Published:Updated:

காட்டுத்தீ, வெட்டுக்கிளி படையெடுப்பு, சூறாவளி... 2020-ன் டாப் 10 சூழலியல் நிகழ்வுகள்! #Rewind2020

இந்த வருடத்தின் டாப் 10 சூழலியல் நிகழ்வுகள் என்னென்ன? #Rewind2020

பூமியின் சுற்றுச்சூழல் மாற்றங்கள் உலகம் தோன்றிய நாளிலிருந்தே நடைபெற்று வந்தாலும், தற்போது அதன் வேகம் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. இது மனிதர்கள் உள்பட பூமியின் அனைத்து உயிர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது. உலக வெப்பமயமாதல்; காற்று, நீர் மற்றும் மண்ணை மாசுபடுத்துதல்; பரவலான காடழிப்பு, ரசாயனக் கழிவு வெளியேற்றம் போன்ற பல மனித செயற்பாடுகள் ஆபத்தை விளைவிக்கின்றன. இவை நமது சூழலியலில் அனைத்து உயிரினங்களும் சார்ந்திருக்கும் உயிர் இயற்பியல் அமைப்புகளின் ஒருமைப்பாட்டை குலைக்கும் அச்சுறுத்தல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

ஒவ்வொரு வருடம் முடிவிலும் பார்க்கும் போதும், சூழலியல் மாற்றங்கள் பெரும்பாலும் உயிரினங்களுக்குப் பாதகமாகவே அமைந்திருந்தாலும் இவ்வருடம் ஒரு சில சாதகமான விஷயங்களும் நடந்திருப்பது ஓரளவுக்கு ஆறுதல். இந்த வருடத்தின் டாப் 10 சூழலியல் நிகழ்வுகளை இங்கே பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ

2019 செப்டம்பர் மாதத்திலேயே ஆரம்பித்து 2020 மார்ச் மாதம் வரை கொழுந்து விட்டு எரிந்து, தன் எரிந்த சாம்பலினால் முழு உலகத்தையே 2020-ல் புகை மண்டலமாக மாற்றியது ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ.

அதி உச்ச வெப்பநிலை மாற்றம் மற்றும் பல மாதங்களாக நிலவிய கடுமையான வறட்சி ஆகியவை ஆஸ்திரேலியா முழுவதும் புஷ் ஃபயர்களைத் தூண்டிவிட்டன. புவி வெப்பமாகி, நிலம் வறட்சியாகி, உயிரினங்கள் நிர்கதியாகி, ஒரு கண்டமே பற்றி எரிந்த பரிதாபம் இது.

24 மில்லியன் ஹெக்டேர் நிலம் எரிக்கப்பட்டு, 3000 வீடுகள் அழிக்கப்பட்டு, மூன்று பில்லியனுக்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டு, ஆறு ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மூன்று அமெரிக்க வான்வழி தீயணைப்பு வீரர்கள் உட்பட முப்பத்து மூன்று மனித உயிர்களைப் பலி கொண்டு ருத்ரதாண்டவம் ஆடி அடங்கியது ஆஸ்திரேலியாவின் Black Summer!

ஆஸ்திரேலியா காட்டுத் தீ!
ஆஸ்திரேலியா காட்டுத் தீ!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் எதிர்பாரா விதமாக பற்றிக்கொண்ட தீயைத் தொடர்ந்து உடனடியாக 2019 நவம்பரில் அவசரகால நிலையை ஆஸ்திரேலியா அரசாங்கம் பிரகடனப்படுத்தியது. ஆனால், தீ அனைத்து மாநிலங்களிலும் வேகமாகப் பரவத் தொடங்கியதை அடுத்து, 2020 புது வருடம் ஆரம்பிக்கும் போதே ஆயிரக்கணக்கான மக்கள் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா பகுதிகளில் இருந்து வேறு வழியில்லாமல் அந்த நாள் முழுவதும் கடற்கரைகளில் தஞ்சம் புகுந்தனர். மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் ஏற்பட்ட தீ இறுதியாக 2020 பிப்ரவரி 13 அன்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீயழிவு ஒரு புறம் என்றால் புகை மற்றொரு பேரழிவாக மாறியது. ஜனவரி 1-ம் தேதி, ஆஸ்திரேலியாவில் இதுவரை கண்டிராத மிக மோசமான வளி மாசு பதியப்பட்டது. காற்றின் தரக் குறியீடானது (air quality index) அபாயகரமானதாக கருதப்பட்ட அளவுகோலை விட 23 மடங்கு அதிகமாகப் பதிவாகியது.

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஒரு மதிப்பீட்டின்படி, 1 பில்லியனுக்கும் அதிகமான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவை தீப்பிழம்புகளில் உயிர் இழந்திருக்கலாம் என்கிறார்கள். கங்காரு தீவில் சுமார் 25,000 கோலாக்கள் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள கோலாக்களில் மூன்றில் ஒரு பகுதியான எட்டாயிரம் கோலாக்கள் அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது, மேலும் கோலாக்களின் வாழ்விடங்களில் சுமார் 30 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டன.

அதோடு மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவிற்கு மட்டுமே சொந்தமான தனித்துவம் மிக்க சூழலியலை இந்த தீ தன் கோரப்பசிக்கு உணவாக்கி இரையாக்கியது. ஆஸ்திரேலியா கண்டத்தில் மட்டும் உலகில் வேறு எந்த இடத்திலும் இல்லாத 244 உயிரினங்கள் உள்ளன. இவை அனைத்துமே இந்தத் துரதிஷ்ட விபத்தில் பெருமளவு அழிந்துள்ளன.

ஒரு சிறு பொறி பெரு நெருப்பாக மாறி பூமியின் ஒரு பெருநிலத்தையும் அதன் வாழ்வாதாரமாக இருந்த சூழலியலையும் கூண்டோடு அழித்து ஒழித்துவிட்ட அவலம் 2020 ஆரம்பத்திலேயே பதிவாகியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஷ்யாவின் Norilsk எண்ணெய்க்கசிவு

மே மாதம் 29-ம் தேதி அதிகாலை 2 மணி, துருவ ஆர்க்டிக்கில் மிக மோசமான பேரழிவு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் வர்ணிக்கப்படும் அதிர்ச்சிகரமான சம்பவம் Norilsk-ல் நிகழ்ந்தது. ஒரு மின் நிலையத்தில் பெரிய எரிபொருள் தொட்டி ஒன்று சிதைந்ததன் மூலம் 20,000 ஆயிரம் டன் டீசல் எரிபொருள் ஆற்றில் கலந்து ஒரு பெரிய நன்னீர் ஏரியையே மாசுபடுத்தியது.

முகம் பார்க்கும் கண்ணாடி போல தெளிந்த நீரோடையாக இருந்த Ambarnaya ஏரி, எண்ணெய்க்களப்பினால் வானவில்லில் வர்ணங்களுடன் மிதக்கும் டீசல் குளமாக மாறியது.

Norilsk எண்ணெய்க் கசிவு!
Norilsk எண்ணெய்க் கசிவு!

உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் தயாரிப்பாளரான நோரில்ஸ்க் நிக்கல் எனும் நிறுவனத்துக்கு சொந்தமான ஓர் ஆலையில் இருந்தே இந்த விபத்து நிகழ்ந்தது. கசிந்த எண்ணெய், விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 12 கி.மீ (7.5 மைல்) தொலைவுக்குப்பரவி, ரஷ்யாவின் சைபீரியாவில் இருந்து வடகிழக்கு திசை நோக்கி பியாசினோ ஏரிக்குள் பாய்ந்தது. 60 கிலோமீட்டர் நீளமும் 428 சதுர கிலோமீட்டர் வடிகால் படுகையையும் கொண்ட அம்பர்னயா நதியின் தெளிவான நிறமற்ற நீரை, ரத்தச்சிவப்பாக மாற்றியது.

சம்பவம் நடந்த இடத்திற்கு தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து சென்றவர்களுள் ஒருவர, அந்த ரத்தச்சிவப்பு நீரில் ஒரு குச்சியை விட்டு எடுத்து, அதன் முனையில் லைட்டரை பத்திப்பிடித்தபோது உடனடியாக அது தீப்பற்றிக்கொண்டது.

சுற்றுச்சூழல் குழுக்கள் ஆற்றின் புவியியல் அளவு மற்றும் ஆற்றில் கலந்துவிட்ட எண்ணெய்க்கசிவின் அளவு காரணமாக இதனை முற்றாக சுத்தம் செய்வது கடினம் என்று கூறுகிறார்கள். இது அலாஸ்காவில் 1989-ல் ஏற்பட்ட எக்ஸான் வால்டெஸ் பேரழிவுடன் (Exxon Valdez disaster) ஒப்பிடப்படுகிறது.

பிலிப்பைன்ஸின் தால் எரிமலை சீற்றம்

ஜனவரி 12, 2020... உள்ளூர் நேரம் பிற்பகல் 1 மணியளவில், பிலிப்பைன்ஸின் (Batangas, Calabarzon Region) கலபார்சன் பிராந்தியத்தின் படங்காஸ் மாகாணத்தில் அமைந்துள்ள தால் எரிமலை (Taal Volcano) 43 ஆண்டுகள் செயலற்ற மௌனத்தின் பின், அமைதியின்மையின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்குகிறது.

சூடான வாயு காற்றில் கலந்து அந்த இடமே ஒரு கொதிநிலைக்கு மாறியது. வீசும் காற்றில் சாம்பலோடு சேர்ந்து தங்கநிறத் தீப்பொறிகள் காற்றில் பறக்கத் தொடங்கின. சுற்றியுள்ள நிலமானது சிறிது சிறிதாக வறண்டு வெடிப்புகள் வரத்தொடங்கியது. இரவு 7:30 மணிக்கு தொடர்ச்சியான வெடிப்பு காரணமாக எரிமலைக் குழம்பிலிருந்து வீசப்பட்ட சாம்பல் மற்றும் பாறை துண்டுகள் 10-15 கிலோமீட்டர் வரை விசிறியடிக்கப்பட்டன.

எரிமலை சீற்றம்
எரிமலை சீற்றம்

அடுத்தடுத்த நாட்களிலும், வாரங்களிலும், வெடிப்பைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் வழக்கத்திற்கு மாறாக ஈரமான, கனமான சாம்பல் படிவம் படர்ந்தது. அதுவரை பச்சைப்பசேல் என்று செழித்து நின்ற தாவரங்கள் எல்லாம் வாடி வதங்கி கருகிப்போக ஆரம்பித்தன. உள்ளே குமுறிக்கொண்டிருந்த தால் எரிமலை சிறிது சிறிதாக விஸ்வரூபம் கொண்டு வெளியே வர ஆரம்பித்தது. சுற்றியுள்ள பசுமையான வயல்களும், பரந்து விரிந்த காடுகளும் சாம்பல் நிறத்துக்கு மாறின.

2020-ன் மிகப்பெரிய எரிமலை சீற்றமாக தால் எரிமலை வெடித்து சிதறி அந்த சுற்று வட்ட சூழலியலையே எரித்து, உருக்கி, கருக்கி சின்னாபின்னமாக்கியது. மின்னல் மின்ன, இடியுடன் கூடிய மழை பெய்தால் எரிமலையின் சாம்பல்கள் காற்றோடும் நீரோடும் கலந்து பிலிப்பைன்ஸின் வடக்கே 40 கிமீட்டர் தூரத்திலிருக்கும் தலைநகர் மணிலா வரை தூக்கி வீசப்பட்டது.

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு நீடித்த இந்த இயற்கையின் ராட்சச தாக்குதலால் பல்லாயிரம் தாவரங்கள் கருகின, இலைகளை உதிர்த்து ராட்சச மரங்கள் கூட விதவைக்கோலம் பூண்டன. காபி, அரிசி, சோளம், கொக்கோ, வாழை போன்ற பல பயிர்கள் சேதமடைந்தன. பல ஆயிரம் விலங்குகள் மாண்டன. தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்பட்ட சேதம் மட்டும் மொத்தம் 577 மில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோக்கள் அல்லது 11 மில்லியன் டாலர்களைத் தொட்டது.

ஆப்பிரிக்காவில் Locusts வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

இருண்ட புயல் மேகங்கள் வானத்தை மறைத்தாற்போல இந்த வருடம் ஆப்பிரிக்காவின் பல நாடுகளை திரள் திரளாகப் படையெடுத்து வந்து ஆக்கிரமித்தன வெட்டுக்கிளின் ஒரு நெருங்கிய உறவினரான Locusts எனும் பூச்சி.

2020-ம் ஆண்டில், கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, சோமாலியா, எரித்திரியா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஏமன், ஓமான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட டஜன் கணக்கான நாடுகளில் வெட்டுக்கிளிகள் பெருமளவில் திரண்டன. இந்த திரள் பல நாடுகளை ஒரே நேரத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் போது, அது ஒரு பிளேக் என்று அழைக்கப்படுகிறது.

சுமார் 50 சதுர கி.மீ (19 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட, கிட்டத்தட்ட 10,000 பேர் வசிக்கும் கென்யாவிலுள்ள Ndavu-ன் மத்யகானி கிராமத்தில் 1.6 ஹெக்டேர் (நான்கு ஏக்கர்) நிலத்தில் அதிரடியாக படையெடுத்து வந்த வெட்டுக்கிளி திரள், கிட்டத்த்தட்ட 50,000 கென்ய ஷில்லிங் ($ 460 / £ 350) மதிப்புள்ள விளைபொருட்களை அழித்தன.

Locusts வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு!
Locusts வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு!
Ben Curtis

ஏற்கெனவே வறுமையின் பிடியில் பசிக்கொடுமையோடு தமது வாழ்க்கையை நகர்த்தும் அப்பாவி ஆப்பிரிக்கா மக்களை இந்தப் படையெடுப்பு மேலும் மன விரக்திக்கு ஆளாக்கியது. வெட்டுக்கிளிகளின் ஆக்கிரமிப்பின்போது ஒரு வாரத்திற்கும் மேலாக, Ndavuவின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. தங்கள் பண்ணையில் இறங்கிய திரளையை எதிர்த்துப் போராட பெற்றோருக்கு உதவ அவர்களும் வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழலுக்கு ஆளாகினர்.

வெட்டுக்கிளிகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம் பெயரக்கூடிய ட்ரான்ஸ்பவுண்டரி பூச்சிகளாகும். இதுவே இவை உலகின் பல பகுதிகளுக்கும் சென்று ஆக்கிரமிப்பு செய்ய ஏதுவாகி விடுகிறது. அவற்றால் 24 மணி நேரத்திற்குள் நூறு கிலோமீட்டர்க்கும் மேற்பட்ட தூரம் வரை செல்ல முடியும். பாலைவன வெட்டுக்கிளிகள் உலக மக்கள்தொகையில் 10% மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கிறது.

இலங்கையில் ராட்சச பைலட் திமிங்கலங்களின் கரையொதுக்கம்

நவம்பர் 2, 2020 இலங்கையின் Panadura கடற்கரையில் 120 திமிங்கலங்கள் (short-finned pilot whales) கரையொதிங்கின. துரதிஷ்டவசமாக இரண்டு உயிரிழந்த நிலையில் கிட்டத்தட்ட 16 மணி நேர போராட்டத்துக்கு பின் மீதமிருந்தவை மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டன.

நவம்பர் 2-ம் தேதி கொழும்பிலிருந்து 30 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் உள்ள தென்மேற்கு நகரமான பானதுரவில் உள்ளூர் மீனவர்கள் ஓர் அசாதாரண காட்சியை மதியம் 1:30 மணியளவில் கவனித்தனர். அடிவானத்தில் ஓர் இருண்ட இணைப்பு போல் தோன்றி ஒரு பெரிய அலை போல கரையை நோக்கி நகர்ந்து வந்த அந்த ராட்சச பாலூட்டிகளை உடனடியாக ஓடிச்சென்று மீண்டும் கடலுக்குத் தள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தததைத் தொடர்ந்து அவை கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின.

ராட்சச பைலட் திமிங்கலம்
ராட்சச பைலட் திமிங்கலம்

தெற்காசியாவிலே இதுதான் அதிகமான ஒற்றையின திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய முதல் நிகழ்வாகும். கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் சுமார் 470 பைலட் திமிங்கலங்கள் சிக்கித் தவித்த சம்பவத்தின் பிறகான அடுத்த நிகழ்வு இதுவே. Tasmania-வில் கரையொதுங்கிய திமிங்கலங்களில் சுமார் 110 மட்டுமே காப்பாற்றப்பட்டது.

2020 ஜனவரி 30 லண்டனின் தேம்ஸ் நதிக்கரையிலும், நவம்பர் 25, 2020ல் Alabama Mobile Bayயிலும் கரையொதுங்கிய ஸ்பேர்ம் திமிங்கலம் உயிரிழந்ததும் இவ்வாண்டில் நிகழ்ந்த ஏனைய நிகழ்வுகள்.

அன்டார்டிகாவின் பச்சைப் பனிப்பொழிவு

சிற்ப பனிப்பாறைகள், அழகிய பெங்குவின்கள், பூத்துக்குலுங்கும் பாசிகள் போன்ற பல உயிரியல் சமூகங்களுக்கும் சொந்தமான பனிக்கட்டி கண்டமான அன்டார்டிகாவில் இவ்வருடம் நிகழ்ந்த பச்சை நிறப் பனிப்பொழிவு, சூழலியலாளர்களை மட்டுமல்லாது முழு உலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

2020 பிப்ரவரியில் நிலவிய அசாதாரணமான உயர் வெப்பநிலைக்குப் பிறகு, ஒன்பது நாள் வெப்ப அலை ஏற்பட்டதால், விஞ்ஞானிகள் பனியின் மேற்பரப்பில் 1,679 பச்சை ஆல்காக்களின் தனித்தனி பூக்களை அடையாளம் கண்டனர்.

அன்டார்டிகா பச்சைப் பனிப்பொழிவு
அன்டார்டிகா பச்சைப் பனிப்பொழிவு

வெப்பநிலையின் அதிகரிப்பினால் அன்டார்டிக்காவில் பெருகிய algae எனப்படும் பூக்கள் பனியை பச்சை நிறமாக மாற்றின. இந்த ஆல்காக்கள் உறைபனிக்கு சற்று மேலே உள்ள வெப்பநிலையில் செழித்து வளர்கின்றன. எனவே புவியின் வெப்பநிலை அதிகரிப்பு இவற்றின் செழிப்பான வளர்ச்சிக்கு உரமிட்டு வழிவகுத்தது.

கட்டுப்பாட்டுக்குள் அடங்காது மிக வேகமாக அதிகரித்து வரும் புவியின் வெப்பநிலை மாற்றத்தால் உலகின் வெள்ளை கண்டத்தில் நிகழும் இவ்வாறான விசித்திர சூழலியல் மாற்றம் இனி வரும் காலங்களில் உலக வரைபடத்தில் இருக்கும் இரு துருவங்களையும் பச்சை நிற மை கொண்டு நிறம் மாற்ற வேண்டிய நாளை சீக்கிரமே உருவாக்கி விடும்.

இந்தியா, பங்களாதேஷைக் குறிவைத்த ஆம்பான் சூறாவளி

22 பேரை பலிகொண்டும், மில்லியன் கணக்கான மக்களை நிர்கதியாக்கியும், பல கோடி நஷ்டத்தை உண்டுபண்ணியும் சென்றது Amphan சூறாவளி.

ஆம்பான் சூறாவளி
ஆம்பான் சூறாவளி

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் (95 மைல்) வீசிய காற்று, மின்சார கம்பிகள், சுவர்கள் மற்றும் கூரைகளைக் கையிலிருந்து விசிறியடிக்கப்பட்ட பறக்கும் தட்டு போல பறக்கச் செய்தது. மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமலும், உண்ண உணவு இல்லாமலும் ஏன் வாழ ஓர் உறைவிடம் இல்லாமலும் அனாதரவாக்கப்பட்டனர்.

கிரீஸையும் துருக்கியையும் தாக்கிய மாபெரும் சுனாமி

அக்டோபர் 30, 2020 அன்று 13.51 உள்ளூர் நேரப்படி (11.51 UTC), 7.0 மெகாவாட் அளவிலான நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட சுனாமிப்பேரலை கிரீஸின் சமோஸ் தீவு மற்றும் துருக்கியின் இஸ்மீர் பிராந்தியத்தின் ஏஜியன் கடற்கரையைத் தாக்கியது. இதை தொடர்ந்து துருக்கியின் கடலோர மாவட்டமான Seferihisar மற்றும் கிரீஸின் Samos துறைமுகம் ஆகியவற்றில் வெள்ளம் புகுந்தது.

கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள்தொகை கொண்ட துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மிரில், நிலநடுக்கம் ஏற்பட்டபின் பலர் பீதியிலும் அச்சத்திலும் வீதிகளில் இறங்கி ஓடிவந்தனர். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சுனாமி கண்காணிப்பு மையத்தின் விரைவு நடவடிக்கையால் முன்கூட்டியே மக்கள் எச்சரிக்கப்பட்டு முடிந்தளவு அந்த இடங்களை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

சுனாமி
சுனாமி

இருந்தாலும் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் காயப்பட்டும், அவற்றில் இடையில் சிக்கியும் உயிரிழந்தனர்.

இஸ்மீர் மாகாணத்தில் 20 பேர் உயிர் இழந்தும், 786 பேர் காயமடைந்தனர். சமோஸில், இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

கடல் மட்டம் உயர்ந்த பிறகு நகரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. மேலும் சில மீனவர்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. 70 பேர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டனர்.

பல உயிர்களை காவு கொண்டும், பல மில்லியன் சேதாரத்தையும் ஏற்படுத்திய இந்த சுனாமிப்பேரலை 2020-ல் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாக பதியப்பட்டது.

அமெரிக்காவை நிலை குலையச்செய்த 30 அட்லான்ட்டிக் சூறாவளிகள்

இம்முறை மிகவும் ஆக்ட்டிவ் நிலையில் காணப்பட்ட 2020-ன் அட்லான்ட்டிக் சூறாவளி பருவம், அமெரிக்காவில் பெயரிடப்பட்ட 30 புயல்களையும் 12 நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தி சூழலியலில் மிகப்பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் உருவாக்கி முடிவுக்கு வந்தது.

NOAA (The National Oceanic and Atmospheric Administration)-ன் பருவகால சூறாவளி கண்ணோட்டங்கள், வழமைக்கு மாறான பருவநிலையின் அதிகூடிய அழிவுக்கான சாத்தியக்கூறுகளை மிகத் துல்லியமாக கணித்தன. அதன்படியே இந்த வருடம் மொத்தம் 39mph அல்லது அதற்கும் அதிகமான காற்று வீச்சுடன் கூடிய 30 பெயரிடப்பட்ட புயல்கள் உருவாகின.

அட்லான்ட்டிக் சூறாவளி
அட்லான்ட்டிக் சூறாவளி
Gerald Herbert

அவற்றில் பதின்மூன்று, 74mph அல்லது அதற்கு மேற்பட்ட காற்றுடன் கூடிய சூறாவளிகளாக மாறியது. இதில் 111mph அல்லது அதற்கு மேற்பட்ட காற்றுடனான கூடிய ஆறு பெரிய சூறாவளிகளும் அடங்கும்.

இதற்கு மேலதிகமாக saias, Laura, மற்றும் Sally ஆகிய மூன்று சூறாவளிகள் இந்த ஆண்டு NOAA இன் சூறாவளி கடல் கிளைடர்களின் எல்லைக்குள் கடந்து சென்றன.

இந்த சீசன் 2020 நவம்பர் 30-ம் தேதி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தாலும் கூட புயல்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகப்பலமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

மாசு குறைந்து தூய்மையான இயற்கை

2020ம் வருடம் உலகையே ஓர் உலுக்கு உலுக்கிய, கொரோனா எனும் வைரஸினால் உறைந்து போனது. மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டு, மில்லியன் கணக்கானோர் வேலை வாய்ப்பு இழந்து, பல தொழிற்சாலைகள் நஷ்டமடைந்து, பல வியாபாரங்கள் மூடப்பட்டு, குழந்தைகளின் பாடசாலை படிப்பு தடைப்பட்டு, நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் அடைக்கப்பட்டு, வான்வெளி கடல்வெளி போக்குவரத்து எல்லாம் ஸ்தம்பிக்கப்பட்டு என இதுவரை வரலாறு கண்டிராத ஒரு பாதிப்பை உலகம் அடைந்தது. ஒரு புறம் மக்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உயிரிழந்தார்கள் என்றால் மறுபுறம் பசி பட்டினியால் மாண்டார்கள்.

இன்று வரை வென்று விட முடியாத முடியாத சோகக்கதையாக நீண்டு கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸினால் நடந்த ஒரே ஒரு நன்மையென 2020-ல் சூழலியலில் மாசு குறைந்து இயற்கை தன்னை தானே சுத்திகரித்துக்கொண்டு மூச்சு விட அவகாசம் எடுத்துக்கொண்டதை சொல்லலாம்.

உலகில் உள்ள நீர்வழிகள் மற்றும் ஆறுகள் தூய்மையாகின. காற்று கார்பன் கலவையில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற்றது. தாம் வாழும் சூழலியலை சிறிது சிறிதாக மனிதனிடம் தோற்று இழந்து, ஒரு குறுகிய வட்டத்துக்குள் குன்றிப்போன வனவிலங்குகள் பறந்து விரிந்த சமவெளியில் மீண்டும் சுதந்திரமாக சுற்றத் தொடங்கின.

தூய்மையான இயற்கை
தூய்மையான இயற்கை
Tony Avelar

இதற்கு உதாரணமாக 60 ஆண்டுகளின் பின், படகுகளினதும் மனிதக்கழிவிலிருந்தும் சுத்தமான வெனிஸ் கால்வாய் நீர்களில் வந்து துள்ளிக்குதித்து ஆட்டம் போட்ட டால்ஃபின்களையும், கொரோனா லாக்டெளன் ஆரம்பமான தொடக்கத்தில் பிரெஞ்சு விமானநிலையத்தில் அருகில், பிளமிங்கோஸ் கொக்குகள் என்றுமில்லாதவாறு 12000 குஞ்சுகளை ஈன்றதையும், கலிஃபோர்னியா வீதியில் இறங்கி விளையாடிய பல நூறு அணில்களையும், சில்லி நாட்டு வீதிகளில் நடந்து திரிந்த சிறுத்தைகளையும், ஸ்பெயினின் Barcelona வீதிகளில் கூட்டம் கூட்டமாக அலைந்த காட்டுப்பன்றிகளையும் குறிப்பிடலாம்.

கடல், காடு, காற்று, நீர், ஆகாயம், மண், மரங்கள், பறவைகள், விலங்குகள், என அனைத்தும் மாசு குறைந்த இந்த சூழலியலில் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றது.

இயற்கை தனது Reset buttonஐ அழுத்தமாக அழுத்திக்கொண்டது இந்த 2020 சூழலியல் ஹைலைட்ஸில் நேர்மறையான மிக முக்கியமான நிகழ்வாக பதிவாகி வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு