தமிழகத்தில் வாழ்ந்துவரும் இருளர் பழங்குடியின சமூகத்தினர், தங்களது தொழிலாக வேட்டையாடல், பாம்பு பிடித்தல் போன்றவற்றைச் செய்துவருகின்றனர். பல்லுயிர் பெருக்கம் காரணமாக, வன உயிரின சட்டத்தால் பாம்பு பிடிக்க தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இருளர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்பதால், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி பகுதியிலுள்ள முதலைப் பண்ணையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. அதன் மூலம் இருளர் பழங்குடியின மக்கள் பாம்பு பிடித்துவந்தனர். இவர்கள் பிடித்துவரும் பாம்புகள், கூட்டுறவு சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டு, விஷ முறிவு மருந்துகளுக்காகப் பிடித்துவரப்பட்ட பாம்புகளிடமிருந்து விஷம் எடுக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் மீண்டும் விடப்பட்டுவந்தன.

மேலும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பாம்புகளின் இனவிருத்தி காலமென்பதால், ஆகஸ்ட் முதல் மார்ச் வரை பாம்பு பிடி காலமாக இருளர்களுக்குத் தமிழக வனத்துறை அனுமதி வழங்கிவந்தது. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக, பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்குவதில் வனத்துறை காலதாமதம் செய்வதாக இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினர் குற்றச்சாட்டு முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், இருளர் பழங்குடியின மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், `பாம்புக்கடி, விஷ முறிவு மருந்துகளுக்காக, பாம்புகளைப் பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்குத் தமிழக அரசு அனுமதி வழங்குகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
