Published:Updated:

மதுரையின் `அத்திப்பட்டி' குண்டாங்கல்... குவாரியால் காணாமல்போன விவசாய கிராமம்!

ஆட்கள் நடமாட்டம் இல்லாத குண்டாங்கல்
ஆட்கள் நடமாட்டம் இல்லாத குண்டாங்கல்

தற்போது இந்தக் கிராமம் பசுமையாக இருந்ததற்குச் சாட்சியாகக் கிராமத்துக்கு வெளியே ஆலமரங்கள் விழுதுவிட்டு நிற்கின்றன. வீடுகளைத் தவிர விவசாய நிலங்கள் மற்றும் கோயில்களைத் தனியார் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் உருத்தெரியாமல் அழித்துள்ளனர்.

கிரானைட் குவாரியால் அழிந்த விவசாயக் கிராமத்தின் நிலை ஒரு சுடுகாட்டைப்போல் மாறியுள்ள நிகழ்வு அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் வேதனையடையச் செய்துள்ளது. மதுரை ஒத்தக்கடை புதுதாமரைப்பட்டியிலிருந்து மயிலங்குண்டு செல்லும் சாலையில் உள்ளது குண்டாங்கல். பெரிய அளவு பேருந்து வசதிகள்கூட இல்லை என்றாலும், ஒரு காலத்தில் விவசாயத்தால் மிகச் செழிப்பான கிராமமாக விளங்கியது.

வானொலி அறை குண்டாங்கல்
வானொலி அறை குண்டாங்கல்

ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு இந்தக் கிராமம் உருவாகியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து விவசாயப் பணிக்காக இடம் பெயர்ந்துள்ளனர். ஒத்தக்கடை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் எங்கு விவசாயம் நடந்தாலும் இந்தக் கிராமத்தினர் சளைக்காமல் பணிக்குச் சென்று வந்துள்ளனர். விவசாயம் மட்டும் அல்லாது தங்களது கலாசாரத்தையும் தாங்கிப் பிடிக்கும் விதமாகக் குல தெய்வங்களுக்காக மூன்று கோயில்களை உருவாக்கி வழிபட்டும் வந்துள்ளனர்.

தற்போது இந்தக் கிராமம் பசுமையாக இருந்ததற்குச் சாட்சியாக கிராமத்துக்கு வெளியே ஆலமரங்கள் மட்டுமே விழுதுவிட்டு நிற்கின்றன. வீடுகளைத் தவிர விவசாய நிலங்கள் மற்றும் கோயில்களைத் தனியார் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் உருத்தெரியாமல் அழித்துள்ளதாகவும், அங்கு வாழ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை அங்கு வாழவிடாமல் கிரானைட் குவாரி வெடிகளைப் போட்டும், அவர்களின் ஒற்றுமையைச் சிதைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குவாரி பகுதி
குவாரி பகுதி

சொற்பத்தொகையைக் கொடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட அந்தக் கிராமத்தினர், தற்போது புதுத் தாமரைப்பட்டி, சிங்கம்புணரி உள்ளிட்ட பல இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர் என்கின்றனர்.

தற்போது குண்டாங்கல்லில் 20-க்கும் குறைவான வீடுகள் மட்டுமே இருக்கின்றன. மயான அமைதியில் காட்சியளிக்கும் இந்தக் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டமே இல்லாத சூழல் உள்ளது. அங்கிருக்கும் சில வீடுகளில் கிரானைட் குவாரி உரிமையாளர் ஒருவரின் புகைப்படங்கள் குவியலாகக் கிடக்கின்றன.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட முன்னணி அரசியல் பிரபலங்களுடன் அந்த உரிமையாளர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கறையான் அரித்துக் கிடக்கின்றன. நிழல் தரும் மரங்களும் ஆளில்லாத கட்டடங்களுமாக அந்தக் கிராமமே, இப்போது குடிகாரர்களைக் குதூகலப்படுத்தும் திறந்தவெளி மதுக்கூடமாகவுள்ளது.

பெசன்ட் நகர் - மெரினா இணைப்புச் சாலை... மீனவர்களின் வாழ்தாரத்திற்கு ஆபத்தா? - ஓர் அலசல்

குண்டாங்கல் கிராமத்திலிருந்து ஐஸ்வர்யா நகருக்குக் குடி பெயர்ந்த சில நபர்களைச் சந்தித்துப் பேசினோம்... "விவசாயத்துக்காக வந்த எங்கள் முன்னோர்கள் குண்டாங்கல்லிலேயே தங்கினர். மின்சார வசதிகூட இல்லாமல் வாழ்ந்தாலும் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். விவசாயத்தையும் சாமியையும் தவிர, வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. விவசாயக்கூலியாக இருந்தாலும் கடுமையாக உழைத்து, பல நெல் மூட்டைகளை வீட்டில் சேமித்து வைத்திருந்தோம்.

இயற்கை சார்ந்து வாழ்ந்து வந்த எங்களுக்குத் தண்ணீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி என்று எல்லாம் கிடைத்தன. ஆனால், அவையெல்லாம் எங்களை விரைவில் காலி செய்வதற்காகத் தரப்பட்டவை என்பது தெரியாமல் போனது. அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லாத எங்கள் கிராமத்தை முனியாண்டி, நாகமலை, முத்தையா உள்ளிட்ட நாட்டார் தெய்வங்கள் காத்து வந்தன. அவற்றை நாங்கள் வணங்கி சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம்.

குண்டாங்கல்
குண்டாங்கல்

கிரானைட் குவாரிகள் வந்ததற்குப் பின் எங்களுக்கு நெருக்கடி அதிகமானது. குவாரியில் போடும் வெடிச்சத்தத்தால் எங்களுக்கு அச்சத்தை உருவாக்கினர். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களுக்குக் காசு கொடுத்து எங்களை மூளைச்சலவை செய்தனர். பல விதங்களிலும் எங்களை அச்சுறுத்தினர்.

வேறு வழியில்லாமல் நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். தற்போது குண்டாங்கல் கிராமம் 'அத்திப்பட்டி' போல் காணாமல் போய்விட்டது. குவாரிகள் அட்டூழியத்தால் அந்தப் பகுதியே சுடுகாடாக மாறிவிட்டது. சகாயம் விசாரணை கமிஷனில் மூன்று முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" என்றனர்.

குண்டாங்கல் கிராம மக்கள் பயன்படுத்திய வாட்டர் டேங்
குண்டாங்கல் கிராம மக்கள் பயன்படுத்திய வாட்டர் டேங்

குண்டாங்கல் கிரானைட் குவாரி பகுதியில் காவல்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களை விசாரித்தோம், "எங்களது குவாரி உரிமையாளர் எங்கிருக்கிறார் என்றே எங்களுக்குத் தெரியாது. சம்பளம் எங்களுக்குச் சரியாக வந்துவிடும். இங்கு கிராமம் என்பதெல்லாம் இல்லை. கிரானைட் குவாரி ஊழியர்கள் தங்கும் இடம்தான் இது. குவாரி ஓடினால் மீண்டும் இங்கு ஆட்கள் வந்து விடுவார்கள்" என முன்னுக்குப் பின்னான பதில்களை அலட்சியமாகத் தெரிவித்தனர்.

குண்டாங்கல் ஓர் உதாரணம்தான்... குவாரிகளால் சமாதி கட்டப்பட்ட பல கிராமங்கள் இங்கே இருக்கின்றன. அவற்றுக்கு புத்துயிர் கிடைப்பது எப்போதோ?
அடுத்த கட்டுரைக்கு