், இதன் பாதிப்புகளை எதிர்காலத்தில் கடலோரங்களில் வாழும் எளிய மக்கள் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் இந்த ஆய்வின் முடிவுகள் நமக்கு வழங்குகின்றன. அதையுணர்ந்து அரசுகள், காலநிலை செயல்பாடுகளையும் காலநிலை நீதிக்கான கடுமையான கட்டுப்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.