Published:Updated:

EIA 2020: கருத்துத் தெரிவிப்பதற்கான காலஅவகாசம் நாளையுடன் முடிகிறது!

தொழிற்சாலை
தொழிற்சாலை

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (EIA 2020) வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான காலஅவகாசம் நாளையுடன் (ஆகஸ்ட் 11-ம் தேதி) முடிவடைகிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (Environment Impact Assessment 2020) வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வெளியிட்டது. சுற்றுச்சூழலை மோசமாகப் பாதிக்கக்கூடிய அம்சங்கள் இந்த வரைவு அறிக்கையில் இருப்பதாக சூழலியலாளர்கள் குற்றம்சாட்டினர்.

சுரங்கம்
சுரங்கம்

இந்தியாவில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் - 2006-ன் கீழ் அனுமதிபெற வேண்டும். திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும். அதை அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்யும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்காத திட்டமாக இருக்கும்பட்சத்தில் அனுமதி வழங்கப்படும் அல்லது அனுமதி மறுக்கப்படும். இந்த விதிமுறைகளையும் நடைமுறைகளையும் காலி செய்வதற்காகத்தான், இ.ஐ.ஏ 2020-ஐ மத்திய அரசு கொண்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இ.ஐ.ஏ 2020 எதிர்க்கப்படுவது ஏன்?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020-ல், பொதுமக்கள் கருத்துக் கேட்பு மற்றும் பொது ஆலோசனைகளிலிருந்து பல திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது சூழலியல் செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு. ராணுவம் போன்ற நாட்டின் பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் என்றால், அவை பற்றிய விவரங்களை எந்தப் பொதுத்தளத்திலும் வெளியிட வேண்டிய அவசியம் கிடையாது. இப்போது, ராணுவம் மற்றும் பாதுகாப்பு அல்லாத வேறு திட்டங்களையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த (strategic) திட்டம் என்று குறிப்பிட்டுவிட்டால், அது பற்றிய விவரங்களை வெளியிட வேண்டியதில்லை. இ.ஐ.ஏ 2020-ல் இடம்பெற்றுள்ள மிகமோசமான அம்சங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

தொழிற்சாலை
தொழிற்சாலை

புதிதாக வரும் திட்டம் அல்லது தொழிற்சாலை தொடர்பாக பொது மக்களின் கருத்துகளைக் கேட்பதற்கு 60 நாள்கள் என இருந்த காலஅவகாசம், இப்போது 40 நாள்களாகவும், பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு இருந்த காலஅவகாசம் 30 நாள்களிலிருந்து 20 நாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளன.இந்தக் காலஅவகாசம் போதுமானதல்ல என்பதும் சூழலியலாளர்களின் குற்றச்சாட்டு. இ.ஐ.ஏ 2020-வின் பெரும்பாலான அம்சங்கள் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் சுற்றுச்சூழல் மற்றும் தேசத்தின் வளங்களை அழிக்கும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதாக எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில், தேசத்தின் சுற்றுச்சூழலையும் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் வகையிலான சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு இ.ஐ.ஏ 2020 பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

ஒதுக்கிவைத்த ஜெயலலிதா... அல்வா கொடுத்த கருணாநிதி... எஸ்.வி.சேகரின் அரசியல் வரலாறு!
தொழிற்சாலை
தொழிற்சாலை

இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம் என்றும், அதற்கான கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. குறைந்த கால அவகாசம் என்பதால், கருத்து தெரிவிப்பதற்கான தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, ஆகஸ்ட் 11-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை கடைசி நாள். இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்புவோர் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலைமாற்ற அமைச்சத்தின் இ-மெயில் (eia2020-moefcc@gov.in) முகவரிக்கு கருத்து தெரிவிக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு