கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி உச்சநீதிமன்றம் இந்திய வன உரிமைச் சட்டத்துக்கு எதிராக ஓர் உத்தரவு பிறப்பித்தது. லட்சக்கணக்கான பழங்குடியின மக்களை அவர்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்துகொண்டிருந்த காட்டை விட்டு வெளியேறுமாறு அந்த உத்தரவு கூறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல எதிர்வினைகள் முளைத்தன. அந்த அழுத்தங்களைத் தொடர்ந்து மத்திய அரசு வழக்கு தொடுத்து அந்த உத்தரவைத் தற்காலிகமாக ரத்து செய்ய வைத்தது.
உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இந்திய வன உரிமைச் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. நாடு முழுவதுமுள்ள பழங்குடியின மக்கள் இந்த வழக்கை எதிர்நோக்கி என்ன நடக்குமோ என்ற ஐயத்தோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், என்ன காரணம் சொல்லி இவர்களை வெளியேற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் சில தன்னார்வ நிறுவனங்களும் துடித்தனவோ அது பாதுகாக்கப்படக் காரணமே இவர்கள்தான் என்று காலநிலை மாற்றம் குறித்த சர்வதேசக் குழு அறிக்கை பேசுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபூர்வகுடிச் சமூகங்களின் வன மற்றும் நில உரிமைகளையும் அவர்களின் வன மேலாண்மை உரிமைகளையும் அங்கீகரிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைச் சரிக்கட்ட முடியுமென்று அந்த அறிக்கை சொல்கிறது. இந்தியாவில் பதினொரு லட்சத்துக்கும் அதிகமான நிராகரிக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பல லட்சக்கணக்கான பழங்குடியின மக்களைக் காடுகளிலிருந்து வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சமயத்தில்தான் இந்த அறிக்கையும் வெளியானது. அவர்களை காடுகளுக்குள் வாழவிடுவதால் காடழிப்பு நிகழும் என்றும் காட்டுயிர்களுக்குப் பாதுகாப்பு இருக்காதென்றும் இந்தச் சட்டத்தின்மீது விமர்சனம் வைக்கப்பட்டது.
நில உரிமைகளை அங்கீகரிப்பது, அதிலும் குறிப்பாகக் காடு சார்ந்து வாழும் சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது வன மேலாண்மைத் திறனை மேம்படுத்தவும் கரிமத் தன்மயமாக்கலை அதிகப்படுத்துவதையும் உதவும்.IPCC Special Report on Climate Change, Desertification, Land Degradation, Sustainable Land Management, Food Security, and Greenhouse gas (GHG) fluxes in Territorial Ecosystem
பழங்குடிகள் காடுகளுக்குள் வாழ்வதால் அந்தக் காட்டுக்கே ஆபத்து என்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு காடுகளுக்குள் நில உரிமையும் வன மேலாண்மை உரிமைகளையும் வழங்குவது காடழிப்பைக் குறைத்து காட்டுயிர்கள் பாதுகாப்பிலும் மேம்பட முடியும் என்றும் அதன்மூலமாக, காலநிலை மாற்றத்தைச் சரிக்கட்டவும் முடியுமென்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் 197 நாடுகளும் இதைப் பரிசீலித்து ஒப்புதல் அளித்தபிறகு ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று IPCC தெரிவித்துள்ளது.
இங்கு பிரச்னை என்னவென்றால், முக்கியமான இயற்கைப் பாதுகாப்பு குறித்த சட்ட விதிமுறைகள் சமுதாய நலச் சட்டமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது இந்திய வன உரிமைச் சட்டம். இந்திய வன உரிமைச் சட்டம், ஆபத்தான நிலையிலிருக்கும் காட்டுயிர் வாழ்விடங்கள் (Critical Wildlife Habitat) தவிர அனைத்துப் பகுதிகளிலும் நில உரிமைகள் வழங்கப்படலாம்.
கடந்த 22-ம் தேதி, பல்லாயிரக்கணக்கான பழங்குடிகள் நாடு முழுவதும் நில உரிமைகளை அங்கீகரிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம், உலகம் முழுவதுமுள்ள காலநிலை மாற்ற அமைப்புகள், இங்கு நடக்கும் பழங்குடியின உரிமைப் பிரச்னைகளுக்காக இந்திய அரசைக் கண்டித்துள்ளன. இன்று, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள பழங்குடியின வெளியேற்ற உத்தரவு மீதான தற்காலிக உத்தரவே நீடிக்கலாம், நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம், அல்லது ரத்து நீக்கப்பட்டு அதே உத்தரவை மீண்டும் அமல்படுத்தச் சொல்லலாம். இதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இறுதியாகச் சொன்னது மட்டும் நடந்தால் இந்தியாவில் வாழும் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்தச் சட்டம்தான் பழைய அமைப்பு முறையை முற்றிலுமாக மாற்றியமைத்தது. வனத்துறை அதிகாரிகள்தான் காடு சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தனர். அதிலிருந்து அந்தக் காட்டைச் சார்ந்து வாழும் மக்களைக் கேட்காமல் எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது என்ற நிலைக்கு மாற்றியது 2008-ம் ஆண்டு வெளியான இந்திய வன உரிமைச் சட்டம்தான். வரலாற்று ரீதியாக கடந்த இருநூறு ஆண்டுகளில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கொடுத்துதான் இந்தச் சட்டத்தின் முக்கியமான அம்சம். தங்கள் நிலத்திலிருந்து அவர்களை வெளியேற்றுவது இதன்மூலம் கடினமானது.
பூர்வகுடிச் சமூகங்கள் வாழும் காட்டில் ஒரு மரத்தை வெட்ட வேண்டுமென்றாலும் அவர்களைக் கேட்காமல் வெட்ட முடியாது என்ற அளவுக்குப் பாதுகாப்பை இந்தச் சட்டம் கொடுத்தது. தொழில்ரீதியிலான பணமரப் பயிரிடுதல்களைத் தடுத்து இயற்கையான காட்டைக் காப்பாற்ற இது வழி செய்தது. சூழலியல் சீரழிவுக்கு வித்திடும் திட்டங்கள் வர விடாமல் அவர்களால் தடுக்க முடிந்தது. ஓரிடத்தில் காடழிப்பு செய்துவிட்டு அதே இடத்தில் மீட்டுருவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் பணப் பயிரிடுதல்களைச் செய்துகொண்டிருந்த பல நிறுவனங்களைப் பழங்குடிகளால் கேள்வி கேட்க முடிந்தது. காற்றை, நீரை, நிலத்தை மாசுபடுத்தும் எந்தவிதமான எவ்வளவு மதிப்புவாய்ந்த திட்டமாக இருந்தாலும் சரி, அந்தத் திட்டம் வரவுள்ள நிலத்தில் வாழும் பழங்குடிகளைக் கேட்காமல் வரமுடியாது என்ற நிலையை இந்தச் சட்டம் உருவாக்கியது.
பல காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் சூழலியல் ஆர்வலர்கள் என்று பலரும் சமூக நீதியோடு பின்னிப் பிணைந்திருக்கும் சூழலியல் பாதுகாப்பைக் கொண்டிருக்கும் இத்தகைய சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்று பேசி வருகின்றனர்.
இவ்வளவு முக்கியமான சட்டம் இன்று ஆபத்தில் உள்ளது. மக்களைப் பாதுகாக்கத்தான் சட்டம். ஆனால், அந்தச் சட்டத்தைப் பாதுகாக்க பல ஆண்டுகளாகப் பலரும் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்திய வன உரிமைச் சட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதில் வன உரிமை கோரிய மனுக்களில் மறுக்கப்பட்டவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இன்னமும் இந்தியாவின் பல மாவட்டங்களில் முழுமையாகக் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு மனுக்கள் மறுபரீசலனை செய்யப்படவில்லை.
இன்றைய விசாரணையில், மாநிலங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் விசாரிக்கப்படும். இந்திய வன உரிமைச் சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களின் தரப்பு மற்றும் அதற்கு ஆதரவாக வழக்கு தொடுத்தவர்கள் என்று இருதரப்பு கருத்துகளும் கேட்கப்படும். மத்திய அரசு தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதும் கருத்தில் எடுக்கப்படும். இறுதியாக லட்சக்கணக்கான பழங்குடிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா இல்லை வெளியேற்ற உத்தரவு மீதிருந்த தற்காலிக ரத்து நீக்கப்பட்டு அவர்களின் உரிமைகள் அபாயத்திற்கு உள்ளாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.