Published:Updated:

`வேதாந்தா, ஓ.என்.ஜி.சி-யைத் தடுக்க சரியான முடிவு..!' வேளாண் மண்டலம் அறிவிப்பு எதிரொலி

Representational Image
Representational Image

வேளாண் மண்டலம் மட்டுமல்ல, மண்ணையும் நீரையும் மாசுபடுத்தக்கூடிய எந்த வகையான தொழிலையும் தமிழகத்தின் எந்தவொரு விவசாய நிலத்திலும் அனுமதிக்கக்கூடாது.

ஜனவரி மாதத்தில், `எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதை ஆய்வு செய்வதற்கான ஆய்வுக்கிணறு அமைக்கும் திட்டங்களுக்குச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யவோ பொதுமக்கள் கருத்துக்கேட்கவோ அவசியமில்லை' என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஓர் அரசாணை வெளியிட்டுச் சட்டத்திருத்தம் செய்தது. அதைக் கண்டித்து, சட்டத்திருத்ததைத் திரும்பப் பெறுமாறு தமிழக முதல்வர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆனால், சட்டத்திருத்தத்தில் எந்த மாற்றமும் கிடையாது, திட்டமிட்டபடி வேலைகள் நடக்கும் என்று பதிலளித்தார் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

காவிரி
காவிரி

இந்தச் சட்டத்திருத்தத்திற்குத் தமிழகத்தில் வலுத்துக் கொண்டிருந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை சேலத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

``டெல்டா பகுதிவாழ் மக்கள் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதைக் கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. முதல்வராக இருந்தாலும், நான் ஒரு விவசாயியும் கூட. விவசாயிகள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு இந்த முடிவு ஒரு தீர்வாக இருக்கும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும்" என்று அறிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, டெல்டா பகுதிமீது எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பார்வை இருந்துகொண்டிருக்கிறது. 2013-ம் ஆண்டில் மீத்தேன் திட்டத்திற்குத் தொடங்கிய எதிர்ப்பிலிருந்து, 2015-ம் ஆண்டு நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், 2017-ல் கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி திட்டம், 2018-ல் நாகப்பட்டினத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக வேதாந்தாவிற்குக் கிடைத்த அனுமதி முதல் இப்போது வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆய்வுக்கிணறுகள் வரை பெருநிறுவனங்களின் தீவிர முயற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

திட்டப்படி, வேதாந்தா புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் 116 ஆய்வுக்கிணறுகளையும் நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் 159 ஆய்வுக்கிணறுகளையும் 13,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க அனுமதி கோரியுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், கரூர், திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்கள் காவிரி டெல்டா பகுதிக்குள் வருகின்றன. அங்கு, ஓ.என்.ஜி.சி, வேதாந்தா போன்ற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த முயற்சிக்கு மத்திய அரசின் ஆதரவும் முழுமையாக இருக்கிறது. ஆகவே, டெல்டா பகுதி குறித்த மாநில அரசின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. அதனால்தான், இப்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது தமிழக அரசு.

இந்த அறிவிப்பைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும். காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துச் சட்டம் இயற்ற வேண்டுமென்று விவசாயிகள் தரப்பிலிருந்து கோரிக்கைகளும் இந்த முடிவுக்குப் பாராட்டுகளும் தமிழக முதல்வருக்கு வந்துகொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளாக விவசாயிகள் முன்வைத்துக் கொண்டிருந்த கோரிக்கையைத் தற்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. அதேநேரம், இதுகுறித்த சட்ட வரைவில் என்னென்ன தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படும், இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஆய்வுக்கிணறுகளுக்குத் தடை விதிக்கப்படுமா என்று பல்வேறு எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன.

எடப்பாடி.கே.பழனிசாமி
எடப்பாடி.கே.பழனிசாமி

ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அந்தர்வேடி என்ற கிராமத்திற்கு அருகே ஓ.என்.ஜி.சி குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, அருகிலிருந்த நீர்நிலை தீப்பற்றி எரிந்தது. பிப்ரவரி 7-ம் தேதியன்று, திருவாரூரிலுள்ள மூலங்குடி என்ற கிராமத்தில் விவசாயி ஒருவருடைய நிலத்தில் அமைத்திருந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினுடைய கச்சா எண்ணெய்க் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு அவருடைய நிலத்தில் பயிரிட்டிருந்த அனைத்துமே நாசமாகியது. கடந்த வாரத்தில் இது ஒரே ஒரு உதாரணம் மட்டுமே. அடிக்கடி இப்படியான விபத்துகள் நடப்பதும் அதனால், விவசாய நிலம், விளைச்சல், அவற்றின் அடிப்படைத் தேவையான நீராதாரம் என்று அனைத்துமே தொடர்ந்து பாதிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்நிலையில், இப்போது செயல்பாட்டிலிருக்கும் நிறுவனங்களுக்கும் தடை விதித்து, காவிரி டெல்டாவை முற்றிலுமாகப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம், ``மக்களின் நீண்டநாள் கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தில் என்ன சொல்லப்போகிறார்கள் என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. அது வந்தபிறகு தான், என்ன மாதிரியான வரையறைகளை வகுக்கப் போகிறார்கள் எனபது தெரியும். அதில், இப்போது செயல்படக்கூடிய ஆய்வுக்கிணறுகளை மூடுவதற்கும் வழி செய்யவேண்டும். வேளாண் மண்டலத்தில் மட்டுமல்ல, மண்ணையும் நீரையும் மாசுபடுத்தக்கூடிய எந்த வகையான தொழிலையும் தமிழகத்தின் எந்தவொரு விவசாய நிலத்திலும் அனுமதிக்கக்கூடாது" என்று கூறினார்.

அறச்சலூர் செல்வம் (இடது), செயராமன் (வலது)
அறச்சலூர் செல்வம் (இடது), செயராமன் (வலது)

இப்போது வந்துள்ள இந்த அறிவிப்பு, இதற்கு முன்னர் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சி கிணறுகள் செயல்படத் தடை விதிக்க வாய்ப்புள்ளதா, இப்போது அனுமதி கோரியுள்ள வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி கிணறுகள் வருவதைத் தடை செய்யுமா என்பது குறித்துப் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செயராமன்,

``மத்திய அரசு, எண்ணெய், எரிவாயு எடுக்க வேதாந்தா போன்ற பன்னாட்டு முதலாளிகளைக் களத்தில் இறக்கியுள்ளது. அதற்கு மக்கள் எதிர்ப்பு இருப்பதால்தான், மக்கள் கருத்து வேண்டாம் என்ற எல்லைவரை இந்திய அரசு சென்றுள்ளது. இந்த நிலையில்தான் தமிழக அரசு ஞாயிறு அன்று, காவிரிப் படுகையைப் பாதுகாக்க இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதை உடனடியாகச் சட்ட வடிவம் கொடுத்து உத்தரவாதப்படுத்த வேண்டுமென்று அறிவிக்கிறோம். அப்படிச் செய்தால், ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முடியாது.

இந்த அறிவிப்பைச் சட்டமாக இயற்றினால், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். அது இளைஞர்களை விவசாயம் நோக்கி ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்தாலே, அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்க முடியாது, அமைக்கக்கூடாது. அதன்பிறகு, காவிரிப்படுகை முழுவதும் விவசாயம் மட்டுமே நடக்ககூடிய பகுதியாக மாறும். முன்னர் 28 லட்சம் ஏக்கர் விளைநிலமாக இருந்த காவிரிப்படுகையில், இப்போது 15 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளது. விவசாயம் தவிர மற்ற தொழில்களுக்கு நிலம் திசைதிருப்பப்பட்டதும் காவிரி நீர் மறுக்கப்பட்டதுமே முக்கியக் காரணங்கள். இந்த அறிவிப்பு உறுதியானால், விளைநிலங்களை மற்றவற்றுக்குப் பயன்படுத்த அனுமதி கிடைக்காது. அதைப் பாதிக்கக்கூடிய தொழிற்சாலைகள் தடுக்கப்படும். விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளும் மட்டுமே வரும். இவை மட்டுமின்றி மணல் கொள்ளை போன்ற அபாயங்களும் தடுக்கப்படும். அது நீராதாரத்தை மீட்டெடுக்கப் பேருதவி புரியும்" என்று கூறினார்.

திட்டப்படி, வேதாந்தா புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் 116 ஆய்வுக்கிணறுகளையும் நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் 159 ஆய்வுக்கிணறுகளையும் 13,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க அனுமதி கோரியுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடலூர், நாகப்பட்டினத்தில் 40 கிணறுகளை 5,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. ஊராட்சித் தேர்தலில், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியது. திமுக, 50 சதவிகித வாக்குகளோடு வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான மத்திய அரசின் சட்டத்திருத்தத்தை ஆளும் கட்சி எதிர்த்துள்ளது. காவிரி டெல்டாவில் அதிமுகவுக்குக் குறைந்துவரும் செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான முயற்சியாக, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு முதல்வர் எழுதிய கடிதமும் இந்த அறிவிப்பும் பார்க்கப்படுகிறது.

வேளாண் மண்டலம்
வேளாண் மண்டலம்

எது எப்படியிருப்பினும், இப்போது தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பைச் சட்டமாக இயற்றினால் அது காவிரிப்படுகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பல நன்மைகளை ஏற்படுத்தும். அதோடு, விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும். அது இளைஞர்களை விவசாயம் நோக்கி ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும். அதேநேரம், இயற்றப்படும் அந்தச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மேற்கொள்ளக்கூடாத தொழில்கள் குறித்த தெளிவான வரையறைகளும், செயல்படுகின்ற கிணறுகளை மூடுவதற்கான முடிவுகளையும் கொண்டு வரவேண்டிய அவசியத்தைத் தமிழக அரசு உணர வேண்டியது அவசியம்.

பின் செல்ல