Published:Updated:

பல்லுயிர்ச்சூழலை அழித்ததுதான் கொரோனா வைரஸ் உருவாகக் காரணமா? என்ன சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்?

கொள்ளை நோய்ப் பேரிடர் ( Pixabay )

அறிவியல் தெளிவாகச் சொல்கின்றது. காட்டுயிர்களுடைய வாழ்விடங்களை அழிக்குபோதே, தொற்று நோய்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பதையும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

பல்லுயிர்ச்சூழலை அழித்ததுதான் கொரோனா வைரஸ் உருவாகக் காரணமா? என்ன சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்?

அறிவியல் தெளிவாகச் சொல்கின்றது. காட்டுயிர்களுடைய வாழ்விடங்களை அழிக்குபோதே, தொற்று நோய்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பதையும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

Published:Updated:
கொள்ளை நோய்ப் பேரிடர் ( Pixabay )
உலகம் புதுப்புது பிரச்னைகளை அடுத்தடுத்து சந்தித்துக் கொண்டிருக்கிறது. மனித இனம், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும், பல்வேறு விதமான இயற்கைப் பேரிடர்களை வருடம் தவறாமல் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. அதில் மிகவும் சிக்கலான, ஆபத்தான ஒரு பிரச்னைதான், இப்போது நாம் சந்திக்கும் விலங்கியல் நோய்கள். இன்றைய சூழலில், பேரிடர்களிலிருந்து தப்பித்து வாழ்வியலை அமைத்துக்கொள்வதற்கே பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டிய நிலையில் வாழ்கின்றோம்.

காடழிப்பு, தீவிர விலங்கு வேட்டை, பனிப்பாறை உருகுதல் போன்றவற்றால் கொரோனா போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய விலங்கியல் நோய்கள் இனி, மேலும் அதிகமாகப் பரவும் என்று எச்சரிக்கின்றது ஐக்கிய நாடுகள் அமைப்பு. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோய்களைத்தான் விலங்கியல் நோய்கள் என்கின்றோம். சிம்பன்சிகளோடு மனிதர்களுக்கு ஏற்பட்ட தொடர்பு மூலமாகப் பரவிய எபோலா, வௌவால்களோடு தொடர்பு ஏற்பட்டதால் பரவிய நிபா அனைத்துமே விலங்கியல் நோய்கள்தான். இத்தகைய தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும் அவற்றிடமிருந்து மக்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று நோய்
கொரோனா தொற்று நோய்
Pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு, சர்வதேச கால்நடை ஆராய்ச்சிக் கழகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து இதுபோன்ற நோய்த் தொற்றுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டன. அதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கையைக் குறிப்பிட்டுள்ளனர். அதோடு, இதுபோன்ற தொற்றுகள் பரவ ஏழு காரணிகள் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறியுள்ளனர்.

"இயற்கை வளங்களைச் சுரண்டுதல், வெகுதீவிரமாக நடக்கின்ற நகரமயமாக்கல், நிலைத்தன்மையற்ற செயல்பாடுகளுடனான தொழில் வளர்ச்சி, நுகர்வு நிறைந்த வாழ்க்கைமுறை, காட்டுயிர் வள அழிப்பு, அதிகரிக்கும் பயணம் மற்றும் போக்குவரத்துச் செயல்பாடுகள், உணவு உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள்" என்று ஏழு காரணிகளை அவர்கள் இதற்குக் காரணமாக முன்னிறுத்துகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"அறிவியல் தெளிவாகச் சொல்கின்றது. காட்டுயிர்களுடைய வாழ்விடங்களை அழிக்குபோதே, சூழலியல் சமநிலையைச் சீர்குலைக்கும்போதே, உயிரினங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பதையும் நாம் எதிர்பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார், ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் இங்கெர் ஆண்டெர்சர் (Inger Andersen).

"இத்தகைய தொற்றுப் பரவல் தீவிரமடையும் என்று நாம் எச்சரிக்கப்பட்டோம். இருந்தும் அதற்குத் தயாராக இல்லாதது, நம்முடைய தவறுதானே ஒழிய இயற்கையுடைய தவறு கிடையாது" என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், "இதுபோன்ற எதிர்காலப் பேரிடர்களைத் தவிர்க்கவும் அவற்றிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும் நாம் சூழலியல் பாதுகாப்பில்தான் முதல்கட்ட நடவடிக்கையாகக் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

1930-களின் தொடக்கத்திலிருந்தே இதுபோன்ற விலங்கியல் நோய்களின் பரவல் அதிகரித்துக்கொண்டிருப்பது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது.
டெலியா ராண்டால்ஃப், விலங்கியல் தொற்று ஆய்வாளர், ஆய்வுக்குழுவின் தலைவர்

கடந்த 30 ஆண்டுகளில்தான் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து அதிகம் பேசப்படுகின்றது. தொடக்கத்தில், வெப்பமண்டலக் காடுகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அயல் உயிரினங்களிடமிருந்து (Exotic Wildlife) எபோலா, நிபா, ஹெச்.ஐ.வி போன்ற தொற்றுகள் பரவுவதாக நம்பப்பட்டது. ஆனால், இன்று பரவலாகக் காட்டுயிர் ஆய்வாளர்களும் வைராலஜி நிபுணர்களும் அதைவிட முக்கியக் காரணம் ஒன்று இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். மனிதர்கள் பல்லுயிர்ச்சூழலைத் தொடர்ந்து அழிப்பதே புதுப்புது வைரஸ்கள் தோன்றுவதற்குரிய சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

காடுகளை ஊடுருவிச் சாலை போடுதல், சுரங்க வேலை, வேட்டை ஆகியவையே எபோலா, நிபா போன்ற தொற்றுகளை, மனிதக் குரங்குகளிடமிருந்தும் வௌவால்களிடமிருந்தும் மனிதர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்தன. அதுவே, பிரச்னை உருவெடுக்கக் காரணமாக அமைந்தது. இவை அடிப்படையில் நமக்கு ஒன்றைப் புரிய வைக்கின்றன. பல்வேறு மனித ஊடுருவல்களால் காடழிப்பு நிகழ்வதும் விலங்குகளின் இயற்கையான வாழ்விடங்களைத் தொந்தரவு செய்வதும் புதுப்புது வைரஸ் தொற்றுகளை மனிதர்களுக்குப் பரப்புகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகவே, குறிப்பாகத் தொழிற்புரட்சி தொடங்கியதிலிருந்து, காட்டை ஊடுருவிச் செல்லும் வகையிலான மனித நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொந்தரவு செய்யப்படாமலிருந்த பகுதிகள் மீது நாம் கை வைப்பதால், அங்கிருந்த பல்வேறு நுண்ணுயிரிகளுக்கு வெளியுலகத் தொடர்பு கிடைக்கின்றது. அவற்றைச் சகித்துக்கொண்டு வாழக்கூடிய அளவுக்கு மனிதர்களிடம், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாததால், அவை பல்வேறு தொற்று நோய்களுக்கு வழி வகுக்கின்றன.

அறிவியல் பார்வையில் பார்த்தோமானால், சார்ஸ், எபோலா, கொரோனா, நிபா போன்றவை இயற்கையின் பரிணாமப் பாதையில் தோன்றிய நுண்ணுயிரிகள். அவை வாழ்ந்துகொண்டிருந்த பகுதியில் மற்ற உயிரினங்களோடு இணைந்து வாழ்ந்துகொண்டிருந்தன. இன்னும் பல பகுதிகளில், ஓர் உயிரினத்தின் செல்லை உணவாகக் கொண்டு பல்கிப் பெருகி வாழும் நுண்ணுயிரிய வேட்டையாடிகளாக வாழ்ந்துகொண்டிருந்தன. இந்த வேட்டையாடி, இணைத்திற உறவுக்காரராய் வாழும் ஓர் உயிரினம் மனிதர்களோடு தொடர்புகொள்ளத் தொடங்கியதால் அவற்றின் தாக்கம் நம்மீது தெரியத் தொடங்கியுள்ளது. அவற்றோடு இணைந்து வாழும் திறன் நமக்கு இல்லாத காரணத்தால், அவற்றை நாம் நோய்களாக அடையாளம் காண்கிறோம். இன்று இந்த நுண்ணுயிரிய வேட்டையாடிகள், தொற்று நோய்களாக அடையாளம் காணப்படுகின்றன.

ஆய்வுக்கூடம்
ஆய்வுக்கூடம்
Unsplash

இவை மட்டுமன்றி, இப்போது நடந்துகொண்டிருக்கும் புவி வெப்பமடையும் செயல்பாடு துருவங்களிலுள்ள பனிப்பாறைகளை உருக்கிக்கொண்டிருக்கின்றன. அது, பனியில் உறைந்துகிடக்கும் பழங்கால உயிரினங்களுடைய சடலங்களை வெளிக்கொணர்கின்றன. அவற்றின் மீது உரைந்துள்ள பல்வேறு நுண்ணுயிரிகளும் அவற்றுடன் சேர்ந்து வெளியே வரும். அவை மேலும் பல புதுப்புது நோய்களைக் கொண்டுவரலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 2015-ம் ஆண்டு, சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடகிழக்கு திபெத்தியன் பள்ளத்தாக்கில் உறைந்திருந்த 15,000 ஆண்டுகள் பழைமையான ஒரு பனிப்பாறையை 50 மீட்டர் ஆழத்திற்குக் குடைந்து, அதன் மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதித்தனர். உயிரியல் கூறுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பது குறித்து நடந்த ஆய்வின்போது, அதில் பழங்காலத்தைச் சேர்ந்த 33 வைரஸ்கள் இருந்தது தெரியவந்தது. அதில், 28 வைரஸ்கள் மனித இனத்திற்கு இதுவரை அறிமுகமில்லாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 2016-ம் ஆண்டின்போது, சைபீரியப் பகுதியில் அமைந்துள்ள யமால் தீபகற்பத்தில், ஒரு 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கின்றான். அவனைத் தொடர்ந்து 20 பேர் அந்நோயினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு திடீரென்று எப்படி அந்த நோய் தொடங்கியது என்று ஆராய்ந்து பார்க்கையில், 75 ஆண்டுகளுக்கு முன்னர், அங்கிருந்த ஒரு ரெயின்டீர் என்ற ஒரு வகை மான், ஆந்த்ராக்ஸ் நோய்க்கு ஆளாகி இறந்துள்ளது. அதன் சடலம் பனியில் அப்படியே உறைந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்து, 2016-ம் ஆண்டுக் கோடைக்காலம் கடுமையாக இருந்ததையொட்டி, பனி மீண்டும் உருகி, சடலம் வெளியே வந்துள்ளது. அதனால், அருகிலிருந்த நீர், நிலம், உணவு உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாகவே, இந்தத் தொற்று திடீரென்று மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளது.

பனிப்பாறை உருகுதல்
பனிப்பாறை உருகுதல்
Pixabay
இது நிகழ்காலத்தில் நம் முன்னே இருக்கின்ற ஆதாரம். பூமி வெப்பமடைந்து கொண்டேயிருக்க, நாம் பல மில்லியன் ஆண்டுகளாக, நமக்கு இதுவரை அறிமுகமில்லாத பல வைரஸ்களைப் புதையல்களுக்குள் இருந்து தோண்டி எடுத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

இப்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. உலகளவில் லட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது. புதிதாக வளர்ந்துகொண்டிருக்கும் தொற்றுகளில், எபோலா, மெர்ஸ், சார்ஸ், வெஸ்ட் நைல் காய்ச்சல், ஸிகா, நிபா போன்றவற்றின் வரிசையில் வந்து சேர்ந்துள்ள மற்றுமொரு வைரஸ்தான் இது. இதற்கு அடுத்ததாக, மீண்டும் வேறு ஏதாவது தொற்று நோய் வரிசையில் சேரக் காத்துக் கொண்டிருக்கலாம். அவை விலங்குகளிடமிருந்து தொற்றுவதாகவோ, பனிப்பாறை உருகுவதாலோ, எதன் மூலமாக வேண்டுமானாலும் வரலாம்.

மனிதர்கள் மத்தியில் இப்போது பரவிக்கொண்டிருக்கும் தொற்றுகளில் 60 சதவிகிதம் விலங்கியல் நோய்கள்தான். இனி புதிதாகப் பரவக்கூடிய தொற்றுகளில் 75 சதவிகிதம் விலங்கியல் நோய்களாகத்தான் இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகின்றது. மேலும், இதற்கு முக்கியக் காரணம், சுற்றுச்சூழலைச் சிதைக்கும் மனித நடவடிக்கைகளும் விலங்குகளோடு மனிதர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் ஆபத்தான தொடர்புமே காரணம் என்று அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் எச்சரிக்கின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டுமே, கொரோனா பேரிடரைத் தவிர்த்து இதர விலங்கியல் தொற்றுநோய்களால் உலகளவில் 100 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழுவின் தலைவர், டெலியா ராண்டால்ஃப், 1930-களின் தொடக்கத்திலிருந்தே இதுபோன்ற விலங்கியல் நோய்களின் பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல், எதிர்காலத்திலும் விலங்கியல் தொற்றுகள் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது. அதோடு, பூமியின் முக்கியமான வனப்பகுதிகளைக் கொண்டுள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தில், நடக்கின்ற இயற்கை வள அழிப்பு காரணமாக, அங்கு அதிகளவில் இந்தத் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

இவற்றிடமிருந்து பாதுகாப்பாக இருக்க, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், ஒருவேளை மீண்டுமொரு கொள்ளை நோய்ப் பேரிடர் ஏற்பட்டால், அதன் தீவிரம் அதிகரிக்கும் முன்பே, எப்படி திறம்படக் கையாள்வது என்பன போன்ற திட்டங்களை உலக நாடுகளின் அரசுகள் முன்கூட்டியே வகுத்து வைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பின்படி, பெரிதும் கவனிக்கப்படாத விலங்கியல் நோய்களுக்கே சராசரியாக, ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் உலகளவில் உயிரிழக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளில் மட்டுமே, கொரோனா பேரிடரைத் தவிர்த்து இதர விலங்கியல் தொற்றுநோய்களால் உலகளவில் 100 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில வருடங்களில், கொரோனாவோடு சேர்த்து இந்தக் கணக்கு 9 டிரில்லியனை எட்டலாமென்று ஐ.நா கணிக்கின்றது.

இதிலிருந்து நாம் மீண்டு வர, வல்லுநர்கள் 10 முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்துகின்றனர். நிலைத்தன்மையுடைய வகையில் நிலத்தைப் பயன்படுத்துதல், இயற்கைக்கு இசைவான அணுகுமுறையை அனைத்திலுமே கையாள்தால், உணவு உற்பத்தியைக் கண்காணித்தல், உணவுப் பாதுகாப்பு, நிலைத்தன்மை வாய்ந்த விவசாய முறையைக் கையாளுதல், காட்டுயிர் பாதுகாப்பு, காடுகள் பாதுகாப்பு, இயற்கை வளப் பாதுகாப்பு ஆகியவை அடங்கிய திட்டமிடுதலை அரசுகள் மேற்கொள்ளாதவரை, இது சாத்தியமில்லை என்கின்றனர் சர்வதேச விலங்கியல் தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள்.

புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதல்
Pixabay

கொரோனா பரவத் தொடங்கியபோதே, அரசுகள், உலக மக்கள் அனைவருமே ஆச்சர்யப்பட்டனர். ஆனால், விலங்குகள் மற்றும் தொற்றுகள் குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த ஆய்வாளர்கள் ஆச்சர்யப்படவில்லை. அதற்கு மாறாக வருந்தினர். அவர்கள் கொடுத்த எச்சரிக்கை எதையுமே அரசுகள் காதில் வாங்கிக் கொள்ளாமல், இப்போது இப்படிப் பாதுகாப்பு நடவடிக்கைகளே இல்லாமல், எதிரிப் படைக்குக் கதவைத் திறந்து வைத்துச் சேதமடைவதைப் போல் அனைவரும் பாதிக்கப்படுகின்றார்களே என்று பெரிதும் வருந்தினர். அவர்களுடைய கோரிக்கையெல்லாம் ஒன்று மட்டுமே. எதிர்காலத்தில் இதுபோன்ற கொள்ளை நோய்ப் பேரிடர் மீண்டும் ஏற்படும்போது, அதை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism