இயற்கையைப் பாதுகாக்கும் விதமாக இங்கு அமைக்கப்பட்டுள்ள கான் யிஹோ (Can Gio Mangrove Biosphere Reserve) சதுப்புநிலப் பகுதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த சதுப்புநிலப் பகுதியானது 2000-ம் ஆண்டில்தான் முதன்முதலில் அதிகாரபூர்வப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு உட்படுத்தப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டது. அப்போதிலிருந்து இதை உள்ளூர் மேலாண்மை வாரியம்தான் நிர்வகித்து வருகின்றது.

இந்த சதுப்பு நிலப் பகுதியின் மொத்தப் பரப்பளவு 75,740 ஹெக்டேர். இதுதான் இப்போது வரை உலகிலேய மிகப்பெரிய மீட்டெடுக்கப்பட்ட சதுப்புநில மறுவாழ்வுப் பகுதியாகும். இது கடுமையான புயலிலிருந்தும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாடுகளிலிருந்தும் நகரத்தைப் பாதுகாக்கிறது. இவ்வாறு நகரத்தைப் பாதுகாக்கும் இந்த சதுப்பு நிலப் பகுதியில்தான் வசிப்பிடங்களும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான கட்டமைப்புகளும் வரவுள்ளது. இதை வின்க்ரூப்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதோடு கான் யிஹோ டூரிஸ்ட் சிட்டியில் 2,870 ஹெக்டேரில் சுற்றுலாத்துறை வளர்ச்சியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதை உருவாக்க தெற்கு சீன கடற்கரை பகுதிகளில் உள்ள மணலை அந்நிறுவனம் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவின்க்ரூப்ஸ் நிறுவனத்தின் இந்தத் திட்டமானது 2031-ல் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2,30,000 மக்கள் புதிதாகக் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருடத்திற்கு 9 பில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை ஹோ சி மின் நகரத்தின் மிகப்பெரிய மாவட்டமான கான் யிஹோவில் 70,000 மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் இயற்கை வளங்களை அழிக்கக்கூடும் என்பதால் இதற்கான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
கடந்த ஜூலை 23-ம் தேதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வியட்நாமின் பிரதமருக்கும் தேசிய சட்டமன்றத்திற்கும் மற்றும் இதர அரசு அமைப்புகளுக்கும் மனு அளித்துள்ளனர். இதில் திட்டம் பற்றிய தனித்துவம் வாய்ந்த முழுமையான மதிப்பீடு வேண்டுமென்று முறையிட்டுள்ளனர். ஆனால், வின்க்ரூப் நிறுவனத்தைப் பொதுவெளியில் விமர்சிப்பது என்பது அசாதாரணமான ஒன்றே. ஏனெனில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில், அவர்கள் எப்போதும் கடுமையான எதிர்வினையையே ஆற்றக்கூடியவர்கள் என்று அந்நாட்டுச் சமூக மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில், ``இந்தத் திட்டம், கான் யிஹோ சதுப்புநிலக் காடுகளுக்குத் தீமை அளிக்கக் கூடியது என்றும், ஏற்கெனவே இங்குள்ள மக்கள் சுற்றுச்சூழல் மாசுபாடு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவை சந்தித்து வருகின்றனர்" என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் வியட்நாமிஸ் என இரு மொழிகளிலும் உள்ள இந்த மனுவானது இணையத்திலும் இடம்பெற்றுள்ளது. இதுவரை 5,900 மக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு 138 மில்லியன் க்யூபிக் மீட்டர் மணல் தேவைப்படும் என நிக்கி ஏசியா ரெவ்யூ அமைப்பு தெரிவித்துள்ளது.
``இதற்குத் தேவையான மணலானது அருகில் உள்ள மேகாங்க் டெல்டாவிலிருந்து எடுக்கப்படும் எனச் சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. மேகாங்க் டெல்டா பகுதியில் மணல் சுரங்கங்களால் ஏற்கெனவே வீழ்ச்சியானது ஏற்பட்டு வருகிறது. இதில் புதிதாக இந்தத் திட்டத்திற்காகவும் மணல் எடுக்கப்பட்டால் டெல்டாவானது மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும்" எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இங்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எப்போதுமே கடுமையான முறையில், அடக்குமுறையுடனேயே நடத்தப்படுகின்றனர். 2017-ல் கூட சுற்றுச்சூழல் வலைதளம் வைத்திருந்த, `மதர் மஸ்ரூம்' என்பவர் தேசத்திற்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டதாகக் கூறி பத்தாண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது அவர் விடுவிக்கப்பட்டு ஹூஸ்டனிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இப்போதுகூட இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் காவலர்களின் துன்புறுத்தலுக்கு அவர் உள்ளானதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கான் யிஹோ நகரத்தில் சுற்றுலா என்பது பெரியளவில் வளர்ச்சி அடையவில்லை. அங்கு படகு மூலமே செல்ல முடியும் என்பதால் சுற்றுலாத்துறை அவ்வளவு வளர்ச்சியடையவில்லை. அதைச் சரி செய்யும் விதமாக, இப்போது ஹோசி மின் நகரத்தை மற்ற மாவட்டங்களோடு இணைப்பதற்கான மேம்பாலம் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் 2022-ல் தொடங்கவுள்ளன. மேலும் கான் யிஹோ சுற்றுலா நகரத்திற்கான திட்டங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. அதே சமயம் திட்டம் பற்றிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இதில் பெரும் நிலப்பரப்பும் செயற்கை ஏரியும் கான் யிஹோவின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளன. அங்குதான் இந்த மாவட்டம் கிழக்குக் கடலைச் சந்திக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இதனால் முக்கிய சதுப்புநில வனப்பகுதியில் எந்தக் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாது என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் திட்டம் பற்றி ப்ரிஹிமிங்காம் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மேரி அர்னாட் மங்காபே இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ``சதுப்புநிலங்கள் நீரியல் (hydrology) மாற்றத்திற்கும் வண்டல் படிவங்களுக்கும் அதிக உணர்ச்சித் திறன் மிக்கவை. உதாரணத்திற்கு வண்டல் படிமங்கள் விநியோகிப்பதை நிறுத்தினால், சதுப்புநிலப் பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டுவிடும். வின்க்ரூப்ஸின் வளர்ச்சித் திட்டம் சதுப்புநிலப் பகுதிகளின் கீழ்நிலையிலிருந்து தொடங்கலாம். ஆனால், இதற்கான மணல் எங்கிருந்து பெறப்படும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள நிலத்தைப் பயன்படுத்துவது நிச்சயம் சதுப்புநிலங்களைப் பாதிக்கும்.

ஒருவேளை வெளியிலிருந்து தேவையான பொருள்களைக் கொண்டுவரலாம் என்றாலும், அதிக விலையாகும் என்று அதைச் செய்ய மாட்டார்கள். இப்போது வரவுள்ள திட்டத்தால் மீன்வளமும் கடல்வாழ் உயிரினங்களும் பாதிப்படையும். மேலும், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பட்சத்தில் நெகிழி பொருள்களின் மாசுபாடும் கழிவுநீர் வெளியேற்றமும் அதிகரிக்கக்கூடும். பருவ நிலை மாற்றத்தால் புயல்களும் அதிகளவில் வரக்கூடும். இதோடு கடல் மட்டமும் உயரக்கூடும். இத்தகைய எல்லாப் பேரிடர்களையும் இந்தச் சுற்றுலாத்தலம் சந்திக்க நேரிடும். இதனால் இது ஆபத்து நிறைந்த திட்டம்தான்" என்றார்.
அலையாத்திக் காடுகள், கடலின் அலையைக் கட்டுப்படுத்தி சுனாமி போன்ற ஆபத்துகளிலிருந்து காத்து வருகின்றன. மேலும், பஞ்சு எப்படி தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளுமோ, அதேபோலத்தான் அலையாத்திக் காடுகளும் நீரை உறிஞ்சி நிலத்தில் சேமித்து வைத்திருக்கும். அவை, நீராதாரத்திற்கு மிக முக்கியமானவை. அதோடு பல்லுயிரிய வளம் நிறைந்தவை. அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அரசுகள் உணராதவரை, இதுபோன்ற இயற்கை வள இழப்புகள் பூமியில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.