Election bannerElection banner
Published:Updated:

மருத்துவ குணங்கள் கொண்டதா மாட்டுக் கோமியம்... அமெரிக்கா பேடன்ட் வாங்கியது உண்மையா?

Cow
Cow ( Photo / Vikatan )

மாட்டுக் கோமியத்துக்கு மருத்துவ குணங்கள் இருக்கா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்க நிறுவனங்கள் அப்படி முண்டியடித்துக் கொண்டு மாட்டுக் கோமியத்தின் மருத்துவ குணங்களுக்கு உரிமம் வாங்கியது உண்மையா?

``உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

மாட்டுக் கோமியம் இருக்குல்ல, அதுக்கு அமெரிக்காவுல பேடன்ட் கொடுத்திருக்காங்கலாம். கேன்சர்ல இருந்து சர்க்கரை நோய் வரைக்கும் பல வியாதிகளுக்கு கோமியத்துல மருந்து இருக்குதாமா! அமெரிக்காவுல இருக்குற பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்னு பலரும் மாட்டுக் கோமியத்துக்காக பேடன்ட் வாங்கி வெச்சிருக்காங்களாம்."

இப்படி யாராவது உங்களிடம் வந்து சொன்னார்களா?

சொன்னாங்களே, எங்க கிட்டயும் சொன்னாங்களே...

சரி, மாட்டுக் கோமியத்துக்கு இவ்வளவு திறன்கள் இருக்கா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்க நிறுவனங்கள் அப்படி முண்டியடித்துக்கொண்டு மாட்டுக் கோமியத்தின் மருத்துவ குணங்களுக்கு உரிமம் வாங்கியது உண்மையா?

Cows
Cows
Photo: Vikatan / Ramesh.K

இல்லை. உண்மையில் இதற்கு உரிமம் வாங்கியது இந்திய நிறுவனம்தான். அதை வாங்கியதுதான் அமெரிக்காவில். மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் மாவட்டத்தில் தேவலபூர் என்ற நகரம் இருக்கிறது. கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்த்ரா என்ற பசு மாடு ஆராய்ச்சி நிறுவனம் அந்த நகரத்தில் அமைந்துள்ளது. இந்த அமைப்புதான், அமெரிக்காவில் ஐந்து பேடன்ட் உரிமங்களையும் சீனாவில் ஒரு பேடன்ட் உரிமத்தையும் பசுவின் சிறுநீருக்காக வாங்கி வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவில் வாங்கியிருந்தாலும்கூட, இந்தியாவில் இன்னமும் எந்த பேடன்ட்டும் இதுவரையில் அவர்கள் வாங்கவில்லை. இந்த அமைப்பு, சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பின் கீழ் செயல்படுகிறது.

கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்த்ரா அமைப்பானது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு மையம் ஆகிய நிறுவனங்களோடு ஆய்வுக் கூட்டணி வைத்துள்ளது. இந்த ஆய்வுக் கூட்டணியின் மூலம், அவர்களுடைய ஆய்வுத்துறை பசு மாடு சார்ந்த பொருள்களில் இருந்து விவசாயம், சுற்றுச்சூழல், மனித ஆரோக்கியம் ஆகியவற்றுக்கான தீர்வைக் கண்டறிவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

அதற்காகத்தான் ஐந்து காப்புரிமைகளை பசுவின் சிறுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள்களுக்காக வாங்கி வைத்துள்ளனர். புற்றுநோய், ஊட்டச்சத்து மருந்துகள் ஆகியவற்றில் உயிரியல் மேம்படுத்துதலுக்குப் பயன்படுத்துவதற்காக அந்தக் காப்புரிமை, அமெரிக்காவில் 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு மருந்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஏஜென்டாக பசு சிறுநீரிலுள்ள சில வேதிமப் பொருள்கள் செயல்படுவதாகக் கூறி இது வாங்கப்பட்டுள்ளது. நேரடியாக இது புற்றுநோய்க்கு மருந்தாகவோ, வேறு ஏதேனும் நோய்க்கு மருந்தாகவோ செயல்படும் என்று அதில் குறிப்பிடப்படவில்லை. அதாவது, நவீனகால புற்றுநோய் மருந்துகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு உதவும் ஓர் உபபொருளாக அமையக்கூடும் என்பதுதான் அவர்களின் வாதம்.

அதேநேரம், அமெரிக்காவில் வாங்கிய ஐந்து உரிமங்களும் சீனாவில் வாங்கிய ஓர் உரிமமும் கோ-விஞ்ஞான் கேந்த்ரா பெயரில் வாங்கப்படவில்லை. அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு நிறுவனத்தின் (Centre for Science and Industrial Research, CSIR) பெயரில்தான் வாங்கப்பட்டுள்ளன. கோ-விஞ்ஞான் கேந்த்ராவோடு இருக்கும் இந்தக் கூட்டுப் பங்காண்மைக்குக் காரணமாக இருந்தவர், 1995-ம் ஆண்டு முதல் சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பின் தலைமையில் இருந்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான ஆர்.ஏ.மஷெல்கார் (இவருக்கு கோ-விஞ்ஞான் கேந்த்ராவோடு நெருக்கமான தொடர்பு உண்டு என்று 2017-ம் ஆண்டு டவுன் டு எர்த் என்ற சுற்றுச்சூழல் இதழில் இதுகுறித்து எழுதிய மூத்த பத்திரிகையாளர் லதா ஜிஷ்ணு குறிப்பிடுகிறார்).

மாடுகள்
மாடுகள்

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகுதான் இதற்கான ஆராய்ச்சிகள் வேகமெடுத்தன. கேந்த்ராவோடு இணைந்து சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பு பசு மாட்டுச் சிறுநீர் குறித்த ஆய்வுகளை அமைதியாக மேற்கொள்ளத் தொடங்கியது. 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஞ்சகவ்யா ஆயுர்வேத மருந்துகளின் வழியே சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுவது குறித்து கேந்த்ரா மேலும் ஆய்வு செய்யத் தொடங்கியது.

பசு மாடுகளிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவற்றின் கூட்டுதான் பஞ்சகவ்யா. இது இந்து ஆலயங்கள் பலவற்றிலும் முக்கியமானதொரு பிரசாதமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல வளர்ச்சியூக்கியாக இயற்கை விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதை மனிதர்களுக்கான மருந்தாகப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுக்காக, 2004-ம் ஆண்டிலேயே சுமார் 5,00,000 டாலர்கள் நன்கொடை சேகரிக்கப்பட்டது. இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய நிதி முதலீட்டோடு நடந்துகொண்டிருக்கிறது. டெல்லி ஐ.ஐ.டி உட்பட பல நிறுவனங்கள் இந்த ஆய்வில் இணைந்திருக்கின்றன.

அதெல்லாம் சரி, இவர்கள் இந்தக் காப்புரிமையை அமெரிக்காவிலும் சீனாவிலும் வாங்கியதுபோல், ஏன் இந்தியாவில் வாங்கவில்லை?

அமெரிக்காவில் காப்புரிமைக்கான விதிமுறைகள் மிக மிக எளிதாக இருக்கின்றன. பெரிதாக ஆராய்ச்சிகள் நடத்தி, அதன் முடிவுகளைச் சமர்ப்பிக்காமலேகூட காப்புரிமை பெற்றுவிட முடியும். ஓர் உதாரணத்தோடு சொன்னால்... சிறுவயதில் நாம் ஊஞ்சலாடும்போது பல கோணங்களில் ஆடுவோம். அதில், பக்கவாட்டில் ஊஞ்சல் ஆடும் முறைக்கு ஒருவர் காப்புரிமை வாங்கி வைத்திருந்தார். பின்னர், இது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி 2003-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை அடுத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் காப்புரிமை பெறுவது எளிதல்ல. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பதைவிடவும் இந்தியாவில் காப்புரிமை வாங்குவதற்கான விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருக்கின்றன. காப்புரிமைக்காக முன்வைக்கப்படும் கண்டுபிடிப்பானது முழுமையாகச் சாத்தியப்படக் கூடியதாகவும் மக்களிடையே பயன்படக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பெரியளவில் உற்பத்தி செய்து, பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட விதிமுறைகள் இங்கே இருக்கின்றன.

சரி இதெல்லாம், இருக்கட்டும். உண்மையாகவே, இந்தக் காப்புரிமையில் கூறியிருப்பது போல, பசு மாட்டுச் சிறுநீருக்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா?

கோவிஜ்யன் அனுசாந்தன் கேந்த்ராவில் உள்ள மாடுகள்
கோவிஜ்யன் அனுசாந்தன் கேந்த்ராவில் உள்ள மாடுகள்

இந்தக் கேள்வி, இன்று வரை விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. பசு மாட்டின் சாணம், சிறுநீர் போன்றவை கிருமி நாசினிகளாகச் செயல்படுவதால் நம் வீடுகளில் சுத்தம் செய்வதற்கு, வாசல் தெளிப்பதற்கு என்று பயன்படுத்தும் பழக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இங்கே வழக்கத்தில் இருக்கிறது. சில அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் நிரூபிக்கவும் பட்டிருக்கிறது. ஆனால், பசுவின் சிறுநீரை மருந்து தயாரிப்பில் பயன்படுத்தும் அளவுக்கு மருத்துவ குணம் கொண்டதா என்கிற கோணத்திலான ஆய்வுகள் இதுவரை முழுமையடையவில்லை.

பசு மாட்டின் சிறுநீர் மருத்துவ குணம் கொண்டதுதானா என்பது குறித்து, அத்தகைய மருத்துவத்தை தமிழகத்தில் மேற்கொண்டு வருபவரும், மருத்துவரும், பஞ்சகவ்யா ஆயுர்வேத மருத்துவருமான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் எம்.பி.பி.எஸ்ஸிடம் பேசினோம்.

``கோ-விஞ்ஞான் கேந்த்ரா அமைப்பு பசுவின் சிறுநீரில் இருக்கும் மருத்துவ குணம் பற்றிய நிறைய ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே ஆயுர்வேதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள்" என்றவரிடம், நவீன அறிவியல் உலகில் இந்த மருத்துவ குணங்களை ஆய்வுக்கு உட்படுத்தி நிரூபித்துளார்களா என்று கேட்டோம்.

அதற்கு, ``அந்தக் காலத்து சாஸ்திரங்களிலேயே இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றையும் ஆய்வுக்கூடத்தில் வைத்து பரிசோதித்துக் கொண்டிருக்க முடியாது. என்னுடைய அனுபவத்தில் பலருக்கும் மருந்தாக பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி வருகிறேன். பலருக்கும் பயன் கிடைக்கிறது. 20 ஆண்டுகளாக இந்த வைத்தியத்தை நான் கையில் எடுத்து செய்துவருகிறேன். கேன்சர்(!), தைராய்டு போன்ற பிரச்னைகளுக்கும் இது பலனளிக்கிறது" என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் நடராஜன்.

மருத்துவர் நடராஜன்
மருத்துவர் நடராஜன்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோவை கு.ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ``வேப்பிலை போன்ற பல்வேறு மருத்துவ குணமுள்ள தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்துகள், உலகம் முழுக்கப் பயன்பாட்டில் இருக்கின்றன. அதையெல்லாம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், பசு மாட்டின் சிறுநீரில் மருத்துவ குணம் இருந்திருந்தால் விட்டுவைத்திருப்பார்களா! இதை மிகப்பெரிய மருத்துவ மூலதனமாக மாற்றியிருப்பார்களே! ஆகவே, அடிப்படையில் இது உண்மையில்லை. இங்கு பசு ஒரு தெய்வமாக மதிக்கப்படுவதால், அதிலிருந்து கிடைக்கக்கூடியவையும் புனிதம் என்று உருவாக்கி வைத்துள்ளார்கள்" என்றார்.

மக்களின் பண்பாட்டு, வாழ்வியல் அடிப்படையில் மாட்டுச் சாணம், சிறுநீர் போன்றவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறதே, அவை கிருமி நாசினியாகச் செயல்படுவதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவே என்று கேட்டபோது,

``மாடுகள் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களின் கழிவுகளுமே உரம்தான். அவற்றில் இருக்கும் நன்மைகளைப் பிரித்தெடுத்துப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதுவே மனிதர்களுக்குப் போதுமானது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊர்ப்புறங்களில் மாட்டுச் சாணத்தை மண் தரையாக இருந்தபோது பயன்படுத்தினார்கள். இப்போதுள்ள மொசைக், மார்பிள் தரைகளில் பயன்படுத்துவார்களா!" என்று கேட்டார் ராமகிருஷ்ணன்.

பொதுவாகவே, இந்தக் காலத்தில் எதுவுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால் மட்டுமே, அதற்குரிய மரியாதை கிடைக்கிறது. அந்த வகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்தாலும் மருத்துவ குணம் மிக்கது என்று வரும்போது, அதிலும் மனிதர்களுக்கும் பயன்படுத்தலாம் என்று வருகிறபோது உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளின்படி மட்டுமல்லாது, மனித உரிமை என்கிற அடிப்படையிலும் பசு மாட்டுச் சிறுநீர் மற்றும் சாணம் ஆகியவை ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். அதேபோல, இன்னும் சில பல கேள்விகளுக்கும் விடை கண்டுபிடித்தாக வேண்டும்.

ஒருவேளை பசு மாட்டின் கழிவுகளுக்கு மருத்துவ குணங்கள் உள்ளதென்றால், எருமை மற்றும் காளை மாட்டின் கழிவுகளுக்கும் மருத்துவ குணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா? அல்லது வேறு பாலூட்டி உயிரினங்கள் ஏதேனும் ஒன்றில் இதுபோன்ற ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறதா?

அத்தகைய ஆய்வுகள் நடத்தப்படவில்லை எனில், அந்தக் கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுமா? அப்படி நடத்தப்பட்டு, அவற்றிடமும் இதேபோல் மருத்துவ குணங்கள் இருந்தால், அவையும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படுமா?

மருத்துவ குணங்கள் கொண்டதா மாட்டுக் கோமியம்... அமெரிக்கா பேடன்ட் வாங்கியது உண்மையா?

ஒப்பிடுவதற்காகக்கூட வேறு உயிரினங்களிடையே ஆய்வுகளைச் செய்யாமல், பசு மாடுகளை மட்டுமே ஆய்வு செய்துவிட்டு (அதுவும் முழுமையாகச் செய்து முடிக்கப்படாமல்), அவற்றிடம் மட்டும்தான் மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று போற்ற ஆரம்பிப்பது அறிவியல்பூர்வமானதாக இருக்க முடியுமா?

இதுபோல இன்னும் எண்ணற்ற கேள்விகள் இங்கே நிறைந்திருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடித் தர வேண்டிய பொறுப்பு கோ-விஞ்ஞான் அமைப்பைவிட மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குத்தான் அதிகம் இருக்கிறது.

அந்தப் பதில்கள் எப்படியிருந்தாலும், அதாவது எந்த ஓர் உயிரினத்தின் கழிவுக்கு மருத்துவ குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பூமியில் ஜனித்திருக்கும் புல், பூண்டு தொடங்கி அனைத்து ஜீவராசிகளுமே போற்றுதலுக்குரியவைதான் என்பதை உணர வேண்டும். ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்துதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. எனவே, ``குலத் தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாவம்" என்பதை அறிந்து தெளிய வேண்டும்.

`பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா!

வாலைக் குழைத்துவரும் நாய்தான் அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, -நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு,

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!'

- நன்றி: பாரதியார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு