சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ICID - International Commission On Irrigation And Drainage) ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பர்ய நீர் பாசன கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு போன்றவற்றுக்கு விருதுகளை அறிவித்து வருகிறது. இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம் (INCID - Indian National Committee on Irrigation and Drainage) அனைத்து மாநிலங்களில் இருந்தும் அதற்குத் தகுதியான பரிந்துரைகளை அனுப்பி வருகிறது.

அதனடிப்படையில் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உலக பாரம்பர்ய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2021 ஜூலை மாதம் விண்ணப்பித்தது தமிழ்நாடு நீர்வளத்துறை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையத்தின் ஆய்வுக்குழு தமிழ்நாடு நீர்வளத்துறை விண்ணப்பித்த கட்டமைப்புகளை நேரில் வந்து ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு உள்ளிட்ட மூன்று கட்டமைப்புகளுக்கு உலக பாரம்பர்ய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாட்டுக்கு நான்கு விருதுகளை வழங்குகிறது சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு விருதுகளில் மூன்று தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் வருகின்ற நவம்பர் மாதம் 7-ம் தேதி வழங்கப்பட இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வீராணம் ஏரி:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலுக்கு அருகில் இருக்கும் வீராணம் ஏரி கி.பி 907 முதல் 953 வரை சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ஏரியை வெட்டிய இளவரசன் இராஜாதித்ய சோழனின் தந்தையான முதலாம் பராந்தக சோழனின் இயற்பெயர் வீரநாராயணன். அதனடிப்படையில் இந்த ஏரி வீரநாராயணன் ஏரி என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் வீராணம் ஏரி என்று மாறிப்போனது. 15 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரி 1,445 கன அடி மில்லியன் கொள்ளளவைக் கொண்டது.
கிழக்குக் கரையிலுள்ள 28 பாசன மதகுகள் மூலமாக சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் 123 கிராமங்களில் உள்ள 49,440 ஏக்கர் விளைநிலங்களுக்கு நேரடியாகவும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி மற்றும் பெருமாள் ஏரிகளை சுற்றியிருக்கும் 40,669 ஏக்கர் விளைநிலங்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதியை பெறுகின்றன. அத்துடன் சென்னை மாநகருக்கு குடிநீர்வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது இந்த ஏரி.
கல்லணை:
வரலாற்று சிறப்புமிக்க கல்லணை, சோழ மன்னன் கரிகாலனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பழமையான அணை. கி.பி.1-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை உலகின் நான்காவது பழைமையான நீர்மாற்று அமைப்பு அல்லது நீர் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பாகும். இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழைமையான கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்த அணை, அதன் அற்புதமான கட்டடக்கலை காரணமாகத் தமிழ்நாட்டின் முதன்மையான சுற்றுலாத்தலமாகத் திகழ்கிறது.

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கீழ்அணைக்கட்டு என எண்ணற்ற நீர்நிலைகளாகப் பிரிந்து, டெல்டா முழுமைக்கும் பாசன வசதிகளை அளித்து, பாசனக் காலம் முழுவதும் திறம்பட ஒழுங்குபடுத்தப்பட்டு, முழு டெல்டா பகுதியான 13,20,116 ஏக்கர் நிலமும் பயனடைகிறது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துகிறது. மேலும், நிலத்தடி நீர் பாதுகாப்பு, குடிநீர் வசதிகள் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றுக்கும் உறுதுணையாக உள்ளது.
காளிங்கராயன் வாய்க்கால்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் வாய்க்கால் கொங்கு பகுதியின் குறுநில மன்னர் காளிங்கராயன் என்பவரால் வெட்டப்பட்ட ஒரு பழைமையான வாய்க்கால். இந்த வாய்க்கால் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழைமையான கட்டமைப்பாகும்.

இதனால் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களில் சுமார் 15,743 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. எந்தவித நவீன வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் வெட்டப்பட்ட காளிங்கராயன் வாய்க்காலை உலகின் பாரம்பர்ய நீர் கட்டமைப்புகளில் ஒன்றாக அறிவித்திருக்கிறது யுனெஸ்கோ.