Published:Updated:

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு... காயமடைந்த சுற்றுலாப் பயணிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு ( Institute of Geological and Nuclear Science )

முன்னெச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டும், அதைக் கண்டுகொள்ளாமல் நியூசிலாந்து அரசு இருந்துள்ளதாகக் கண்டனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நியூசிலாந்தின் வெள்ளைத் தீவில் பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருக்கின்ற எரிமலை திங்கள்கிழமை (9.12.2019) மதியம் வெடித்துள்ளது. பூர்வகுடியான மாவுரி (Māori) மக்களின் மொழியில் வகாரி (Whakaari) என்றழைக்கப்படும் இந்த எரிமலை, வெடித்த நேரத்தில் சுற்றுலாப்பயணிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்ததாகச் சொல்லப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டவர்கள் அதில் காயமடைந்ததாக இதுவரை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வகாரி எரிமலை
வகாரி எரிமலை
Twitter

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன், ``எரிமலை வெடிப்பு நிகழ்ந்தபோது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காவல்துறை மூலம் எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 50-க்கும் குறைவான மக்களே அங்கிருந்ததாகத் தெரியவந்துள்ளது. அதில் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டுச் சிகிச்சையளிக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

எரிமலை வெடிப்பின்போது அந்த இடத்திலிருந்த பலரும் காணாமல் போய்விட்டதாகக் காவல்துறை அறிவித்துள்ளது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாததால், தேடுதல் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 0 முதல் 5 வரை ஐந்து கட்டங்களாக எரிமலை வெடிப்பின் வீரியம் கணக்கிடப்படும். அதில் 4 என்ற அளவில் பெரிய வெடிப்பாக இது பதிவாகியுள்ளது.

``வகாரி வெடித்தபோது, நிறைய மக்கள் அங்கிருந்தார்கள். அதில் சிலர் காயமடைந்தனர். அவர்களுடைய நிலை, மீட்புப் பணி போன்றவை குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை" என்று எரிமலைக்கு அருகிலுள்ள வகாடனே என்ற குறுநகரத்தின் மேயர் ஜூடி டர்னர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

மீட்புப் பணியில் அதிகாரிகளோடு ஈடுபட்டிருந்த புனித ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பு, இதுவரைக்கும் காயம்பட்ட 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. சூழல் மேலும் மோசமடைந்து வருவதால், அதனால் ஏற்படுகின்ற சேதங்களைத் தவிர்க்கத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

குடிமைப் பாதுகாப்பு ஆணையம், எரிமலையின் சூழ்நிலை சரியாகவில்லை, இன்னும் மோசமடைந்துகொண்டிருப்பதாக எச்சரித்துள்ளது. இதற்குமுன் 2016-ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக யாரும் பாதிக்கப்படவில்லை.

கடந்த சில வாரங்களாகவே எரிமலை நிலையாக இல்லை என்பதையும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க வாய்ப்புள்ளது என்பதையும் தொடர்ந்து பதிவு செய்துகொண்டிருந்தனர். கடந்த சில வாரங்களாகவே வகாரி எரிமலையிலிருந்து வெளியாகிக்கொண்டிருந்த கந்தக வாயுவின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்ததை எரிமலையியலாளர் மைக்கேல் ரோசன்பர்க் பதிவு செய்திருந்தார்.

முன்னெச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுமே, அதைக் கண்டுகொள்ளாமல் நியூசிலாந்து அரசு இருந்துள்ளதாகக் கண்டனங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எரிமலை இன்னும் சாதாரண நிலைக்கு வரவில்லை என்பதால் மீட்புப் பணிகளோடு சேர்த்துப் பாதுகாப்புப் பணிகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு