Published:Updated:

ரூ.12,000 கோடிக்கு நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடக்கம்... விதிமுறைகளை வளைத்ததா தமிழக அரசு?

பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலை
பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலை ( Soham Banerjee )

தமிழகம் நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு, நெடுஞ்சாலை விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமை.

2017-ம் ஆண்டு, மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்காரி, துறைமுகம், கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து ஆகியவற்றில் 1 லட்சம் கோடி முதலீட்டில் திட்டங்களை அறிவித்தார். அதில், தமிழகத்துக்கு 12,000 கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஒதுக்கப்பட்டன.

அதில், திருச்சி - சிதம்பரம், விழுப்புரம் - நாகப்பட்டினம், சென்னை - தடா, பூந்தமல்லி - வாலாஜாபேட்டை ஆகிய திட்டங்கள் அடக்கம். இவை தவிர 5,000 கோடி ரூபாய் செலவில் சென்னையை இணைக்கும் மூன்று மேம்பால நெடுஞ்சாலைகளும் திட்டத்தில் உண்டு. 2,250 கோடி ரூபாய் செலவில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை, 1,500 கோடி ரூபாய் செலவில் பூந்தமல்லியிலிருந்து மதுரவாயல் வரை, 1,000 கோடி செலவில் சென்னை முதல் வண்டலூர் வரை என மேம்பால நெடுஞ்சாலைகள் திட்டமிடப்பட்டன.

ரயில்வே போக்குவரத்து
ரயில்வே போக்குவரத்து
Sai Kiran Anagani

சுமார் 1,300 கிலோமீட்டருக்குப் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் தமிழகத்துக்குக் கிடைக்கப்போவதாக, அப்போது பேசிய நிதின் கட்காரி தெரிவித்தார்.

அதன்பிறகு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை இணைக்கின்ற மேம்பால விரைவுச்சாலைக்கான திட்டத்தைத் தமிழக அரசு கையில் எடுத்தது. அந்தத் திட்டம் 2010-11ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது தொடங்கப்பட்டு, பின்னர் 2012-ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சியின்போது கைவிடப்பட்டது. அந்தத் திட்டத்தைத் தற்போதைய அரசு, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் கையிலெடுத்ததைப் போலவே, 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்குவதற்கான டெண்டரையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதையும் புதிய திட்டங்களாக அன்றி, விரிவாக்கத் திட்டம் என்ற பெயரில் தொடங்கவுள்ளதாகச் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலை விரிவாக்கம், சாலையின் தரத்தை உயர்த்துதல், போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளுக்காகத் தமிழக அரசு தனது இணையதளத்தில் டெண்டர் வெளியிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் வழிகாட்டு நெறிப்படி இத்திட்டங்களுக்கு 'சூழல் தாக்க மதிப்பீடு' கட்டாயமல்ல என்ற ஓட்டையைப் பயன்படுத்தி ஐஆர்சியின் வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படாமல் இத்திட்டங்கள் டெண்டர் விடப்பட்டிருக்கின்றன. உண்மையிலேயே அரசு, சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டதாகவிருந்தால் இத்திட்டத்தின் பிரம்மாண்டத்தையும் அது கொடுக்கும் சூழல் தாக்கத்தையும் கருத்தில்கொண்டு சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் ஐஆர்சிதான் உச்சபட்ச அமைப்பு என்ற அடிப்படையில் அதன் வழிகாட்டு நெறிகளை நெடுஞ்சாசைத்துறை பின்பற்றியிருக்க வேண்டும்.

சமூகத்தைப் பாதிக்கும் திட்டங்களில் ஈடுபடுவது குறித்து விவாதிப்பதை அரசு தவிர்க்க வேண்டும்.
மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர்

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு உட்படுத்தாமல் நெடுஞ்சாலைத்துறையில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, இப்போதைய கொள்ளை நோய் காலகட்டத்தில் தொடங்கியிருப்பது தேவையற்றது. இந்த டெண்டரை அறிவிப்பதன் மூலம் ஏதோவொரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தமிழகம் நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு இத்தகைய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதே நல்லது. 12,000 கோடியிலான நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரை உடனடியாக ரத்து செய்து, அந்த நிதியைக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

"தம் உருவாக்கத்துக்குப் பல மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் மலைகளை நாம் ஒருமுறை பெயர்த்தெடுத்துவிட்டால் மீண்டும் மீட்டுருவாக்க முடியாது. மணல், நீர் போன்ற சில வளங்கள் கட்டுமானங்களுக்காக எடுக்கப்படும்போது மீண்டும் ஆறுகள், மலைகளில் ஏற்படும் மண்ணரிப்பு மூலமாகவும் இயற்கையான நீர் சுழற்சி மூலமாகவும் மீண்டும் அவை (ஓரளவுக்கு) புதுப்பிக்கப்படுகின்றன. எனினும், அவை அழிக்கப்படும் வேகம் புதுப்பிக்கப்படும் வேகத்தைவிடக் குறைவாகவே இருக்க வேண்டும். கண்மூடித்தனமான வேகத்தில் வரைமுறையற்று இயற்கை வளங்களை அழிப்பது இப்புவியில் மனிதனின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.

ஆற்றுப்படுகைகளில் உள்ள மணலானது நீரை வடிகட்டி நிலத்தடிநீரை மேம்படுத்தக்கூடியது. மணல் எவ்வளவு ஆழமானதாக ஆற்றுப்படுகையில் இருக்கிறதோ அவ்வளவு நிலத்தடி நீர் அப்பகுதியில் புதுப்பிக்கப்படும். ஆனால் கட்டுமானங்களுக்காக அதிகமாக மணலும் நன்னீரும் சுரண்டப்படும்போது இதற்கு எதிர்மாறான விழைவே ஏற்படுகிறது" என்று இந்திய ரோடு காங்கிரஸ் (IRC) என்றழைக்கப்படும் இந்தியச் சாலைப் பொறியாளர்களுக்கான அமைப்பினுடைய சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான சிறப்பு வெளியீட்டில் கூறப்பட்டிருப்பதைத் தன்னுடைய அறிக்கையில் மேற்கோள் காட்டியிருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

தமிழக நெடுஞ்சாலை
தமிழக நெடுஞ்சாலை
Superbmust

"59 கோடி கன அடி ஜல்லி, 45 கோடி கன அடி மண், 6 கோடி கன அடி மணல், 7.5 லட்சம் டன் சிமென்ட், 7 லட்சம் டன் தார் என்று இயற்கை வளக் குவியலே தேவைப்படுகின்ற திட்டத்தைச் சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் நிறைவேற்றுவது சரியா?" என்றும் கேள்வியெழுப்பியுள்ளது அந்த அமைப்பு.

இந்தியாவில் சாலைகள், மேம்பாலங்கள் போன்றவற்றை அமைக்கும்போது, அதில் கடைப்பிடிக்க வேண்டிய தர நிர்ணயங்கள் மற்று வழிமுறைகளை வரையறுப்பது ஐ.ஆர்.சி தான். இந்தியாவில் எந்த நெடுஞ்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானாலும், ஐ.ஆர்.சி-யின் வழிமுறைப்படியே செயல்படுத்த வேண்டும். அந்த அமைப்பு, 'சாலைக் கட்டுமானங்களால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகளைக் கணக்கிடுவது முக்கியமானது மட்டுமல்ல, அவசியமானது' என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும், இந்தியாவில் அமைக்கப்படுகின்ற பெரும்பான்மைப் போக்குவரத்துக் கட்டுமானங்கள் சுற்றுச்சூழலை, இயற்கை வளங்களை அழித்தே அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் இப்படிப்பட்ட தர நிர்ணயங்களை வகுத்துள்ள ஐ.ஆர்.சி-யின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காமல், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தமிழக அரசு சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யாமலே திட்டத்தைத் தொடங்கவிருப்பதாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, ஆண்டுதோறும் சாலைப் பராமரிப்புக்கு மட்டுமே தொடர்ந்து கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது. கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் வழக்கமான சாலைகள் மற்றும் பாலங்கள் பழுது பார்ப்பதற்காகத் தமிழக அரசு சுமார் 41,000 கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாகச் சுட்டிகாட்டியிருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு. "இவ்வளவு செலவு செய்துமே சாலைப் போக்குவரத்து, பெரிய வளர்ச்சியின்றி மந்தமாகவே இருக்கும் நிலையில் பல்லாயிரம் கோடிகள் செலவில் இந்தச் சாலை மேம்பாட்டுப் பணிகள் தேவையா?" என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.

"12,000 கோடி மதிப்பிலான இந்தப் பெரும் திட்டத்துக்கு டெண்டர் விடுவதற்கு முன்பே, உரிய சூழலியல் தாக்க மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக நெடுஞ்சாலைத்துறை இவை, எதையுமே கருத்தில் எடுக்காமல் அவசர அவசரமாகச் செயல்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுகின்றது" என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய விரைவுச்சாலை
தேசிய விரைவுச்சாலை
kevin rawlings

இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பரிந்துரைத்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெண்டர் வெளியீடு, சமூகத்தைப் பாதிக்கும் திட்டங்களில் ஈடுபாடு ஆகியவை குறித்து நேருக்கடியான இந்தக் காலகட்டத்தில் விவாதிப்பதை அரசு தவிர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் இதுகுறித்துப் பேசியபோது, "சுற்றுச்சூழல் பாதுகாப்பு எவ்வளவு அவசியமானது என்பதை அனுபவபூர்வமாக உணரக்கூடிய தருணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய வளிமண்டலத்தில் கரிம வாயுவின் அளவு கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தமிழக நிலப்பரப்பில் 30% ஏற்கெனவே பாலையாகிக்கொண்டிருக்கும் நிலையில், இதைப்போன்ற வளங்களைச் சூறையாடும் திட்டங்களை பாலையாதலை அதிகரிக்கவே செய்யும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பாலையாவது என்றால், முற்றிலும் மணலாக பாலைவனமாகிறது என்று அர்த்தமல்ல. 'குறிஞ்சியும் முல்லையும் தன் இயல்பிலிருந்து திரிவதே பாலை' என்று சிலப்பதிகாரம் சொல்வதுபோல் நிலம் அதன் இயல்பை இழந்து வெற்று நிலமாவதே 'பாலைவனமாதல்' என்று நாம் கூறுகின்றோம். அந்த நிலை, அப்பகுதியின் சூழலியல் சமநிலையையே சீர்குலைத்துவிடும். கொள்ளை நோய்க் காலகட்டத்திலிருந்து நாம் இன்னும் மீண்டு வராத நிலையில் மாநிலப் பொருளாதாரமும் மக்களின் முதன்மையானத் தேவைகளும் கொரோனாவுக்குப் பின்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்த்து அதற்கேற்றத் திட்டங்களை அரசு முன்னெடுப்பதே விவேகமானது" என்று கூறினார்.

சென்னை டோல்கேட்
சென்னை டோல்கேட்
சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 - சூழலியாளர்களின் குரலுக்கு செவி கொடுக்குமா மத்திய அரசு?

ஏற்படக்கூடிய பின் விளைவுகளைக் கருத்தில்கொண்டு, அறிவிக்கப்பட்டுள்ள சாலை விரிவாக்கத் திட்டங்கள் இப்போது உடனடியாகக் கொண்டு வர வேண்டிய அளவுக்கு அவசியமானவையா என்று தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு உரிய சூழலியல் தாக்க மதிப்பீடு செய்தபிறகே, அவற்றுக்கான வேலைகளைத் தொடங்க வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி கொடுக்குமா அரசு? தமிழகத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணிக் காக்குமா?

அடுத்த கட்டுரைக்கு