Published:Updated:

2000 மீட்டர் உயரத்தில் வளரும்; நடப்படும் 5,000 சோலை மரக்கன்றுகள்; மீட்டெடுக்கும் நீலகிரி வனத்துறை

ஆசியாவில் சில இடங்களில் மட்டுமே வளரும் பல லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவான சோலை மரக்காட்டை மீட்டெடுக்கும் வகையில் கேர்ன்ஹில், அவலாஞ்சி,கோத்தகிரி பகுதிகளில் 5000 மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Shola trees
Shola trees ( Arun.K )

இயற்கையின் கொடைகளில் புதிர் நிறைந்ததும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாததுமான சிலவற்றில் சோலை மரக்காடும் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் வளரும் ஈரம் நிறைந்த பசுமை மாறாக்காடுகள் உலகில் சில இடங்களில் மட்டுமே உள்ளன. பல லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவான இந்தக் காடுகள் புல்வெளிகளுடன் சேர்ந்தே (shola grassland) இருக்கும் தன்மை கொண்டது. ஒட்டுமொத்தக் காட்டுயிர்களையும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன இந்த சோலை மரக்காடுகள்.

Shola trees
Shola trees

அடைமழை, புயல் காற்று, உறைபனி என எல்லா காலநிலையையும் தாக்குப்பிடித்து உயிர்வாழும் இந்தச் சோலைமரங்கள் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட அந்நிய களைத்தாவரங்களை மட்டும் எதிர்கொள்ள முடியாமல் போனது.

ஆசியாவில் சில இடங்களில் மட்டுமே வளரும் பல லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவான சோலை மரக்காட்டை மீட்டெடுக்கும் வகையில் கேர்ன்ஹில், அவலாஞ்சி, கோத்தகிரி பகுதிகளில் 5000 மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Shola trees
Shola trees

நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் 3000 க்கும் அதிகமான பூக்கும் தாவர வகைகள் உள்ளன. இவற்ற் 1200 தாவர வகைகள் இந்த நிலத்துக்குரியவகையாக உள்ளன. பேயேலெப்சிஸ் என்ற தாவரப்பேரினம் உலகில் இங்கு மட்டும் காணப்படுகிறது.

விக்கி, வாகை, நாவல், தோதகத்தி, ரோடோடென்ட்ரான் போன்ற வகைகள் அதிகம் காணப்படுகின்றன. மிக மெதுவாக வளரக்கூடிய இந்த வகை மரங்களை வளர்ப்பது மிக சவாலான பணியாக உள்ளது. நகரில் நிலவும் காற்று மாசை தடுக்கும் வகையிலும் சோலை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வனத்துறை களம் இறங்கி உள்ளது.

மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஊட்டி தீட்டுக்கல் குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் பல்வேறு கழிவுகள் எரிக்கப்படுவதால், கடும் காற்று மாசடைகிறது. காற்று மாசடைந்ததால் பொதுமக்களுக்கு மட்டுமன்றி விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், காற்று மாசை தடுக்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதியில் ஆயிரம் சோலை மர நாற்றுகளும், எல்கில் பகுதியில் ஆயிரம் சோலை மர நாற்றுகளும் மற்றும் அவலாஞ்சி பகுதியில் 3 ஆயிரம் சோலை மர நாற்றுகள் நடவு செய்யத் திட்டமிட்டுள்ளோம் . இந்த மரக்கன்றுகள் வளர்ந்து மரமாகியவுடன் வெளியில் உள்ள கார்பன்டை ஆக்சைடை அதிகளவு உட்கிரகித்து எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும். இதனால், இப்பகுதியில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது" என்றார்.

Shola trees
Shola trees

இது குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசுவாமி கூறுகையில், ``மாவட்டம் முழுவதும் சீகை, யூகலிப்டஸ் மரங்களை அகற்றிவருகிறோம். கேர்ன்ஹில், எல்கில், அவலாஞ்சி மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகளை நடவு செய்துவருகிறோம். கேர்ன்ஹில் மற்றும் அவலாஞ்சியில் நடவுப் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் எல்கில் பகுதியில் நாற்று நடவுப் பணிகள் தொடங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் அதிகளவு சோலை மரங்கள் நடப்படுகின்றன" என்றார்.

நீலகிரி வனத்துறையினர் எடுத்துள்ள முயற்சி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.