Published:Updated:

`10% அதிகரிப்பு; புலிகள் எண்ணிக்கையை வெளியிட்ட முதுமலை!’ நம்பிக்கையளிக்கும் கள நிலவரம்

புலிகள்
புலிகள்

100 சதுர கி.மீ பரப்பளவில்  2014-ல் 8.07 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 கணக்கெடுப்பின்படி 8.88 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அழிந்துவரும் புலிகளைப் பாதுகாக்க ஆண்டுதோறும் ஜூலை 29 (இன்று) உலக புலிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

புலி
புலி

இந்தியாவில் உள்ள 48 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

`அகழியில் இறந்துகிடந்த இளம் புலி!’ - பந்திப்பூரை தொடர்ந்து வயநாட்டிலும் சோகம்

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நாகர்ஹோலே, பந்திப்பூர், முதுமலை பிளிகிரிரங்கா, சத்தியமங்கலம் உள்ளிட்ட புலிகள் காப்பகங்கள் மற்றும் வயநாடு காட்டுயிர் சரணாலயம் ஆகிய பகுதிகள், காடுகளில் வாழும் வங்கப் புலிகளை அதிகம் கொண்ட நிலப்பரப்பாக உள்ளன.

புலி
புலி

321 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு 668 சதுர கி.மீ பரப்பளவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

புலிகள் காப்பகத்தைச் சுற்றிலும் தொடரும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாகப் புலிகளின் வாழிடப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றன. அதேவேளையில், கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்ற புலிகளின் எண்ணிக்கை தற்போது மெல்ல அதிகரித்து வருவதாக வெளியிடப்படும் ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

புலி
புலி

முதுமலை புலிகள் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில், முதுமலையில் மொத்தம் 162 புலிகள் இருப்பதாகவும், இதில் 103 புலிகள் முதுமலையை மட்டுமே வாழ்விடமாகக் கொண்டுள்ளதாகவும், 59 புலிகள் வெளிவட்ட பகுதிகளில் இருந்து வந்து முதுமலையை அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதாகவும் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

முதுமலை உள் மற்றும் வெளி மண்டலத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்து விளக்கிய முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல், ``முதுமலை கோர் பகுதியில் 100 சதுர கி.மீ பரப்பளவில் 2014-ல் 8.07 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை  2018 கணக்கெடுப்பின்படி 8.88 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் கூடியிருக்க வாய்ப்புகள் உள்ளது.

வெளி மண்டலத்தைப் பொறுத்தவரை 2014-ல் இணைக்க  அறிவிக்கப்பட்டாலும், 2018-ல்தான் முதுமலையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இதனால் வெளி மண்டலத்தில் புலிகளின் எண்ணிக்கை குறித்த சரியான விவரங்கள் இல்லை" என்றார்.

புலிக்குட்டி
புலிக்குட்டி

புலிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் ஆக்சிஜன் அமைப்பைச் சேர்ந்த ஊட்டி சுரேஷ் பேசுகையில்,``புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அவற்றின் வாழிடப் பற்றாக்குறை பெரும் இன்னலுக்குள் அவற்றை இட்டுச் செல்லும். எனவே, வன விரிவாக்கம் இவற்றுக்கு உடனடி தேவையாக உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு