Published:Updated:

இங்கிலாந்து கரிமத்துகள் இமயமலைக்கு வருமா... காலநிலை மாற்ற விபரீதமா?

Industrial Revolution

தொழில் புரட்சியின்போது வெளியான கரிம வாயுக்களே இப்போது வரை பிரச்னைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றைப் பற்றி சிந்திக்காமல், நாம் இன்னும் இன்னும் வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

இங்கிலாந்து கரிமத்துகள் இமயமலைக்கு வருமா... காலநிலை மாற்ற விபரீதமா?

தொழில் புரட்சியின்போது வெளியான கரிம வாயுக்களே இப்போது வரை பிரச்னைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றைப் பற்றி சிந்திக்காமல், நாம் இன்னும் இன்னும் வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

Published:Updated:
Industrial Revolution

இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகி, இந்தியாவின் ஜீவ நதிகளாகக் கருதப்படும் கங்கை, யமுனை நதிகளாக ஓடிவந்து மக்களின் தேவையைப் பூர்த்திசெய்கின்றன. பரிசுத்தமாகக் கருதப்படும் இந்த நதி நீரில், இமயமலையிலிருந்து நச்சு உலோகங்களும் உருண்டோடி வருகின்றன என்பதை உலக அளவில் காலநிலை மாற்றத்தை ஆராய்ந்துவரும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியே இதற்கு முக்கியக் காரணம். கைத்தொழிலாக இருந்த பல தொழில்கள், பின்னர் இயந்திரமயமாகி, அவற்றிற்காக நீராவி இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இயந்திரங்களின் ஆட்சி தொடங்கிய காலத்தில், ஐரோப்பியக் கண்டம் தீவிரமாகத் தன் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. அதன் தீவிரம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், லண்டனின் தூய்மையான நதியென்று அழைக்கப்படும் தேம்ஸ் நதியே நாற்றமடிக்கத் தொடங்கியது. அந்த அளவுக்கு ஐரோப்பாவின் சுற்றுச்சூழலை சீரழித்துக்கொண்டிருந்த தொழில் புரட்சியை, அவர்கள் ஆசியாவிற்குள்ளும் கொண்டுவந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்கிலாந்தில் தொடங்கிய இந்த மாற்றம், பிற மேற்கத்திய நாடுகளுக்கும் பரவியது. இந்திய நிலப்பரப்பின் இயற்கை வளங்கள் அனைத்தையும் அபகரித்துக்கொண்டிருந்தவர்கள், இந்த நில அமைப்பைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதும் இங்கிருந்த காடுகளை அழித்து ரப்பர், யூகலிப்டஸ், தேயிலை, காபி தோட்டங்களைப் பயிரிடத் தொடங்கினர். காடழிப்பு தீவிரமானது. கூடுதலாக சமவெளி முழுக்கவும் நிலப்பரப்பை ஆக்கிரமித்து, தங்கள் தொழில் வளர்ச்சியை முடுக்கிவிட்டனர். தொழில் புரட்சியின்போது வெளியான கரிம வாயுக்களே இப்போது வரை பிரச்னைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றைப் பற்றி சிந்திக்காமல், நாம் இன்னும் இன்னும் வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

இமயமலை
இமயமலை

எதிர்காலத்தில் அவர்களுடைய வழியையே பின்பற்றிய அரசுகள், அதையே தொடர்ந்து செய்தன. காலப்போக்கில் மக்கள் தொகையும் பெருகியது. காற்று மாசுபாடும் அதிகரித்தது. கரிமப்புகையும் பனிப்புகையும் பல்லாயிரம் மக்களை உயிரிழக்கச் செய்தன.

அமெரிக்காவில் உள்ள ஓஹையோ பல்கலைக்கழக ஆய்வின்படி, மத்திய இமயமலையில் உள்ள தாசூபு பனிப்பாறைகளில் (Dasuopu glaciers) இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காலத்தில் உருவான நச்சு உலோகத் துகள்கள், படிமங்களாகப் படிந்து இறுகியுள்ளன. இதைத் தவிர, பூமியின் வட பகுதியில் ஏற்பட்ட பெருமளவிலான காடழிப்பும் இந்த நச்சுப்படிதலுக்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.

இங்கிலாந்திலிருந்து பல்லாயிரம் மைல் தூரத்தில் உள்ள இந்திய இமயமலைக்கு கரிப்புகை பறந்து வர முடியுமா? ஆம், வந்துள்ளதாக நிரூபிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இமயமலையில் ஏற்பட்டுள்ள நச்சுப் படிமங்களுக்கு, வளிமண்டல ஓட்டமும் காற்றின் போக்கும்தாம் காரணங்களாகக் கருதப்படுகின்றன. பனிப்பாறைகள்தாம் வளிமண்டலத்தின் இயற்கைக் களஞ்சியங்கள். அவை, பெய்யும் மழையை உள்வாங்கி, பனிப்பாறைகளாக உள்ளன. 10 சென்டி மீட்டர் விட்டத்திற்கு தோண்டி எடுக்கப்பட்ட பனி உருண்டைகளில் மேற்கொண்ட ஆய்வுகள், மனிதர்களின் செயல்களால் வளி மண்டலம் மாசுபடுகிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

லடாக், இமயமலை
லடாக், இமயமலை

கரிம எரிப்பால் உருவான புகை மற்றும் தாவரங்களில் உள்ள கனிம உலோக உமிழ்வுகள் படிப்படியாகப் படிந்துள்ளன. தாசூபாவில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி 7, 200 மீட்டர் உயரத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்புள்ள பனிப்படிமத்தில் உள்ள நச்சு உலோகங்களும் சாதாரண மணற்பரப்பில் உள்ள நச்சு உலோகத்தின் தன்மையும், வருடக் கணக்கில் வேறுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இமயமலையில் படிந்துள்ள 23 உலோகங்களில், இரும்பு மற்றும் அலுமினியம் அதிக அளவில் உள்ளன. காட்மியம், பிஸ்மத், துத்தநாகம் போன்றவை மணற்பரப்பில் அதிகமாகவும் பனிப்பாறைகளில் குறைவாகவும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது. தொழில் புரட்சி காலத்திலிருந்த வளிமண்டல சுழற்சியும் மேற்கிலிருந்து கிழக்காகச் செல்லும் காற்றும்தான் இந்த நச்சு உலோகப் படிமத்திற்குக் காரணமாக இருந்துள்ளன. கரிம எரிப்பும் பெரும் அளவான காடு அழிப்பும், கரிமத் துகள்கள் இமயமலைப் பனிப்பாறையை வந்தடைந்ததற்கு, 18-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான கடும் குளிரும் காரணமாக இருந்துள்ளது.

தொழிற்புரட்சி
தொழிற்புரட்சி

இருபதாம் நூற்றாண்டில், நச்சு உலோகத் துகள்கள் குறிப்பாக இரும்புத் துகள்களின் படிமம், வளிமண்டலத்தின் மாறுபட்ட செயல்பாட்டால் குறைந்துள்ளது.

உலகத்தின் மூன்றாம் துருவமாகக் கருதப்படும் பிரிஸ்டைன் இமயமலைப் பனிப்பாறைகள், காலநிலை மாற்றத்தால் உருகி வருகின்றன. மாசுபட்ட வளிமண்டலமே இந்நிகழ்ச்சிக்குக் காரணமாகிறது. புதை படிமக் கனிமங்களின் எரிப்பால் உருவாகும் கரித்துகள்கள், இந்த மாசுபாட்டில் பெரும் பங்கு வகிக்கின்றன.

திபெத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, வளிமண்டல மாசுபாட்டால் ஏற்படும் இந்தப் படிமங்கள், சுற்றுச்சூழலையும் மனித ஆரோக்கியத்தையும் பாதித்துக்கொண்டிருக்கின்றன. தற்போது, இதன் பாதிப்பு சிறியதாகத் தெரிந்தாலும் காலப்போக்கில் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் செல்களில் பதிந்து அழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஒஹையோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன.

இமயமலை
இமயமலை

இதை மனத்தில் கொண்டு, வருங்கால சந்ததியினருக்காகப் பூமியைக் கரிம வாயு உமிழ்விலிருந்தும் மாசுபாட்டிலிருந்தும் காப்பாற்ற ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அதேநேரம், தாராளவாதக் கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சியின் பின்னணியில் நடக்கும் பெருநிறுவனங்களின் அதீத கரிம வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தி, அவற்றின் இயக்கத்தை அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வகையில் நெறிமுறைப்படுத்த அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்.