Published:Updated:

சிவகாசி: `பதிவேட்டில் பத்திரமாக இருக்கும் ஊருணி நிஜத்தில் எங்கே?!' - குமுறும் சமூக ஆர்வலர்கள்

சிவகாசி - மருதநாடார் ஊருணி

ஊருணி ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டு தற்போது நீர்நிலை இருந்ததற்கான இடமே தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

சிவகாசி: `பதிவேட்டில் பத்திரமாக இருக்கும் ஊருணி நிஜத்தில் எங்கே?!' - குமுறும் சமூக ஆர்வலர்கள்

ஊருணி ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டு தற்போது நீர்நிலை இருந்ததற்கான இடமே தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

Published:Updated:
சிவகாசி - மருதநாடார் ஊருணி

சிவகாசி பேருந்து நிலையம் அருகே பழைய விருதுநகர் ரோட்டில் மருதநாடார் ஊருணி இருந்தது. மாநகரின் வளர்ச்சி காரணமாக இந்த ஊருணி ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டு தற்போது நீர்நிலை இருந்ததற்கான இடமே தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் முறையாகச் செயல்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது குறித்துப் பெயர் கூற விரும்பாத சிவகாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``பழைய விருதுநகர் ரோட்டில் தனியார் திருமண மண்டபத்துக்கு எதிரே 0.316 ஏக்கர் பரப்பில் மருத நாடார் ஊருணி இருந்தது. சிவகாசி மாநகராட்சி D பிளாக் 18-ல் நகர புல எண் 2/1-ன்படியும், சிவகாசி நீர்நிலை வரைபடம் மற்றும் பழைய கிராம சர்வே எண் 630-ல் உள்ள அரசாங்கப் பதிவேடுகளிலும் மருதநாடார் ஊருணி 0.12.79 ஹெக்டேர் பரப்பளவில் இன்னமும் இருப்பதாகக் கணக்கு காண்பிக்கப்படுகிறது. பதிவேடுகளில் பத்திரமாக இருக்கும் ஊருணி, நிஜத்தில் அந்த இடத்தில் இருப்பதற்கான எந்தத் தடயமும் இப்போது இல்லை. ஊருணி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பு
ஆக்கிரமிப்பு
கடைகள்
கடைகள்

அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன் தற்போது அந்த இடத்தில் ஹோட்டல்கள், மரக்கடைசல் நிலையங்கள், கார் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. ஆக்கிரமிப்பில் கடை நடத்துவதற்காக லஞ்சமும் பெறப்பட்டுவருகிறது. மருதநாடார் ஊருணி இருந்த காலத்தில் அந்த நீர்நிலைதான் அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் குடியிருப்புகளுக்கு நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர்மட்ட வளமைக்கு முக்கியக் காரணியாகவும் திகழ்ந்தது. இந்த நிலையில், இன்று அந்த ஊருணி இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிடுகையில், அந்த இடம் பட்டா நிலமாக இருப்பதாகக் கூறுகின்றனர். நீர்நிலைகள் மீட்டெடுப்பது குறித்தான வழக்கொன்றில், நீர்நிலையாக இருந்த இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டிருந்தாலும் அவை செல்லாது என உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கூறியிருக்கிறது. இது தவிர, நீரின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து நீர்நிலை வழிகள், ஆக்கிரமிப்புக்குள்ளான நீர்நிலைகளை சமீபகாலமாக தமிழக அரசும் மீட்டெடுத்து வருகிறது. அதன்படி பார்த்தால், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருக்கும் மருதநாடார் ஊருணியையும் மீட்டு இயற்கை வளங்களைப் பாதுகாக்க அரசு ஆவன செய்ய வேண்டும்" என்றார்.

பழைய சர்வே படம்
பழைய சர்வே படம்
ஊருணியின் ஒருபகுதி
ஊருணியின் ஒருபகுதி

நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டதற்கு, ``மருதநாடார் ஊருணி ஆக்கிரமிப்பு குறித்து வழக்கு இருக்கிறது. இந்தப் பிரச்னை மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியரின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் கோயில் இருப்பதால் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் சிக்கல் இருக்கிறது. கோயில் பெயரிலேயே பட்டா இருப்பதாகக் கூறுகின்றனர். அதனால், சிரமம் ஏற்பட்டிருக்கிறது" என்றார்.

புதிய சர்வே படம்
புதிய சர்வே படம்

மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் பேசுகையில், "பொறுப்புக்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு கண்டுவருகிறோம். அதுபோல், மருதநாடார் ஊருணி ஆக்கிரமிப்பு விஷயத்திலும் தீர்வுகாண நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.