Published:Updated:

அழிந்துவரும் வான்வெளியின் மருத்துவர்கள்... பாறு கழுகுகளின் அழிவு சொல்லும் செய்தி என்ன?

பாறு கழுகுகள் வாழக்கூட தகுதியற்றதாகவும் அவற்றை அழித்தொழிக்கும் வகையிலும் இச்சமூகத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

vulture
vulture

நாம சர்வைவல் ஆனா போதும்னு எல்லாரும் இந்த உலகத்துல பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கோம். ஆனா, நம்மளோட சர்வைவலுக்காக இன்னோர் உயிரை, தடம் தெரியாம அழிச்சிட்டுப் போறோமுன்னு என்னைக்காவது நின்னு யோச்சிச்சுப் பார்த்திருக்கிறோமா!... சங்க கால இலக்கியம் தொட்டுத் தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாக இருந்தவை ‘ பிணந்தின்னிக்கழுகுகள்' என்று அழைப்படும் `பாறு கழுகுகள்'.

vulture
vulture
Sathyaprakash

30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டித்தொட்டியெங்கும் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைத்த இந்தக் கழுகுகளை, இப்போது காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. இந்தப் பாறு கழுகுகள் இன்றைக்கு முற்றாக அழிந்துபோகும் வகையில், அழிவின் விழிம்பில் இருக்கின்றன. இயற்கையின் எல்லாக் காரணிகளையும் அழித்தொழித்த மனிதர்தான் இதற்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்கள்.

மருத்துவப் பறவை `பாறு கழுகு'

பாறு கழுகுகள் இறந்த விலங்குகளை மட்டுமே உண்டு வாழ்பவை. கழுகு மற்றும் பருந்துகளைப்போல இவை, ஒருபோதும் வேட்டையாடி உண்பவை அல்ல. வானில் விசாலமாக வட்டமிடுவதற்காகவே இவை உயரமான மரங்கள் மற்றும் பாறைகளில் கூடுகட்டி வாழும். நுண்ணோக்கியைப்போல கூர்மையான பார்வைத்திறன் பெற்றிருக்கும் இக்கழுகுகள் 6 கி.மீ தூரத்திலுள்ள இரையைக்கூட ஈஸியாகக் கண்டுபிடித்துவிடுமாம். இறந்த விலங்குகளைத் தின்று, செலவில்லாமல் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்துவரும் தூய்மைக்காவலன்தான் இந்தப் பாறு கழுகுகள்.

vulture
vulture
Vibhu Prakash

இவை இறந்த விலங்குகளிலிருந்து பரவும் தொற்றுநோய்கள் மக்களிடம் பரவாமல் கட்டுப்படுத்தி, ஒரு மருத்துவரின் வேலையைச் செய்கின்றன. அதிலும் குறிப்பாக, வனப்பகுதிகளில் இந்தப் பாறு கழுகுகளின் பங்கு அளப்பரியது. உதாரணத்துக்குக் காட்டில் நீர்நிலைக்கு அருகில் ஒரு விலங்கு இறக்க நேர்ந்தால், அதிலிருந்து நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் அந்த நீர் நிலைகளில் கலந்துவிடும். பிறகு, அதில் தாகம் தணிக்க வரும் மான்களுக்கோ யானைகளுக்கோ அந்த நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை இந்தப் பாறு கழுகுகள்தான் தடுக்கின்றன. இப்படிப் பல நோய்ப் பரவல்களை இந்தப் பாறு கழுகுகள் தடுக்கின்றன. ஆனால், இன்றைக்கு இவை முற்றிலும் அழிந்துபோகும் சூழ்நிலையில் இருக்கின்றன.

அழிவின் விழிம்பில் பாறு கழுகுகள்:

உலகளவில் இந்தப் பாறு கழுகுகளில் 23 வகைகள் இருக்கின்றன. அதில் இந்திய அளவில் 9 வகைகள் உள்ளன. அதில், தமிழகத்தில் வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப் பாறு, மஞ்சள்முகப் பாறு, செந்தலைப் பாறு என 4 வகைகள் வாழ்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பல லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்த இந்தப் பாறு கழுகுகள், இன்றைக்கு வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுவும் தமிழ்நாடு முழுக்க இருந்த இந்தக் கழுகுகள், இன்றைக்கு முதுமலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் மட்டும்தான் இருக்கின்றன. உயிரின வரலாற்றில் எந்த ஒரு விலங்கும் குறுகிய காலத்தில் இப்படி ஒரு பேரழிவைச் சந்தித்ததில்லை என ஆய்வாளர்கள் அதிர்ந்துபோய்க் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு அழிவின் விளிம்பில் இந்தக் கழுகுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

பாறு கழுகுகளின் அழிவு நமக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை மணி. இன்று நான், நாளை நீ என்கின்ற எச்சரிக்கை மணி இது.

அழிவுக்கான காரணங்கள்:

ஒட்டுமொத்தமாக இந்தப் பாறு கழுகுகளின் எண்ணிக்கை குறைந்துபோகக் காரணம் தெரியாமல் பறவையின ஆர்வலர்கள் ஆரம்பத்தில் குழம்பிப் போயினர். ஒருகட்டத்தில் இறந்துபோன கழுகுகளை எடுத்து ஆய்வு செய்ததில் அதன் சிறுநீரகங்கள் செயலிழந்து போனது தெரிந்திருக்கிறது. கால்நடைகளுக்கு மடிவீக்கம், சுளுக்கு போன்ற நோய்களுக்கு `டைக்ளோஃபீனாக்’ என்னும் மருந்து கொடுக்கப்பட்டது. அந்த மருந்தை உட்கொண்ட கால்நடைகளை, இந்தக் கழுகுகள் உண்டதும் தெரிந்தது. கூட்டமாகவே இரையைச் சாப்பிடும் இந்தக் கழுகுகள், கால்நடைகளின் உடலிலிருந்த அந்த மருந்தின் வீரியத்தால் காலப்போக்கில் செத்து மடிந்திருக்கின்றன.

Vikatan

இதுதெரிந்து, 2006-ம் ஆண்டே கால்நடைகளுக்கான டைக்குளோஃபீனாக் மருந்தை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. ஆனால், மனிதர்களுக்கு விற்கப்படும் இந்த மருந்து குறைவான விலை என்பதால் வாங்கி ஒருசிலர் தொடர்ந்து கால்நடைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். அதுதான் இன்றைக்கு இந்தப் பாறு கழுகுகளின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இதுகுறித்துப் பாறு கழுகுகளுக்காகக் கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு மற்றும் களப்பணி செய்துவரும் அருளகம் அமைப்பின் செயலாளர் பாரதிதாசன் அவர்களிடம் பேசினோம். ``ஒரு மருந்தை ஆய்வு செய்யும்போது, அது மனிதருக்கோ, விலங்குகளுக்கோ பக்க விளைவுகளை ஏற்படுத்துமா எனப் பார்க்கின்றனர். அதைப்போலவே, மனித உணவுச் சங்கிலியில் உள்ள மற்ற உயிர்களுக்கும் அது பாதிப்பைக் கொடுக்குமா என கவனிக்க வேண்டும்.

Bharathidasan
Bharathidasan
ரமேஷ் கந்தசாமி

தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்ட கால்நடைகளை உண்டதால்தான், பாறு கழுகுகள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்திருக்கின்றன. அதுபோக, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கால்நடைகளை வேட்டையாடும் புலி, சிறுத்தை போன்றவற்றை பலிவாங்கும் நோக்கில் இறந்த கால்நடைகள் மீது ஒருசிலர் விஷத்தைத் தடவுகின்றனர். அதைத் தெரியாமல் சாப்பிடும் கழுகுகளும் இறந்து போகின்றன.

நோயைக் கட்டுப்படுத்தும் வேலையை இயற்கையாகச் செய்யும் இந்தப் பாறு கழுகுகள் இல்லாமல் போவதன் விளைவு இப்போது தெரியாது. நாளைக்கு ஒரு பெரும் கொள்ளை நோய் வேகமாகப் பரவும்போதுதான் இதன் அருமை தெரியும். இவற்றின் இருப்பு பூமிக்கு மிகவும் முக்கியம். இந்தக் கழுகுகள் இல்லாமல் போனால் எலிகள், நாய்களின் எண்ணிக்கை கூடும். அது நாளைக்கு வேறு விதமான சிக்கல்களை உண்டாக்கும். பாறு கழுகுகள் வாழக் கூட தகுதியற்றதாகவும் அவற்றை அழித்தொழிக்கும் வகையிலும் இச்சமூகத்தில் மனிதர்களின் செயல்பாடுகள் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

vulture
vulture

பாறு கழுகுகளின் அழிவு நமக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை மணி. இன்று நான், நாளை நீ என்கின்ற எச்சரிக்கை மணி இது. சூழலைக் கெடுத்தால், அது மனித குலத்துக்குத்தான் சிக்கல். எனவே, தடை செய்யப்பட்ட மருந்துகளைக் கால்நடைகளுக்குக் கொடுப்பதை நிறுத்துவோம். அத்துடன் அரசோடு சேர்ந்து மனிதர்களும் பாறு கழுகுகளைக் காப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்” என்றார்.