Published:Updated:

கோவாவில் கொல்லப்பட்ட தாய்ப்புலியும் 3 குட்டிகளும்... விஷம் வைத்ததுதான் காரணமா?

Representational Image
Representational Image ( Pixabay )

இன்றுவரையிலுமே இந்தியாவில் புலிகள் இறப்பது தொடர்கதையாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கி நான்கே நாள்களில் கோவாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள நான்கு புலிகளின் சடலங்கள், அந்த அவலத்திற்குச் சாட்சியாக நிற்கின்றன.

உலகிலேயே அதிகமான புலிகளைக்கொண்ட நாடாக இந்தியாவைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்ட மத்திய அரசு, சர்வதேச அளவில் புலிகள் அதிகம் இருப்பது இந்தியாவில்தான் என்று கூறியது. அந்தக் கூற்றை ஆதரிக்கும் வகையிலான ஆதாரங்கள் கிடைத்ததைவிட, அதற்கு முரணாகப் புலிகள் அதிகமாக இறந்துகொண்டிருக்கும் செய்திதான் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று பகிரங்கமாக அறிவித்த மத்திய அரசு, அந்தக் காலகட்டத்தில் எத்தனை புலிகள் இறந்தன என்பதைக் கூறாமல் அமைதியாகிவிட்டது.

புலி
புலி
Pixabay

ஆம், இன்றுவரையிலுமே இந்தியாவில் புலிகள் இறப்பது தொடர்கதையாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நான்கே நாள்களில் கோவாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள நான்கு புலிகளின் சடலங்கள், அந்த அவலத்திற்குச் சாட்சியாக நிற்கின்றன.

கடந்த வாரம், கோவாவிலுள்ள சட்டாரி தாலுகாவில் அமைந்திருக்கும் மஹாதாயி காட்டுயிர் சரணாலயத்தில் இரண்டு புலிக்குட்டிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த இரண்டு நாள்களில் ஒரு பெண் புலி மற்றும் ஒரு புலிக்குட்டியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்துபோன மூன்று புலிக்குட்டிகளுமே இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட பெண் புலிக்குப் பிறந்தவைதான் என்பதும் உறுதியாகத் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, தாய்ப்புலியும் அதன் மூன்று குட்டிகளும் ஒரே காலகட்டத்தில் இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

கோவாவில் புதன் அன்று, நான்காவது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, அம்மாநில வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரை, புலிகளுக்கு விஷம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, வனத்துறை அலுவலர்கள் சட்டாரி தாலுகாவிலுள்ள கோலாவாளி கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது முதல் புலிக்குட்டியின் சடலம் கிடைத்தது. இரண்டாவது குட்டியின் சடலம், செவ்வாய்க் கிழமையன்று கிடைத்தது. அவற்றைத் தொடர்ந்து புதன் கிழமை, தாய்ப்புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் விட்டத்திற்குள் நான்காவது புலிக்குட்டியின் சடலம் கிடைத்தது.

Tiger Carcass
Tiger Carcass

இந்தத் தாய்ப்புலியும் அதன் மூன்று குட்டிகளும் டிசம்பர் மாதம் 23-ம் தேதியன்று, இந்தப் பகுதியில் உலவிக்கொண்டிருந்தது, வனத்துறை பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. இங்கிருப்பது பதிவாகிய இரண்டே வாரங்களில் அவற்றுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டிருப்பது காட்டுயிர் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது சடலம் கிடைத்த சில நிமிடங்களிலேயே, அவை கிடைத்த இடத்திற்கு அருகில் குடியிருக்கும் விதோ ஸிபோ பவ்னே, நலோ நாகோ பவ்னே மற்றும் அவருடைய சகோதரர் போம்போ நாகோ பவ்னே ஆகிய மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

மஹாதாயிர் காட்டுயிர் சரணாலயத்திற்கு உள்ளேயே அமைந்துள்ளது குலாவாளி கிராமம். கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலுள்ள காடுகளை இணைக்கும் புலிகளின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாக அறியப்படும் வனப்பகுதி.

வனத்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில், அங்கு அமைந்துள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளை இந்தப் புலிகள் வேட்டையாடியதால் விஷம் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் கிடைத்தவுடன், மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை அமைச்சகம் நான்கு புலிகளின் இறப்பையும் விசாரிக்க இரண்டு பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது.

இறந்த புலிகளுடைய சடலங்களை உடற்கூறாய்வு செய்யக்கூட வனத்துறையிடம் வசதிகள் இல்லை.
ராஜேந்திர கெர்கார், சூழலியல் ஆர்வலர்

தேசிய புலிகள் ஆணையத்தின் மூத்த அதிகாரி ராஜேந்திர கராவாத் தலைமையில் அந்தக் குழு, இதை விசாரிக்குமென்று வனத்துறை அறிவித்துள்ளது. பிரச்னையின் தீவிரம் கோவா முழுக்கப் பரவிய உடனேயே, அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மத்திய அரசுடைய விசாரணைக் குழு இந்த மரணங்களை விசாரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானேவினுடைய தொகுதியில்தான் மஹாதாயி காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள இந்தத் தொடர்ச்சியான புலிகள் இறப்புகளைக் குறிப்பிட்டு அவர் எழுதிய ட்வீட்டில், ``இந்தப் பிரச்னையை முழுமையாக விசாரிப்பதற்காக மத்திய அரசு சார்பில் தனிப்படை அமைக்குமாறு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயர்மட்டக் குழு, புலிகளின் இறப்பை விசாரிப்பதோடு, இதில் மாநில வனத்துறையின் எதிர்வினைகள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் போன்றவற்றையும் விசாரிக்கும். விசாரணைக்குப் பிறகு உயர்மட்டக் குழு, 1972-ம் ஆண்டின் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டத்தின் படியும், தேசிய புலிகள் ஆணையம் புலிகள் இறப்புக்கு எடுக்கவேண்டுமென்று வகுத்துள்ள நிலையான செயல்பாடுகளின் படியும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதைப் பரிந்துரைக்கும்.

Tiger Carcass
Tiger Carcass

இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, கோவா வனத்துறை அதிகாரிகள் மேலும் ஏதாவது சடலங்கள் கிடக்கின்றனவா என்பதை ஆராய, மஹாதாயி பகுதியிலுள்ள மொத்தக் காட்டையும் சல்லடை போடத் தொடங்கியுள்ளனர். அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ள சூழலியல் ஆர்வலர் ராஜேந்திர கெர்கார், ``இந்தச் சடலங்களை உடற்கூறாய்வு செய்யக்கூட வனத்துறையிடம் வசதிகள் இல்லை" என்று கூறியுள்ளார்.

உயிரிழக்கும் காட்டுயிர்களை உடற்கூறாய்வு செய்தால்தான், அவை இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும். அப்போதுதான், அவை செயற்கையாக இறந்தன என்பதை உறுதி செய்து, அவற்றுக்கு எதிரான குற்றச்செயல்களைத் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கமுடியும். அதற்கே வசதிகளின்றி இருக்கிறதென்றால், மஹாதாயி காட்டுயிர் சரணலாயத்தில் வாழும் காட்டுயிர்களின் பாதுகாப்பு என்ன நிலையில் இருக்கிறது என்ற அச்சத்தை காட்டுயிர் ஆர்வலர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

புலிகள்
புலிகள்
Pixabay
கர்நாடகாவை மிரட்டிய ஆண் புலி பிடிபட்டது எப்படி?   திக் திக் கதை

இந்த நான்கு புலிகளின் இறப்பை மட்டுமன்றி, நாடு முழுக்கத் தொடர் கதையாகிக்கொண்டிருக்கும் புலிகள் இறப்பைக் கட்டுப்படுத்த என்றே பிரத்யேகமான உயர்மட்டக் குழுவை மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அமைக்கவேண்டும். அந்தக் குழுவுக்குக் குறிப்பிட்ட எல்லை வரை சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரத்தை வழங்குவதோடு, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்போடு அது இயங்கும் வகையில் வடிவமைக்கவேண்டும்.

இல்லையேல், இந்த நிலை மேலும் தொடரும். அது, நாட்டின் தேசிய விலங்கை இழக்கும் நிலைக்கும்கூடக் கொண்டு போகும் அளவுக்கு ஆபத்தானது என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன இதுபோன்ற நிகழ்வுகள்.
அடுத்த கட்டுரைக்கு